அங்கண்வட திசைமேலுங் குடக்கின் மேலு மருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத் திங்கள்புனை முடியார்தந் தானந் தோறுஞ் சென்றுதமி ழிசைபாடுஞ் செய்கை போல மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச் செங்கமல மலர்வாவித் திருக்கே தாரந் தொழுதுதிருப் பதிகவிசை திருந்தப் பாடி, | 1026 | (இ-ள்.) அங்கண்....நிகழாதாக - அவ்விடத்து வடக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளில் அரிய தமிழின் வழக்கு அங்கு நிகழாமையினாலே; திங்கள்புனை.....போல - சந்திரனைச் சூடிய முடியினையுடைய இறைவரது ஏனை எல்லாப் பதிகள் தோறும் சென்று சென்று திருப்பதிகத் தமிழிசை பாடும் செயல்போல; மங்கையுடன்....வணங்கிப் பாடி - தேவர்கள் வணங்கித் துதிக்கும்படி வீற்றிருந்தருளும் இறைவரது வடகயிலைத் திருமலையினை இங்கு நின்றபடியே வணங்கித் திருப்பதிகம் பாடியருளி; செங்கமல மலர்....திருந்தப் பாடி - செந்தாமரைப் பூக்கள் மலர்தற்கிடமாகிய பொய்கைகளையுடைய திருக்கேதாரத்தினையும் தொழுது திருப்பதிகத்தை இசையுடன் திகழும்படி பாடி; (வி-ரை.) அங்கண் வடதிசை மேலும் குடக்கின் மேலும் - அங்கண் - அவ்விடத்தின். திசை - மேலும் திசையில் உள்ள நாடுகளிலும்; குடக்கு - மேற்கு; குடக்கின் மேலும் - மேற்றிசை நாடுகளிலும், வடதிசை - இங்கு இமய எல்லை வரையிலும், குடதிசை - குடகடல் எல்லை வரையிலும் உள்ள நாடு என்ற பொருளில் வந்தன. அருந்தமிழின் வழக்கங்கு நிகழாதாக - திருக்காளத்தியின் வடக்கும் மேற்கும் உள்ள தேசங்கள் தமிழ் வழங்கு நிலங்களன்றாகிச், சிறப்பற்ற பல மொழிகளே பரவிய நாடுகளாதலால்; ஆயின் அந்நாடுகளின் வாழ்வோரை உய்விக்கும் நிலையின்றாமோ? எனவும், சிவனருட் பரப்பு அங்கு நிகழாதாகுமோ? எனவும், தமிழ்நில மக்களின் அளவு மட்டுமோ பிள்ளையார்பாற் கூடிலதோ? எனவும் பற்பலவாறும் பற்பலவாறும் ஈண்டு வினாவுவாருமுளர்; அற்றன்று. பின் என்னையோ கருத்து? எனின் "அசைவில்செழுந் தமிழ்வழக்கே யயல்வழக்கின் றுறைவெல்ல" (1922); "வண்டமிழ்செய் தவநிரம்ப" (1921); "திசையனைத்தின் பெருமையெலாந் தென்றிசையே வென்றேற" (1921) என்று முன்னர்க் கூறியவை இங்கு நினைவுகூர்தற்பாலன. எல்லாத் திசைகளின் பெருமைகளையும் வென்றேறிய தென்றிசையிலே, எல்லா மொழி வழக்குக்களையும் வென்ற தமிழ் மொழியிலே விளங்கவைத்தல் அவ் எல்லாத் திசைகளுக்கும் மொழிகளுக்கும் பயன்படுமாறாயிற்று. பக்குவ முறையின் நினைகளையும் மறைகளையும் வகுத்து இறைவனருளுமாறே உரிய வகையால் ஈண்டுக்கொண்டு ஏனையோர் யாவரும் பயன்படுத்திக் கொள்ளத் தக்கார்கள் என்பது. தென்றிசையின் தகுதிபற்றி 40 - 46 பாட்டுக்களும், முன் உரைத்தவையும் பார்க்க. அற்றாயின், இங்கு நின்றபடியே அத்திசையின் தலங்களை வணங்கிப் பாடியருளிய தென்னை? எனின், இப் பாவனைகளும் திருவாக்குக்களும் வணக்கங்களும் ஒளியும் ஒலியும் ஆகிய நுண்ணிய அலைகளின்வழி அங்கங்கும் சார்ந்து திருவருள் விளக்கும் செய்து அங்கங்குள்ளார்களும் படிமுறையானே பயன்பெறக் காரணமாய் விளையும் கருணைச் செயல் என்க. பிள்ளையார் திருவவதாரத்தினும், அரசுகள் இறைவரது திருவடியில் ஞானவடிவேயாகி நண்ணியபோதும் உலகம் பெற்ற இன்ப விளைவுகள் இங்கு நினைவுகூர்தற் பாலன. 1926 - 1927- 1930 =1623 முதலியவை பார்க்க. திங்கள்புனை...போல - தானங்கள்தோறும் நேரே சென்று சென்று வணங்கிப்பாடும் வழக்கம்போலவே இங்கு நின்றபடியே மனத்துள்ளே கண்டு வணங்கிப் பாடியருளினார்; "சமாதியான் மலங்கள் வாட்டிப், பொருந்திய தேச கால வியல்பகல் பொருள் ளெல்லாம், இருந்துணர் கின்ற ஞான மியோகநற் காண்ட லாமே" (சித்தி - அளவை - 13) என்றதனால் ஞானயோகக் காட்சியினால் ஓரிடத்து இருந்தவாறே, ஏனையோர்க்குள்ள காலமும் இடமுமாகிய எல்லைகளின் அளவுகடந்து எல்லாம் நேரே கண்டு அறியும் நிலை கூடும் என்பது அறியப்படும். "எனதுள் நன்று மொளியான் - நாடிய தமிழ்க்கிளவி" (தேவா) "எந்தையடி வந்தணுகு சந்தமொடு" (தேவா - 11) என்ற கருத்தும் காண்க. போல - பயனும் வினையும் பற்றி உவமம் விரித்துக்கொள்க. "ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை" (தேவா) என்றதுமிக்கருத்தினைப் பெறவைத்து ஏனையோர்க்கும் புலப்பட உபதேசித்ததாம்; ஈண்டு ஞானயோகக் காட்சியால் இங்கு நின்றவாறே அவ்வத் தானங்களையும் பிள்ளையார் நேரே கண்டு அப்பதிகங்களை அருளினார் என்பதும் அவ்வப் பதிகங்களால் அறிந்து கொள்க. அரசுகளும் இங்குப் பயிற்சியால் நெடந்தூர முள்ள பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் காணும் நிலைகள் ஈண்டுக் கருதத்தக்கன. வானவர்கள் போற்றிசைப்ப - வடகயிலை - என்பது அங்குத் தேவர்களது வழிபாடுமட்டும் நிகழ்வதேயன்றி மனிதர்கள் எண்ணி வணங்குவதல்லாமல் நேரே சென்று வணங்கும் நிலையில்லை என்றருளியபடி. "கயிலை மால்வரை யாவது காசினிமருங்கு, பயிலு மானுடப் பான்மையோ ரடைவதற் கெளிதோ?" (1630) என்றதும், திருமலைச் சிறப்பிலும் (11-22), அரசுகளுக்குத் திருவையாற்றிற் கயிலைக் காட்சியருளிய இடத்தும் (1640 - 1644) உரைத்தவையும் ஈண்டு நினைவுகூர்தற்பாலன. வடகயிலை - திருக்காளத்தியாகிய தென்றிசைக் கயிலை மனிதர்களும் தேவர்களும் உடன் வழிபடவுள்ளது. இங்குத் தேவர் வந்து வணங்குதல் "கடவுண்மால் வரையி னுச்சி யதிர்தரு மோசை யைந்தும்" (750); "வான்மிசை யரம்பையர் கருங்குழற் சுரும்பு" (1089) என்பனவற்றாலு மறியலாம். வடகயிலை அவ்வாறன்றிவானவர்கள் மட்டும் நேரே போற்றிசைப்ப உள்ளதென்ற குறிப்புத் தர வடகயிலை என்று பிறிதினியைபு நீக்கிய அடைமொழி தந்து பிரித்துணர்த்தினார். மங்கை - உமையம்மையார்; "மங்கை தெரிய வுருவில் வைத்து கந்த" (தேவா - கயிலை) செங்கமல மலர்வாவி - "கெண்டை பாயச் சுனைநீல மொட்டலரும்", "நீர்க்கோட்டு" (தேவா) என்ற பதிகக் குறிப்புக் காண்க. திருந்த - பதிகப் பாட்டுக்களிற் கண்டவாறு வழிபாடுகள் பலவற்றாலும் முயன்று மக்கள் திருந்தி வீடுபெறும்படி. "உலகாண்டு வீடுகதி பெறுவார்களே" (11) என்று பதிகப் பயன் அருளியதும், 2 முதல் 7 வரை பாட்டுக்களில் வழிபடும் நிலைகளை உரைத் தருளியவையும், சிறப்பாய் முதற் பாட்டில் உரைத்தவையும் கருதுக. பண் செவ்வழி என்ற குறிப்பும் காண்க. "செவ்வழிநற் பண்பாடும்" (தேவாரம்). தமிழ் பாடலுறும் - என்பதும் பாடம்.
|
|
|