நாலு தந்தமு மென்புறக் கவர்ந்துநஞ் சுகுத்து மேலெ ழும்பணம் விரித்துநின் றாடிவே றடங்க நீல வல்விடந் தொடாந்தெழ, நேரிழை மென்பூ மாலை தீயிடைப் பட்டது போன்றுள மயங்கி, | 1058 | (இ-ள்.) நாலு...வேறு அடங்க - நச்சுப் பற்கள் நான்கும் எலும்பளவும் அழுந்தக் கடித்து நஞ்சினை உகுத்து மேலே எழும் படத்திளை விரித்துநின்று ஆடி வேறு இடத்தில் மறைந்து ஒடுங்கவே; நீல...தொடர்ந்து எழு - கரிய வெவ்விய விடம் அதனைத் தொடர்ந்து மேலே எழுந்ததனால்; மென்பூ.......போன்று - மெல்லிதாகிய மலர்மாலையிடையில் தீப் பட்டதுபோல; நேரிழை - நேரிய இழைகளையணிந்த பூம்பாவையார்; உளம் மயங்கி - மனமயங்கி; (வி-ரை.) தந்தம் நாலும் - என்க. நாலு தந்தமாவன நச்சுப் பையைத் தலையிற் கொண்டுள்ள குழாய்போல உட்டுளையுடைய நான்கு கூரியபற்கள். "கடுவோடொடுங்கிய நூம்புடை வாலெயிற்று" (முருகு); நாலு தந்தமாவன: காளி -காளாத் திரி - யமன் - யமதூதன் என்பன. என்பு உறக் கவர்ந்து - தசைநார்கள் - நரம்புகள் முதலிய மேலுள்ள தாதுக்கள் எல்லாந் தாண்டி உள்ளே எலும்பு வரையும் பொருந்த ஆழமாகக் கடித்து; விரல் எலும்புக்கு அடுத்து சுத்தரத்தக் குழாய்களிருத்தலின் விடம் அவற்றுள் உகுக்கப்பட்டமையால் இரத்த வேகத்துடன் சடுதியில் இரத்தாசயத் தாமரைக்குட் பாய்ந்து உடல் முழுதும் விடம் பரவும்படி போதிய ஆழத்திற் சடித்தது. நஞ்சு உகுத்து - பற்களின் குழாய்போன்று உள்ள உட்டுளையின்மூலம் அவற்றினடியில் உள்ள நச்சுப் பையினின்றும் நஞ்சினைக் கக்கி - இரத்தக் குழாயினுள் வீழ்த்துச் - செலுத்தி. To Inject என்பது நவீனர் கூற்று. மேலெழும் பணம் விரித்துநின் றாடி - இவை பாம்புகளின் சினக்குறி என்க. பணம் - பாம்பின் படம். விரித்து - ஏனைக் காலமெல்லாம் சுருங்கியிருத்தலும் சிறிது சினம் மூளுமாயின் உடனே தலைநிமிர்ந்து படம் விரித்தாடுவதுமாகு மியல்பினையும் உடையது பாம்பு; ஆதலின் விரித்தாடி என்றார். படம் விரித்து ஆடுதல் பாம்புகளினியல்பு. வேறு அடங்க - வேறிடத்தில் மறைந்துகொள்ள; ஒடுங்க. நீல வல்விடம் - நீலம் - கருமை. தொடர்ந்து எழு - எலும்பு உறக் கவர்ந்தமையால் உடனே சுத்த ரத்தத்துடன் கலந்து அதனுடன் தொடர்ந்து மேற்பரவ. மென்பூ....போல - தொழிலும் பண்பும்பற்றி வந்த உவமம்; மெல்லிய பூமாலையினைத் தீயினிற் புகவிட்டால் உடனே கருகி வாடுதல்போலத் துவண்டு. நேரிழை உளம் மயங்கி - என்க. மயங்குதல் - உணர்வறுதலினால் ஒன்றுந் தோற்றாது கலங்கிச் சோர்தல். |
|
|