மிக்கபெருங் காதலுடன் றொண்டர் சூழ மென்புனனாட் டினையகன்று வெற்புங் கானுந் தொக்கபெரு வன்புலக்கா னடைந்து போகிச் சூலகபா லக்கரத்துச் சுடரு மேனி முக்கண்முதற் றலைவனிட மாகி யுள்ள முகினெருங்கு காரிகரை முன்னர்ச் சென்று புக்கிறைஞ்சிப் போற்றிசைத்தப் பதியில் வைகிப் பூதியரோ டுடன்மகிழ்ந்தார் புகலி வேந்தர். | 1014 | (இ-ள்) மிக்க பெரும்...அகன்று - மிகுந்த பெரிய விருப்பத்துடன் திருத் தொண்டர்கள் சூழ்ந்துவரச் சென்று மெல்லிதாய்ப் பாயும் நீர்வளமுடைய பாலியாற்றின் வடகரையில் உள்ள அந்நாட்டின் பகுதியை நீங்கி; வெற்புங் கானும்..போகி - மலையும் கானமுமாகச் சேர்ந்து நெருங்கிய பெருகிய வலிய நிலம் பரந்த காட்டிடங்களை அடைந்து சென்று; சூல கபாலக் கரத்து.....சென்று - சூலமும் கபாலமும் கையிலேந்தி ஒளி விளங்கும் திருமேனியினையும் மூன்று கண்களையுமுடைய முழு முதல்வராகிய இறைவரது இடமாகி முகில்சூழ்ந்துள்ள திருக்காரிகரையினை முன்னச் சென்று; புக்கிறைஞ்சி.....வேந்தர் - திருக்கோயிலுள்ளே புகுந்து இறைவரை வணங்கித் துதித்து அந்தப் பதியில் தங்கித் திருநீற்றுத் தொண்டர்களுடன் கூடி மகிழ்ந்திருந்தனர் சீகாழித் தலைவராகிய பிள்ளையார். (வி-ரை) காதலுடன்...வன்புரலக் கான் அடைந்து போகி - வன்மையுடைய புலமுள்ள வெற்பும் கானமுமாயுள்ள நிலத்திற் செல்வதற்கு காதல் காரணமாயிற்று என்பது. "பிணையுங் கலையும் வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால், அணையு முரம்பு நிரம்பிய வத்தமு மையமெய்யே, யிணையு மளவுமில் லாவிறை யோனுறை தில்லைத்தண்பூம், பணையுந் தடமுமன் றேநின்னொ டேகினெம் பைந்தொடிக்கே"(திருக்கோ - 202 = ஆதரங்கூறல்) என்ற திருக்கோவையார்க் கருத்து ஈண்டு நினைவு கூர்தற்பாலது. மென்புனல் நாட்டினை அகன்று - வன்புலக் கானடைந்து - என்று காட்டிய கருத்துமிது. மென்புனல் நாட்டினை யகன்று - புனல் மெல்லியதாய் ஓடி வளஞ் செய்யும் நாட்டின் பகுதி. நாடு - இங்குத் தொண்டைநாட்டின் ஒரு பகுதி என்ற பொருளில் வந்தது. மென்புனல் - புனல் கடுவேகமாய் ஓடாது இடையறாது மென்மையுடன் ஊறிப் பாயும் என்றதாம்; இது பாலாறு நீர்வளஞ் செய்யுமியல்பு. நிலமேல் நீர்ஓட்டமில்லாது மேல் மணற்பரப்பு நிலத்தின்கீழ் ஊற்றம் ஓடித் தோண்டு கால்களின் வழி இடையறாது ஊற்றமிக்கு வளஞ் செய்யும் தன்மை. இதுபற்றி முன் (1099) உரைத்தவை ஈண்டு நினைவு கூர்தற்பாலன. தொண்டை நாடு குறிஞ்சி முதலிய ஐவகைத்திணைகட்குமுரிய நிலங்களும் உளதாதல் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துள் விரிக்கப்பட்டது கண்டுகொள்க. இவ் வைவகை நிலங்களும் அந்நாட்டின் ஒவ்வோர் பகுதிகளாகி அவ்வத் திணைகளின் தனி நாடுகள்போல விளங்குதலின் இங்கு மென்புனனாட்டினை என்றது மருத நிலங்கொண்ட அந்நாட்டின் பகுதி என்க. இக்கருத்தறியாது மென்புனனாடு காவிரிநாடு என்றே கொண்டு, அஃதீண்டு கொள்ளுதற் கியைபின்மையால் மென்புனனாட்டின் கன்று என்று பாடங்கொண்டு காவிரி நாடு ஈன்ற பிள்ளையார் என உரை கண்டனர் முன் உரைகாரர்; இப்பாட்டில் மேல் புகலி வேந்தர் என்ற எழுவாய் ஈற்றில் வருவதும் நோக்கிற்றிலர். வெற்புங் கானும் தொக்க பெரு வன்புலக் கான் - இது முல்லையுங் குறிஞ்சியும் கலந்து மயங்கிய பகுதி என்பது இங்கு நாட்டின் பகுதியின் அமைப்பை உற்று நோக்குவோர்க்கு இனிது விளங்கும். அனி வெற்புமல்லாது தனிக் கானுமல்லாது இரண்டும் கூடிய கடுங்கானற் பகுதியாகிய நிலத்தின்றன்மை இன்றும் காணப்பெறும்; மருத நிலத்தைக் கடந்த முல்லையுங் குறிஞ்சியு மயங்கிய நிலத்திற் புகுகின்றார் என்பது காண்க. உண்மைச் சரித இயல் கூறும் ஆசிரியரது கவிமாண்பு இங்குக் கண்டு களிக்கற் பாலது; முகினெருங்கு காரிகரை என்ற நாட்டுச் சிறப்பும் உடன் காண்க. சூல கபாலக் கரத்து...காரிகரை - முன்னர்ச் "செல்கதிமுன் னளிப்பவர்தந் திருக்காரிகரை" (1608) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. சூலம் - "மருள் பொழிமும் மலஞ்சிதைக்கும் வடிச்சூலம்" (சிறுத். புரா - 35); கபாலம் - பலிப் பாத்திரம்; இதனை ஏந்துதல் அடியவர்கள் ஆன்மபோதப் பலியை இட அதனை ஏற்று அவர்களைத் தம்மடிபெற அருளுதல் குறித்தது; "இரந்துண்டு தன்னடி யெட்டச் செய்தானே" (திருமூலர் - திருமந்திரம்). "செல்கதிமுன் அளிப்பவர்" என்று முன் கூறியதனை விரித்துக் காட்டியவாறு; "பம்புசடைத் திருமுனிவர் கபாலக்கையர் பலவேடச் சைவர்" (2916) எனக் கூறுதலால் அந்நாட்டின் பகுதியில் இத்தகைய வேடமுடையவர் பலர் தாந்தாங் கண்டவாறு வழிபட நின்ற இறைவர் என்று குறிக்கச் சூலமும் கபாலமும் கொண்ட இத்தன்மையாற் கூறிய குறிப்பும் காண்க. சுடரும் மேனி - "எரிபோன் மேனிப் பிரான்"; "எரியலா லுருவமில்லை"; "பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மேனி" என்பவாகலின் சுடரும் மேனி என்றார். சுடர் - திசைவிளக்கும் ஞானச்சுடர்; "இறைவன்றன் னொளியான ஞான சம்பந்தன்" (தேவா), "அண்டமெலாங் கொண்டதொரு ஞானமணி விளக்கு" (2550). முக்கண் முதற் றலைவன் - சிறப்புடையாளமாகிய மூன்று கண்ணுடைமை சிவபெருமானது முழுமுதற்றன்மை குறிப்பது என்றபடி. "முக்கண னென்பது முத்தி வேள்வியிற், றொக்க தென்னிடை யென்பதோர் கருத்தே" (11-ம் திருமுறை - திருவொற் - ஒருபா - 6) என்பது பட்டினத்து அடிகளார் திருவாக்கு. முதற்றலைவன் - முதலாகிய தலைவன்; அண்டத் தலைவர் என்போ ரெல்லாருக்கும் முதல்வன் என்றலுமாம். திருக்காரிகரை - தலவிசேடம் III - பக்கம் 580 பார்க்க பூதியர் - திருநீற்றுத் தொண்டர் கூட்டம். பூதி - அனுபூதி; "சிவானுபவம் சுவானுபூதிகமாம்" என்ற சிவானந்தானுபவத்தில் எப்போதும் திளைக்கின்றவர்கள் என்றலுமாம். முன் கூறியவாறு பலதிறப்பட்ட அடியர் கூட்டமும் கொள்ள இவ்வாறு பூதியர் என்ற பொதுவிலக்கணக்கணத்தாற் கூறினார். பூதியர் என்றது பிள்ளையாருடன் வந்தார்களும் அப்பதிலிருந்தார்களுமாகிய பலதிறத்து அடியவர்கள்; "அறுவகை விளங்குஞ் சைவத் தளவிலா விரதஞ் சாரு, நெறிவழி நின்ற வேட நீடிய தவத்தினாரும்" (3101) பிள்ளையாரது திருமண எழுச்சியினுடன் கூடிச் சென்று திருப்பெருமணத்திற் பெருகிய சிவச் சோதியுட் கலந்தனர் (3150) என்பதறியப்படும். இதுவும் கயிலைச் சார்பாதலின் அவரெல்லாம் குழுமிக் காணவுள்ளார் என்பதும் குறிப்பு. |
|
|