தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுது கொண்டே தடஞ்சிலா தலசோபா னத்தா லேறி வாழ்ந்திமையோர் குழாநெருங்கு மணிநீள் வாயின் மருங்கிறைஞ்சி யுள்புகுந்து வளர்பொற் கோயில் சூழ்ந்துவலங் கொண்டிறைவர் திருமுன் பெய்தித் தொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார். | 1022 | (இ-ள்) தாழ்ந்தெழுந்து....ஏறி - வணங்கி மேல் எழுந்து காளத்தித் திருமலையினைத் தொழுதுகொண்டபடியே பெரிய மலைப்படிகளின் வழியே ஏறிச் சென்று; வாழ்ந்து...உள்புகுந்து - வாழ்வடைந்து வானவர்களின் கூட்டம் நெருங்கியுள்ள மணிகளையுடைய நீண்ட திருவாயிலின் பக்கத்தே முன்பு வணங்கித் திருக்கோயிலினுள்ளே புகுந்து; வளர் பொற்கோயில் சூழ்ந்து வலங்கொண்டு - அதனைச் சுற்றிவலமாகச் சூழ்ந்து வந்து; இறைவர் திருமுன்பெய்தி...வீழ்ந்தெழுவார் - இறைவரது திருமுன்னர்ச் சார்ந்து தொழுது தலையின்மேலே கூப்பிய சிவந்த திருக்கைகளுடனே துதித்து நிலமுற விழுந்து வணங்கி எழுவாராகி; கும்பிட்ட பயன்...வீழ்ந்தார் - அவ்வாறு இறைவரைக் கும்பிட்டதனாலாய பயனே இது எனக் காண்பவர்போல மெய்ம்மையாகிய வேடர்பெருமானாம் திருக்கண்ணப்ப நாயனாரைக் கண்டு அவரது திருவடிகளில் வீழ்ந்தருளினார். (வி-ரை) தாழ்ந்தெழுந்து...வீழ்ந்தெழுவார் - இது திருமலையை ஏறி இறைவரை வணங்கும் நிலையினைக் கூறியவகையால் வழிபாட்டு முறையினையும் உணர்த்தி நின்றது. தாழ்ந்தெழுந்து - எழுந்து - என்றதனால் நிலமுற வீழ்ந்தமை குறிக்கப்பபட்டது. திருமலையை- திருமலை- என அடைமொழியின்றிக் கூறியது இது திருக்கயிலை என்று குறிப்பிப்பது; "திருமலைச் சருக்கம்". தொழுதுகொண்டே - ஏறி - "காளத்தி கண்டுகொண்டு" (749) என்றது காண்க. தொழுதபடியே ஏறுதலாவது மலையினில் இறைவரை நினைந்தபடியே ஏறிச் செல்லுதல். அம்மையார் கயிலைத் திருமலையின்மேலே தலையினால் நடந்தேறிய வரலாறு இங்கு நினைவுகூர்தற்பாலது. மரபு காட்டி உலகரை வழிப்படுத்தும் நிலையில் பிள்ளையார் ஏறிச் சென்றருளினர். சிலாதல சோபானம் - மலையினை ஏறும் படிகளின் வழி. இதனை முன்னர்ப் "பேணுதத் துவங்க ளென்னும் பெருகுசோ பானம்" (752) என்றது காண்க. சோபானம் - படிவழி. வாழ்ந்திமையோர் குழாம் நெருங்கு மணிநீள்வரயில் - இறைவரது திருமலையில் கோயில் வாயிலிற் காத்துக் கிடத்தலால் இமையோர் வாழ்ந்தனர் என்றது இமையவர்கள் பலரும் தத்தமது பதங்களையும் அமரலோக போகங்களையும் வேண்டிப் புண்ணிய வேள்விகளைச் செய்து அவ்வப் பதங்களை அனுபவிப்புழி நேர்ந்த துன்பங்கள் நீக்கக் கயிலையை யடைந்து இறைவரது முன்கடைத் திருவாயில் காத்துப் பன்னாள் வரங்கிடந்து அவ்விடையூறுகள் நீங்கப்பெற்றனர் என்பது கந்தபுராண முதலிய மாபுராணங்களால் அறியக்கிடக்கும் உண்மை. "வாய்தல் பற்றித் துன்றிநின் றார்தொல்லை வானவரீட்டம்" (திருவிருத்) முதலிய மறைத் திருவாக்குக்கள் காண்க. வாழ்ந்து - நெருங்கு - வாயில் - நல்வாழ்விழந்த தத்தமது உலகங்களினின்றும் வந்து இங்கு நெருங்கி வாழ்வினைப் பெற்று என்பதாம்; நெருங்கு - வாயில் - நந்திபெருமான் உத்தரவின்றி உட்செல்ல மாட்டாதவராகி வாயிலின் நெருங்கினர் என்பதும் குறிப்பு. இவர்கள் புறத்தே நிற்பத் தொண்டர்கள் எப்போதும் வணங்கவும், தொண்டு செய்யவும், உட்புகும் உரிமையுடையோர் என்பது உள்புகுந்து என்பதனாற் பெறப்படும். "தொண்டர்கள்பின் னும்பார்குழா மல்குதிருக் காளத்தி மாமலை" (1608) என முன்னரும் இக்குறிப்புப்படக் கூறியது காண்க. வளர்பொற் கோயில் - திருமாளிகை என்பர்; சூழ்ந்து - கோயிலின் திருமதிலின் உள்ளே வலமாக மாளிகையைச் சுற்றி. வீழ்ந்தெழுவார் - வீழ்ந்தார் - இறைவரது திருமுன் வணங்கி எழும் வழிபாடு கண்ணப்பர் திருமுன்பு முற்றுப்பெற்றது என்பது குறிக்கத், திருமுன்பு வீழ்ந்தெழுவாராகி என முற்றெச்சமாக வைத்து, அவ்வினையெச்சம் வேடர்பெருமான் முன்பு வீழ்ந்தார் என்ற வினைமுற்றுப் பெற வைத்தோதினார். இறைவரது வழிபாடு அடியார் வணக்கத்தை யின்றியமையாது உடன்கொண்டு முற்றுப்பெறற்பால தென்பதாம். பிள்ளையாரது திருமயிலைத் திருப்பதிகத்துள் இவ்வுண்மை விளக்கப்படும்; கண்டுகொள்க. இது சிவஞான போதப் பன்னிரண்டாஞ் சூத்திரத்தின் விளக்கிய உண்மையுமாம். கும்பிட்ட பயன் பாண்பார்போல் - நூல்களுக்குப் பயன் பாண்பதுபோல இறைநூல்களாற் பெறப்படும் பேறாகிய இறைவரைப் பெறுதல் என்பதற்குக் கண்ணப்பரின் வணக்கமாகிய ஒருபயன் கண்டார். இறைவரை யடையும் வீடுபேற்றுக்குச் சாதனமாகியவை சரியை முதலிய நான்குமாம். இனி இவற்றாற் பெறப்பட்ட இறைவரைப் பெறுதல்தானும் தானே சாத்தியமாய் முடிதலன்றி ஒரு சாதனமாயமைந்து அடியவர்பாற் கூட்டுவிக்கும் என்பதுமோ ருண்மையாதல் பெறவைத்தத நயம் காண்க. "சீரடியார், குலம்பணி கொள்ள வெனைக்கொடுத் தோன்"(திருக்கோவை) என்பது முதலிய திருவாக்குக்கள் காண்க. இது பயனுக்குப் பயன் கூறியவாறென்க. போல் - உவம உருபு அதுவேயாம் என்ற பொருளில் வந்தது. "விளைத்தவன் புமிழ்வார் போல" (772); "பாசப் பழிமுதல் பறிப்பார் போல"(460) என்பது முதலியவையும், ஆண்டு உரைத்தவையும் பார்க்க. பயன் பற்றித் தோன்றிச் சிறப்பு நிலைக்களமாகிய உவமமென்பர்; காணுதல் - ஈண்டனுபவிக்கப்பெறுதல் என்னும் பொருள் தந்து நின்றது. இக்கருத்து மிக அரிதாய்ச் சிந்தித்து அனுபவிக்கத் தக்கதொன்று. மெய்வேடர் பெருமான் - மெய் - மெய்யே உருவாகிய. மெய் - சத்து - இறைவரது தன்மை; அதுவே அன்புருவம். அன்பே சிவமாம் என்பர் திருமூலர்.இக்கருத்தினையே மேல்வரும்பாட்டில் விரித்தருளுதல் காண்க. வீழ்ந்தார் - வேறு ஒருவரால் உந்தப்பட்டுத் தம்வயமிழந்து வீழ்தல்போல என்பது குறிப்பு. "தம்பெருகு மனக்காதல் தள்ளநில மிசைவீழ்ந்தார்"(2892) என்று முன் இதன் நிலையினை விரித்தது காண்க. தடஞ்சிலைச் சோபான நிலை தன்னாலேறி - என்பதும் பாடம். |
|
|