பாடல் எண் :2926
தென்றிசையிற் கயிலையெனுந் திருக்கா ளத்தி
போற்றியினி தமர்கின்றார் திரைசூழ் வேலை
ஒன்றுதிரு வொற்றியூ ருறைவார் தம்மை
யிறைஞ்சுவது திருவுள்ளத் துன்னி யங்கண்
இன்றமிழின் விரகரருள் பெற்று மீள்வா
"ரெந்தையா ரிணையடியென் மனத்த" வென்று
பொன்றரளங் கொழித்திழிபொன் முகலி கூடப்
புனைந்ததிருப் பதிகவிசை போற்றிப் போந்தார்.
1028
(இ-ள்.) தென்றிசையில்....அமர்கின்றார் - தெற்குத் திசையில் உள்ள திருக்கயிலை என்று சொல்லப்படும் திருக்காளத்தியினைத் துதித்து இனிதாக அங்கு விரும்பி எழுந்தருள்பவராய்; திரைசூழ்....மீள்பவர் - அலைகள்சூழ்ந்த கடலின் கரை சார்ந்த திருவொற்றியூரின்கண்ணே எழுந்தருளும் இறைவரைச் சென்று வணங்கும் நிலையினைத் திருவுள்ளத்தே நினைந்தருளி அங்குநின்றும் இனிய தமிழின் விரகராகிய பிள்ளையார் இறைவரது திருவருள் பெற்று மீண்டு மேற்செல்வாராகி; எந்தையார்...போந்தார் - "எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே" என்ற கருத்துடன், பொன்னுமுத்தும் கொழித்து ஓடிவரும் பொன்முகலி யாற்றினையுங்கூடப் பொருந்தக் கூறிய திருப்பதிகவிசையினாற் போற்றி மேலே சென்றருளினார்.
(வி-ரை.) திரைசூழ்....உன்னி - திருவெண்பாக்கம் முதலிய பதிகளை வணங்கி யணைந்தபோது, கண்ணப்ப நாயனாரை உன்னிக் காளத்தியை அணையும் வேட்கை (2911)யுடன் எழுந்தருளினர்; அதுபோலவே இங்குத் திருக்காளத்தி நின்றும் திருவொற்றியூருரைவாரை இறைஞ்ச உன்னி எழுந்தனர்; அங்கு நோக்கிச் செல்வார் வழியிடைப்பட்ட பதிகளையும் வணங்கிச் சென்றருளுவர்; தண்டக நாட்டில் இறைவர் கோயில்கள் கண்டு போற்றி வருதல் (2857) கருத்துட்கொண்டு பிள்ளையார் சீகாழியினின்றும் எழுந்தருளினாராதலின் அந்நாட்டின் சிறந்த பதியாகிய ஒற்றியூரினை நினைந்தனர் என்க. இது, பின்னர்த் திருமயிலையின் அற்புத நிகழ்ச்சி தொடர்ந்து உளதாகும் பொருட்டு இறைவரருளால் பிள்ளையாரது திருவுள்ளத்தில் எழுந்ததுமாம் என்க.
அங்கண் - மீள்வார் - அங்குநின்று மீண்டு எழுந்தருளி வருகின்றவராகிய பிள்ளையார். மீளுதல் - சென்ற வழியே திரும்புதல்.
அருள் பெற்று - இறைவர்பால் விடைபெற்று.
"எந்தையா ரிணையடி என்மனத் துள்ள" என்று - இது திருமலையினின்றும் மீண்டருளிப் புறப்படும்போது இறைவரது திருவடியினைத் தமது திருமனத்துட் கொண்டு துதித்து மேல் எழுந்தருளிச் செல்லும் நிலை; பதிகக் குறிப்பு. மனத்த - மனத்தில் உள்ளன; அகரவீற்றுப் பன்மைபெயர். என்று - என்று பதிகத்தாற்றுதித்து. "எந்தையார்..... மனத்துள்ளவே" பதிக முதற்பாட்டின் ஈற்றடி. இவ்வாறே முன்னர்த் திருவாரூரினின்றும் புறப்படும்போது "அவன தாரூர் தொழுதுய்யலாம்; மனமே மறவாது தொழுக" என்று பாடிப் புறப்பட்டமையும் காண்க (2416). கச்சியினின்றும் "அவனென் னெண்ணத்தானே" என்று அரசுகள் அருளிப் புறப்பட்டதும் (1593) கருதுக.
பொன்முகலி கூடப் புனைந்த திருப்பதிகம் - பதிகத்துள் "முகலியின் கரையினிற் - காளத்தி" என்று முகலி ஆற்றினையும் சேர்த்தே மலையினைத் துதித்ததை எடுத்துக் காட்டியபடி.
போந்தார் - மேலே சென்றருளினார்.