பாடல் எண் :2942
யாவ ரும்பெரு மகிழ்ச்சியா லின்புறப் பயந்த
பாவை நல்லுறுப் பணிகிளர் பண்பெலா நோக்கி
பூவி னாளென வருதலிற் பூம்பாவை யென்றே
மேவு நாமமும் விளம்பினர் புவியின்மேல் விளங்க.
1044
இ-ள்.) யாவரும்....பயந்த - எல்லாரும் முன்கூறியபடி மீக்கூர்ந்த பெருமகிழ்ச்சியினாலே இன்பம் பொருந்தப் பெற்றெடுத்த; பாவை....நோக்கி - பாவை போன்ற அந்தப் பெண்ணினது அழகு விளங்கும் பண்புகளை யெல்லாம் நோக்கி; பூவினாளென.....விளங்க - அவை பூமகளின் பண்புகள்போல வருதலினாலே அப்பெண்ணுக்குப் பூம்பாவை என்றே பொருந்தும் பெயரினை உலகத்தில் மேலாக விளங்கும்படி கூறி இட்டனர்.
(வி-ரை.) யாவரும்....இன்புற - முன் கூறியபடி யாவரும் மகிழ்ந்து இன்புறும் படி; அன்றோடமையாது இனி மேலும் இவ்வரலாற்றின் பயன் பெற்று ஒழுகி இன்புறும்படி என்ற குறிப்பும் காண்க. பயந்த - பெற்றெடுத்த.
பாவை - பாவை போன்றாரைப் பாவை என்றதுபசாரம்; "எழுது பாவை நல்லார்" (குறுந்). அழகிய கொல்லிப்பாவையும், சிவநேசரது கண்மணிப்பாவையும் போன்றார் என்றலுமாம்.
நல்உறுப்பு அணிகிளர் பண்பு எ(ல்)லாம் நோக்கி - நல்ல உறுப்புக்களின் அழகு விளங்கும் தன்மைகளை எல்லாம் உற்றுநோக்கி; நோக்கி - கூர்ந்து கருதி; அணி - பண்பு - அழகும் குணமும்; நல்லுறுப்பு - கண், முகம் முதலியன. இவற்றைச் சாமுத்திரிகா லட்சணம் என்பது வடமொழி வழக்கு.
பூவினாள் என வருதலில் - பூவினாள் - திருமகள் - இலக்குமி. என - போல; உவமஉருபு; என்று சொல்லும்படி. என வருதலில் - என்னும்படி தோன்றியதனாலே. வருதலில் - சொல்லும் நிலை பெறுதலினால் என்றலுமாம்.
மேவு நாமழம் விளம்பினர் - மகவுக்குப் பெயர் இடும் காரணம் பல வழங்கப்படுவன. அவற்றுள் இங்குக் கையாண்ட வழக்கு நல்உறுப்புக்களைப் பற்றித் திருமகள் போன்ற உடலமைப்புக் காரணமாக வந்தது. "கையி லேந்தற் கருமையா லுரிமைப் பேரும் திண்ணனென் றியம்பு மென்ன" (666) என்று கண்ணப்பருக்கு உடலின் திண்ணிய கனம்பற்றிப் பெயரிட்டமையும், பரவையாருக்கு "மதியணி புனித னன்னாள்" பற்றி அந்நாமம் மங்கல அணியாற் சாற்றியதும் (278) பிறவும் நினைவு கூர்க.
பூம்பாவை என்றே மேவு நாமமும் - ஏகாரம் தேற்றம். மேவும் - பொருந்த முடைய. பூம்பாவை - "பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும்" என்பதிலக்கணமாதலானும் பூப்பாவை என்று வல்லொற்று வரின் இவளின் மெல்லிய பண்புக்கு மேவாதாதலானும் பூம்பாவை என்றார்; மேவும் என்ற கருத்துமிது; பின்னர்ப் பிள்ளையாரது அருட்டிருவாக்கில் மேவும் என்ற குறிப்புமாம்.
புவியின்மேல் விளங்க - மேல் - மேலாக. மேன்மை பெற்று - என்ற பின் வரலாற்றுக் குறிப்பும் காண்க. விளங்க - விளங்கும்படி. மேல் - மேலும் -பின்னரும் என்று கொண்டு, இப்போது பெயர் விளம்பியதன்றிப் பின் வரலாற்றில் இவ்வுடல் சாம்பராகி மீள உதிக்கநின்றபோது, மேலும் பிள்ளையாரது திருவாக்கில் இப்பெயரே விளம்பப்பெற்ற நிலைக்குறிப்பாக உரைப்பதுமாம்; ஏனையோர்க்கு இட்ட பெயர்கள் உடலுடன் உயிர் நிற்கும்வரை வழங்கி உயிர் பிரிந்தபின் நீக்கப்பட்டுப் பிணம் எனப்படும்; "பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு" (திருமந்திரம்); ஆயின் இவருக்கு அவ்வாறன்றி எலும்பும் சாம்பருமாகிக் குடத்தினுள் அமைந்தபோதும் அப்பெயரே மேவியது என்ற குறிப்புமாம். பின்னர் வரும் உயர்பண்புகளின் குறிப்புமாம்.
பூவினாளெனத் தகுதலில் - என்பதும் பாடம்