நிகழு மாங்கவர் நிதிப்பெருங் கிழவனின் மேலாய்த் திகழு நீடிய திருவினிற் சிறந்துள ராகிப் புகழு மேன்மையி லுலகினிற் பொலிந்துளா ரெனினும் மகவி லாமையின் மகிழ்மனை வாழ்க்கையின் மருண்டு; | 1039 | (இ-ள்.) நிகழும்....சிறந்துளராகி - முன் கூறியவாறு நிகழ்கின்ற அச்சிவநேசர் பெரிய நிதிபதியாகிய குபேரனிலும் மேம்பட்டு விளங்கும் நீடிய செல்வத்தாற் சிறந்துள்ளவராகி; புகழும்....எனினும் - புகழ்ச்சி பொருந்திய மேன்மையோடும் உலகத்தில் விளங்கியிருந்தன ரென்றாலும்; மகவு...மருண்டு - மகிழ்ச்சியுடைய இல்வாழ்க்கைத் திறத்தில் மக்கட்பேறு பெறாமையினாலே மருட்சியடைந்து மயங்கி; (வி-ரை.) ஆங்கு நிகழும் அவர் என்க. ஆங்கு - முன்கூறிய அவ்வாறு; நிகழ்தல் - செல்லுதல்; ஒழுகுதல். நிதிப்பெருங் கிழவனின் மேலாய் - கிழவனின் - கிழவனைப் பார்க்கிலும். இன் - உறழ்வுப்பொருளில் வந்த ஐந்தனுருபு. பெருநிதிக் கிழவன் - குபேரன். கிழமை - உரிமை. மேலாய்த் திகழும் நீடிய திரு - அவரது செல்வத்தின் சிறப்பினைக் குறித்தது. அச்சிறப்பாவது அடியார் பூசைக்கு ஆகும் தன்மையும், பின்னர்ச் சிவநேசர் அளிக்கும் பாங்கினால் (2947 - 2951) பிள்ளையாருக்குரியதாகும் தன்மையும். இச்சிறப்புக்கள் குபேரனது பெருநிதிக்கு இல்லை என்பது குறிப்பு. நீடிய - என்பது மக்குறிப்பு. நீடுதல் - ஏனைய பொருள்போல அழிதலின்றி அடியார்க்குதவும் பெருமையால் நிலைபெற்றிருத்தல். திருவினிற் சிறத்தல் - "இருநிதிப் பெருஞ் செல்வத்தின் - வளம்" (2932) எனமுன் உரைக்கப்பட்ட நிலை. புகழும் மேன்மை - யாவரும் புகழ வரும் மேம்பாடு. எனினும் - மனைவாழ்க்கையின் மருண்டு - எனினும் - மனைவாழ்க்கை செல்வத்தின் வளத்தாற் சிறக்கும் என்றெண்ணுவர் உலகர்; ஆயினும் அவ்வாழ்க்கை மகப்பேறில்லாதபோது சிறவாது என்று மயங்கி. செல்வம் உலகியற் பொலிவு தரினும் மனைவாழ்க்கையிற் பொலிவு தருவது மகப்பேறே என்பார் எனினும் என்றார். "மங்கலமென்ப மனைமாட்சி மற்றத, னன்கல நன்மக்கட் பேறு" (குறள்) என்ற கருத்து ஈண்டுவைத்து நோக்கற்பாலது. "பிள்ளைப்பே றின்மையினால்" (875); "மனையறத்திலின்பமுறு மகப்பெறுவான் விரும்புவார்" (1917) என்றவற்றில் உரைத்தவை பார்க்க. மருண்டு - மருட்சியாவது மக்கட்பே றின்மையால் மனைவாழ்க்கை மகிழ்ச்சியின்றியும் மங்கலமின்றியும் நிகழ்வதால் வரும் மனச் சோர்வு. திகழ நீடிய - என்பதும் பாடம்.
|
|
|