யாவர்களு மறிவரிய விறைவன் றன்னை யேழுலகு முடையானை யெண்ணி லாத தேவர்கடம் பெருமானைத் திருக்கா ளத்தி மலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனைப் பூவலரும் பொழில்புடைசூழ் சண்பை யாளும் புரவலனார் காலங்க டோறும் புக்குப் பாமலர்கொண் டடிபோற்றிப் பருகி யார்ந்து பண்பினிய திருப்பதியிற் பயிலு நாளில்; | 1025 | (இ-ள்.) யாவர்களும்...இறைவன்றன்னை - யாவராலு மறிதற்கரியவராகிய இறைவரை; ஏழுலகும் உடையானை - ஏழுலகங்களையும் தமது உடைமைப் பொருளாக வுடையவரை; எண்ணிலாத..பெருமானை - அளவில்லாத தேவர்களது தலைவரை; திருக்காளத்தி....தேனை - திருக்காளத்தி மலையின்மேல் வீற்றிருந்தருளும் செம்மையாகிய தேனாகி உள்ளவரை; பூவலரும்.....ஆர்ந்து - பூக்கள் மலர்தற்கிடமாகிய சோலைகள் பக்கத்திற் சூழ்ந்த சீகாழியின் தலைவராகிய பிள்ளையார் உரிய காலங்கள் தோறும் சென்று திருக்கோயிலினுள்ளே புகுந்து பதிகப் பாட்டுக்களாகிய மலர்களினாலே திருவடிகளை அருச்சனை புரிந்து துதித்துப் பருகி நிறைவாக அனுபவித்து; பண்பினிய....நாளில் - செம்மையாகிய பண்புகளா லினிமைதருகின்ற அத் திருப்பதியிலே பயிள்று வீற்றிருந்தருளும் நாள்களிலே, (வி-ரை.) யாவர்களும் அறிவரிய இறைவன் - இறைவன், தெள்ளி "யுணருமவர் தாங்க ளுளராக வென்றும், புணருவா னில்லாப் பொருள்" ஆதலால் தற்போத நிலை முடிந்தார்க்கன்றி அல்லாதார் யாவர்களும் அறிவரியான் என்றலே பொருந்துவதாம். "தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்" என்பவாகலின் ஞானநாட்டம் பெற்றபின் பிரிப்பின்றி அருட்கண்ணாற் காண்பர் ஞானியர்; "அருளாகி நின்ற தவரன்றி யாவ ரறிவார்" என்றலும் காண்க. "அடைபவர் சிவமே யாகு மதுவன்றித் தோன்று மென்ற கடனதென் னென்னின் முன்னங் கண்டிடார் தம்மைப் பின்னுந் தொடர்வரு மருளி னாலுந் தோன்றுமா காணா ராயின் உடையவ னடிசேர் ஞான முணர்தலின் றடைத லின்றே" - (சிவப்பிர) "சிவார்க்க சத்திதீதித்யாஸமாத்த்தீ க்ருதசித த்ருசா சிவம் சக்த்யாதிஸ்ஸார்த்தம் பச்ய யாத்மா கதாவிருதி; "ஆன்மா சிவசூரியனது சத்தியாகிய ஒளியால் ஆற்றலுடையாதாகச் செய்யப்பட்ட ஞானக்கண்ணால் சத்தி முதலியவற்றோடுகூடச் சிவனைக் காண்கின்றது' என்பது ஆகமம். (இவை ஸ்ரீமத் - முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள் அருளிய குறிப்பு.) ஏழுலகும் உடையானை - எல்லா வுலகங்களையும் உயிர்களையும் அநாதியே தமது உடைப் பொருள்களாக உடையவன். "எல்லாமுன் னுடைமையே எல்லாமுன்னடிமையே" என்ற கருத்து. ஏழுலகு - மேல் கீழ் நடு உலகுகள். இவற்றை உடைமையாவது தனது மாயை என்னும் சத்தியினின்றும் தோற்றுவித்தும் பின் இறுதியில் அவற்றை மாயையில் ஒடுக்கி மாயையைத் தன்னுள் ஒடுக்குதலால் தன் பொருளாக உடைமை; இரட்டுற மொழிதலால் ஏழுலகு - எழுபிறப்புக்களுள் வரும் எவ்வகை உயிர்களும் என்றுகொண்டு உடைமையாவது அடிமையாகக் கொண்டு இயக்கி நடத்துதல் என்று உயிர்கள்மாட்டு வைத்து உரைத்துக்கொள்க. எண்ணிலாத....பெருமானை - 33 கோடி என்ற எண்ணிருப்பினும் மேலும் பசு நல்வினைகள் செய்து தேவராகும் உயிர்கள் அனந்தமிருத்தலின் எண்ணிலாத என்றார். தேவர்கள்தம் பெருமான் - தேவதேவன்; ஏனை யுயிர்களுக்கேயன்றித் தேவர்க்கும் தலைவன் என்பதாம். திருக்காளத்தி...தேனை - "இம்மலைப் பெருந்தேன் சூழ்ந்து" (750) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. காலங்கள் - வழிபாட்டுக்குரிய காலங்கள் திருப்பள்ளியெழுச்சி முதலாகத் திருவத்தயாமம் ஈறாகச் சிவாகமங்களிள் விதிக்கப்பட்டன; ஒன்று முதலாக ஆறுகாலங்கள் வரை வழங்குவன; சிறுபான்மை அவற்றின் மிகுதலும், குறைதலு முண்டு. பருகி ஆர்ந்து - பருகுதலாவது மொண்டு விழுங்குதல்போல நுகர்தல். ஆர்தல் - நிறைதல். "பருகாவின் னமுதத்தைக் கண்களாற் பருகுதற்கு" (ஏயர். புரா - 308); "தின்பன் கடிப்பன் றிருத்துவன் றானே" (திருமந்); "பருகியு மாரேன்; விழுங்கியு மொல்ல கில்லேன்" (திருவா - அண்டப் - 166 -167). பண்பினிய - பண்பு - செம்மைப் பண்பு; சிவந்தரும் பண்பினாலினிய. செய்யகோனை - என்பதும் பாடம். |
|
|