திருந்தியவின் னிசைவகுப்புத் திருக்கண் ணப்பர் திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப் பொருந்துபெருந் தவர்கூட்டம் போற்ற வந்து பொன்முகலிக் கரையணைந்து தொழுது போகி, யருந்தவர்க ளெம்மருங்கு மிடைந்து செல்ல வாளுடைய பிள்ளையா ரயன்மா றேடும் மருந்துவெளி யேயிருந்த திருக்கா ளத்தி மலையடிவா ரஞ்சார வந்து தாழ்ந்தார்.
| 1021 | (இ-ள்) திருந்திய...பாடி - திருந்திய இனிய பண்ணமைதியின் வகுப்பினாலே திருக்கண்ணப்ப தேவரது திருத்தொண்டினைச் சிறப்பித்து விளங்கும்படி பாடியருளி; பொருந்தும்..போகி - பொருந்திய பெரிய திருத்தொண்டர் கூட்டம் சூழ்ந்து துதிக்க எழுந்தருளி வந்து பொன்முகலியாற்றின் கரையினை அணைந்து தொழுது போய்: அருந்தவர்கள்...செல்ல - அருந்தவர்களாகிய திருத்தொண்டர்கள் எல்லாப் பக்கமும் நெருங்கிச் செல்ல; ஆளுடைய பிள்ளையார்...தாழ்ந்தார் - ஆளுடைய பிள்ளையார் பிரம விட்டுணுக்கள் தேடிக் காணமுடியாத மருந்தாகிய இறைவர் வெளிப்பட எழுந்தருளியிருந்த திருக்காளத்தி மலையின் அடிவாரத்தினை அணுக வந்து நிலமுறத் தாழ்ந்து வணங்கினர். (வி-ரை) திருந்திய இன்னிசை வகுப்பு - முன் பாட்டில் தாள அமைப்புக் கூறி, இப்பாட்டினால் பண்ணமைப்புப்பற்றிக் கூறியவாறு. இன்னிசை - இங்குச் சாதாரிப் பண்ணினையும், வகுப்பு - அதன் கட்டளை பேதத்தினையும் குறிப்பன. திருக்கண்ணப்பர்...பாடி - பதிகம் "வேயனைய" என்ற நான்காவது திருப்பாட்டினுள், "வாய் கலசமாக....ஈசனடி கூடுகா ளத்திமலையே" என்ற பின்னிரண்டடிகளிற் காணும் பகுதி. திருக்கண்ணப்பர் திருத்தொண்டு = திரு - என்ற அடைமொழிகள் கண்ணப்ப நாயனாரது அளவிடற்கரிய பெருமையினையும், சிறப்பித்து - திகழ - என்பவை பிள்ளையார் அதனை எடுத்துக்காட்டியருளிய பதிகத்தின் பெருமையினையும் விளக்கின. திருக்கண்ணப்பர் - "திருக்கண்ணப்பன் செய்தவத் திறத்து" என்று தொடங்கிச் "சிவகதி பெற்றனன் றிருக்கண் ணப்பனே" என்று முடித்துக் காட்டிய நக்கீரரது திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்ற 11-ம் திருமுறைத் திருநூலினை நினைவுபடுத்திக் காட்டியவாறு. சங்க காலத்தவராகிய நக்கீரருக்குப்பின், முதலாகத் திருக்கண்ணப்ப தேவரது திருத்தொண்டினை எடுத்துப் போற்றிக் காட்டியருளியது பிள்ளையாரது இத்திருவாக்கு என்ற தொடர்பு காட்டுதற்கு இவ்வாற்றாற் கூறியது போலும்; (திருமறம் அருளிய கல்லாடனார் சங்க காலத்தவரோ என்பது ஐயப்பாடு); திருமுருகாற்றுப்படை முதலியனவெல்லாம் சங்கப் புலவராகிய நக்கீரர் வாக்கல்ல என்று ஆராய்ச்சி செய்யும் நவீனப் புலவருமுண்டு. அவருரைப்பனவெல்லாம் தொன்றுதொட்டு வந்த பெரும்புலவ ருரைக்கு மாறுபட்டவை என்றொ துக்குக. திருத்தொண்டு - வாய் கலசமாக வழிபாடு செயும் என்ற பகுதி தொண்டு எனவும், அதன்வழி "மலராகு நயனம் காய்கணையி னாலிடந் தீசனடி கூடுதல்" என்ற பகுதி அதனுள்ளே தலைசிறந்த திருத்தொண்டு எனவும் குறிப்பித்தவாற. சிறப்பித்து - திகழ - என்றவையும் இக்கருத்து. திகழ - நாயனாரது சரித சாரம் இஃது என விளங்க. பெருந்தவர் கூட்டம் - அருந்தவர்கள் - பிள்ளையாருடன் வந்தோர்களும், முன் (2916) கூறியபடி எதிர்கொள்ள வந்து கூடிய பலதிறத்தினரும் ஆகிய திருத் தொண்டர்கள். தேடு மருந்து வெளியே இருந்த - மலை - சிறந்த மருந்துப் பண்டங்கள் மலையில் உள்ளன என்பர். அவற்றுள் சிறந்தவை தேடியலையாமல் வெளியே எளிதில் கிடைப்பது அரிது. ஆனால் இங்கு அவ்வாறு அரிய மருந்து வெளியே இருந்தது என்றபடி. மருந்து - தீராநோயாகிய பிறவிப்பிணி தீர்க்கு மருந்தாகிய இறைவர். "மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்", "மருந்து மாவன", "மருந்தவை", "மருந்து வேண்டில் லிவை", "மந்திரமுந் தந்திரமு மருந்து மாகி"(தேவா) முதலிய திருவாக்குக்கள் காண்க. மருந்து போல்வாரை மருந்தென்றார்; வெளியே எளிதிற் காண இருந்தும் உரியவாறு கண்டுகொள்ள மாட்டாத அறியாமையுடையார் அயனும் மாலும் என்பார் தேடும் என்றார்; இலிங்க புராணத் திருக்குறுந்தொகைத் திருப்பதிகம் பார்க்க; வெளியே - ஞான அறிவாகிய வெளியிலே எளிதிற் காண. மருந்து வெளியே இருந்த - மருந்தாகிய இறைவரது கண்ணில் கண்ட புண்ணுக்கு மலையில் மருந்து தேடிப் பிழிந்த மலை என்றும், அதற்குரிய கைகண்ட மருந்தாகிய மதது கண் தம்மிடத்து இலகுவிற் காண இருந்தும் முன்னர் அஃதறியாது மலையிற் பல மலையிற் பல மருந்து தேடிப் பின் கண்ட மலை என்றும் நாயனாரது சரிதக் குறிப்புக்கள் பட நிற்றலும் காண்க. வெளியே - மலையில் வெளிப்பட்டு முளைத்தெழுந்து என்ற பொருளும் காண்க. அடிவாரம் சார - அடிவாரம் - மலையின் அடி. வாரம் - அன்பு என்றுகொண்டு மலையின் அடியினைத் தமது மீக்கூர்ந்த அன்பு முன்னே சாரத் தாம் பின்பு வந்து என்ற குறிப்புப்பட நிற்பதும் காண்க. "நாணனு மன்பு முன்பு நளிர்வரை யேறத் தாமும்...ஏறி" (752). தாழ்ந்தார் - மலையினடியில் நிலம் பொருந்த வீழ்ந்து வணங்கினார்; மலையினைக் கண்டபோதே அவனிமேற் பணிதலும் (2918), அடிவாரத்தில் வீழ்ந்து வணங்குதலும், மேலே திருமலையைத் தொழுதுகொண்டே செல்லுதலும் (2920) ஆகிய இவை கைலாயமே யாகிய அம்மலையினையும், அதனில் வெளிப்பட்ட இறைவரையும் அவரை உள்ளே நிலைபெறக் கொண்டு நிற்கும் நாயனாரையும் வழிபடும் முறையையும் மரபையும் குறித்தன.தாழ்தல்-விரும்புதலுமாம்; விரைந்த விருப்பத்துடன் வணங்கினார் என்க. |
|
|