பாடல் எண் :2958
விடந்தொ லைத்திடும் விஞ்சையிற் பெரியார் மேலோர்
அடர்ந்த தீவிட மகற்றுதற் கணைந்துளா ரனேகர்
திடங்கொண் மந்திரந் தியானபா வகநிலை முட்டி
தொடர்ந்த செய்வினைத் தனித்தனித் தொழிலராய்ச் சூழ்வார்,
1060
(இ-ள்.) விடம்....அனேகர் - விடத்தைத் தீர்த்திடும் வித்தையிற் கைவந்த பெரியோர்களாகிய மேலவர்கள் அனேகர்கள் பற்றிய கொடிய விடத்தினைப் போக்குதற்காகச் சேர்ந்தார்களாகி; திடங்கொள்.... சூழ்வார் - வலிமையுடைய மந்திரமும் தியானமும் பாவனையும் முட்டி நிலையுமாய்த் தொடர்ந்த தீர்வுச் செயல்களைத் தனித்தனி செய்வாராய்ச் சூழ்ந்து,
(வி-ரை.) விடந் தொலைத்திடும் விஞ்சை - விடத்தை தீர்க்கும் காருட வித்தை (2961); கருட மந்திரங் கைவருதலால் பாம்பின் விடத்தைத் தீர்க்கும் ஒரு வித்தை. பெரியர் - அனுபவம் வல்லோர்; மேலோர் - அவருள் தலைவர்.
திடங்கொள் மந்திரம் - தியானம் - பாவனை - நிலைமுட்டி - திடமாவது - உறுதியாய்ப் பயனளிக்கும் தன்மை. மந்திரம் - கருட மந்திரம்; தியானம் - மந்திரத்தினிற் குறிக்கப்பட்ட - மந்திரத்துக்கு அதிதெய்வமாகிய - மூர்த்தியை அழுந்தியறிதல்; "உருவெண" (தேவா); பாவனை - மாந்திரிகன் அம்மந்திரமூர்த்தியாக தன் ஆன்மாவைப் பாவித்தல்; முட்டிநிலை - விடவேகந்தலைக்கொண்போது அதனைத் தணித்தற் பொருட்டு மாந்திரிகன் தனது கைவிரல்களிற் பெருவிரலை விடுத்து ஏனை நான்கு விரல்களையும் முட்டியாக மடித்துக்கொண்டு உச்சிமுதல் கடிவா யிறுதியாக விடந் தீண்டப்பட்டோ ருடலைத் தடவுதல். முட்டி நிலை - என்க. இவை நான்கும் தொடர்ந்து ஒன்றாய் வருதலால் தொடர்ந்த செய்வினை என்றார்.
சூழ்வார் - செய்யவும் (2959) என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க.
தனித்தனித் தொழிலராய் - அவ்வவரும் தாந்தாம் கற்ற எல்லை அளவும் செய்வார்களாகி.
பாவகம் - பாவனை. உயிர் தன்னைச் சிவமாகப் பாவிக்கச், சிவமாகும் நிலைசிவோகம்பாவனை எனப்படும்; அதற்கு எடுத்துக்காட்டாகத் தேற்றமாய்க் கூறப்படுவது இக் கருடபாவனையாம்; கருடோகம்பாவனை என்பர். கருட பாவனையாவது; "ஆதிபௌதிக கருடன், ஆதிதைவிக கருடன், ஆதியான்மிக கருடன் எனக் கருடன மூன்று வகைப்படும். இவ்வாறு பொருடோறுங் கண்டுகொள்க. ஈண்டு ஆதி -அதி - இடத்தில்; அவற்றுள் உலகத்துக் காணப்படுங் கருடன் ஆதிபௌதிக கருடன். அதற்கு அதிதெய்வமாக மாந்திரிகன் உள்ளத்தில் அதுபோல்வைத்துக் கணிக்கப்படும் மந்திரம் ஆதிதைவிக கருடன்; அம் மந்திரத்தினிடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன்கொடுப்பதாகிய சிவசத்தி ஆதியான்மிக கருடன் எனப்படும்; அவற்றுள், ஈண்டுக் "காருட விஞ்சை" என்றதிற் கருடன் என்றது கருடனுக் கதிதெய்வமாய் மாந்திரிகனுளத்திற் காணப்படும் மந்திர ரூபமாகிய அதிதைவிக கருடனை. அதனைப் பாவித்தலாவது நாடோறும் பயின்றுவந்த பயிற்சி விசேடத்தான் அம்மந்திர ரூபமே தானாக அநந்நிய பாவனை செய்து தன்னறிவு அதன் வாமாம்படி உறைத்து நிற்றல். அங்ஙனம் நின்று அம்மந்திரக் கண்கொண்டு பார்ப்பவே அஃது அவ்வவிடவேகத்தை மாற்றுதல் ஒருதலையாகலின், அப்பாவனை ஈண்டைக்கு உவமையாயிற்று. இதனானே, கருடபாவனை சத்தியமா மென்பதூஉம், அதனை அசத்தியமென்பார் மதம் போலியென்பதூஉந் தெற்றென உணர்ந்துகொள்க. புள்ளு, விலங்கு, மரம் முதலிய சராசரங்களுக்கெல்லாம் அதிதெய்வ மந்திரம் உளவென்பதூஉம், படிகம்போல அதுவதுவா மியல்புடைய ஆன்மா அவற்றுள் எவ்வெம் மந்திரங்களைக் கணிப்பினும் அவ்வம்மந்திர சொரூபியாவா னென்பதூஉஞ், சர்வஞ்ஞானனோத்தர முதலியவற்றுட் காண்க" (சிவஞான மாபாடியம் - 9-சூ. 2-அதி).
சூழ்வார் - செய்யவும் (2959) - தீர்ந்திலதா(க) - வித்தகர் (2960) - இது விதி என்று ஓவும் வேலையில் - சுற்றமும் - விழுந்து - அழுதனர் - என இம்மூன்று பாட்டுக்களை முடித்துக்கொள்க. தீர்ந்தீலதால் (2959) என்றதனை முற்றாக வைத்து முடித்துக் கொண்டு மேல்வரும் பாட்டை வேறுமுடிபாக்கினு மிழுக்கில்லை.
செய்வினை - தீர் தொழில். மேல் "திருந்து செய்வினை" (2961) என்பார்.
தனித்தனித் தொழிலராய் - அவ்வவர் தத்தம் திறம் முழுதும் செலுத்திக் காண்பாராய்.
சூழ்வார் - சூழ்தல் - ஆழ எண்ணுதல். உடலைச் சுற்றி என்பதுமாம்.