மாதவர்க னெருங்குகுழாம் பரந்து செல்ல மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின் றாகப் பூதிநிறை கடலணைவ தென்னச் சண்பைப் புரவலனா ரெழுந்தருளும் பொழுது சின்னத் தீதிலொலி பலமுறையும் பொங்கி யெங்குந் "திருஞான சம்பந்தன் வந்தா" னென்னும் நாதநிறை செவியனவாய் மாக்க ளெல்லாம் நலமருவு நினைவொன்றார் மருங்கு நண்ண; | 1016 | (இ-ள்) மாதவர்கள்....செல்ல - திருத்தொண்டர்கள் நெருங்கும் கூட்டம் பரவிச் செல்ல; மணிமுத்தின்...வரம்பின்றாக - அழகிய முத்துச் சின்னங்கள் இசைக்கும் ஓசை எல்லையில்லாமல் எழ; பூதிநிறை....பொழுது - திருநீறு நிறைந்த கடல் அணைவதுபோலச் சீகாழித் தலைவனார் எழுந்தருளி வரும்போது; சின்னத் தீதிலொலி....செவியினவாய் - திருச் சின்னங்களின் குற்றமில் ஒலியானது பல முறை யாலும் மேன்மேல் அதிகரித்து எங்கும் "திருஞான சம்பந்தன் வந்தான்" என்று எழும் நாதம் நிறைந்த காதுகளை உடையனவாயினமையால்; மாக்களெல்லாம்...நண்ண - ஐயறிவுடைய விலங்குச் சாதிக ளெல்லாம் (தம்மியல்பாகிய தீமையின்றி) நன்மை பொருந்தும் நினைவு ஒன்றனையே கொண்டு பக்கங்களில் வந்து பொருந்த; (வி-ரை) மாதவர்கள் - "பூதியர்" என்றவிடத் துரைத்தவை பார்க்க தவம் - சிவவேடம் - சிவபூசை - சிவனினைவு முதலியனவேயாம். மணிமுத்தின் பரிச்சின்னம் - முத்துச் சின்னங்கள். பரிச்சின்னம் - இறைவர் - பெரியோர் - அரசர் முதலிய தலைவர்க்குரிய சின்னங்கள்; ஈண்டு அவற்றின் தொகுதியாகி யெழுந்த ஓசை குறித்தது. பூதி நிறை கடல் - "திரண்டுவருந் திருநீற்றுத் தொண்டர்குழா மிருதிறமுஞ் சேர்ந்த போதி, லிரண்டுநில வின்கடல்க ளொன்றாகி யணைந்தனபோல்" (1498) என்ற கருத்துக் காண்க. இங்குத் திருநீற்றுக் கடல் என்றார், பரப்பம் ஓசையும்பற்றி; "நீற்றொளி யானிறை தூய்மையாற், புரந்த வைந்தெழுத் தோசை பொலிதலாற், பரந்த வாயிரம் பாற்கடல் போன்றது"(138) என்று இதன் உவமவுள்ளுறை முன்னர் விரிக்கப்பட்டது. தீதில் ஒலி - பிள்ளையாரது திருநாம மந்திர முழுக்கம் தீமையை யில்லையாகச் செய்யும் தன்மைபற்றித் தீதில் என்றார். "நாமமந் திரமுஞ் சொல்ல, வானபோ தயர்வு தன்னை யகன்றிட"(2619) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. "திருஞான சம்பந்தன் வந்தான்" என்று - இது சின்னங்கள் இயம்பும் மரபு. 2219 - 2120 - 2121 - 2551 முதலிய பாட்டுக்கள் பார்க்க. நாதநிறை செவியினவாய் - செவியினவாய் - செவியினவாதலின் என்று வினையெச்சம் காரணப் பொருளில் வந்தது. மாக்கள் எல்லாம் - மாக்கள் - "ஐயறிவினவே மாக்க ளென்ப", "மாவு மாக்களு மையறி வினவே" (தொல் - பொ - மரபியல் - 32); எல்லாம் - மயிலும் பாம்பும், மானும் புலியும், ஒன்றற்கொன்று பகைமையாயுள்ளனவும், மக்களைக் கொண்டு தின்னும் புலி முதலியவையும் அடங்க எல்லாம் என்றார். நலமருவு நினைவு ஒன்றாய் - பிள்ளையாரது திருநாம ஒலியாகிய நன்மை மலியும் நாதம் ஒன்றே, அவ்வாறு வேறுபடும் எல்லாவகை மாக்களுள்ளும் செவிமூலம் நிறைதலினால், தம் இயல்பாயுள்ள பகைமை நீங்கி இந்த நலமே மிகுந்ததனால் அந்நினைவு ஒன்றே கொண்டன. இவ்விளைவின் தத்துவம்பற்றி ஆனாய நாயனார் புராணத்துள் விரிக்கப்பட்டது; கடைப்பிடிக்க. "நலிவாரு மெலிவாரு முணர்வொன்றாய் நயத்தலினால்"(959) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. ஆண்டு அத்தன்மை விளைத்தது சிவனாமமாகிய திருவைந்தெழுத்து; "உள்ளுறையஞ் செழுத்தாக"(954); அது போல ஈண்டு விளைத்தது பிள்ளையாரது நாம மந்திரமே என்பதும் கருதுக.
|
|
|