கானவர்தங் குலமுலகு போற்ற வந்த கண்ணப்பர் திருப்பாதச் செருப்புத் தோய மானவரிச் சிலைவேட்டை யாடுங் கானும், வானமறை நிலைபெரிய மரமுந் தூறும், ஏனையிமை யோர்தாமு மிறைஞ்சி யேத்தி யெய்தவரும் பெருமையவா மெண்ணி வாத தானமுமற் றவைகடந்து திருக்கா ளத்தி சாரவெழுந் தருளினார் சண்பை வேந்தர். | 1017 | (இ-ள்) கானவர்தம்....கானும் - வேடர் குலத்தை உலகம் போற்றும்படி அதனில்வந்த தவதரித்த கண்ணப்ப நாயனாரது திருப்பாதங்களிலணிந்த செருப்புத் தோயும்படி பெரிய வரிவில் வேட்டையாடும் காடுகளும்; வான்பெரிய.....தூறும் - வானத்தை மறைக்கும்படி நீண்ட பெரிய மரச்சோலைகளும் தூறுகளும்; ஏனை....தானமும் - தேவர்களும் வணங்கித் துதிக்க வரும் பெருமையுடையனவாகிய அளவில்லாத ஏனைய தானங்களும்; மற்றவை கடந்து - அவற்றை யெல்லாம் கடந்து சென்று; திருக்காளத்தி...சண்பை வேந்தர் - திருக்காளத்தி மலையினை அணுகச் சீகாழித் தலைவராகிய பிள்ளையார் எழுந்தருளினார். (வி-ரை) கானவர்தம் குலமுலகு போற்ற - "கானவர் குலம் விளங்க" (662); "வேடன்" என்று பிள்ளையார் திருவாக்கினாற் பதிகத்துள்ளும், "வேடனார்" என்று திருவாசகத்துள்ளும், பிறாண்டும் பெரியோர் போற்றும் பெருமை காண்க. உலகு - உயர்ந்தோர். திருப்பாதச் செருப்பு - "செருப்புற்ற சீரடி" (தோணோ - 3) என்று திருவாசகத்திற் போற்றும் அருமைப்பாடு தோன்றக் கூறியபடி. மான வரிச்சிலை வேட்டை - மானம் - பெருமை; வரி - வரிந்து நரம்பு முதலியன கட்டிய; சிலை - வில். இதுபற்றி முன் "தேனலர் கொன்றை யார்தந் திருச் சிலை" (681) என்று கூறிய கருத்துக்கள் இங்கு நினைவு கூர்தற்பாலன. சிலை வேட்டையாடும் கான் - கண்ணப்ப நாயனார் புராணம் 717 - 740 - 791 - 792 - 810 முதலியவை பார்க்க. வான மறை நிலைபெரிய மரமும் தூறும் - "பெரிய தேக்கி னப்புறம் சென்றாற் றோன்றும் குன்று" (743); "நெருப்குபைந் தருக்குலங்க ணீடுகாடு" (722). மரமும் - மரமடர்ந்த இடங்களும்; தூறும் - தூறுகளுள்ள இடங்களும். இமையோர்....பெருமையவாம் எண்ணிலாத தானம் - இவை தேவர்களும் வந்து போற்றும் சிவத்தானங்களும், முனிவர் - ஞானிகளின் ஆச்சிரமங்களுமாம்; 1088 - 1090-ம் பிறவும் பார்க்க. ஏனை தானமும் - என்று கூட்டுக. சார - அருகாக. வான் மறைய - என்பதும் பாடம். |
|
|