ஆவி தங்குபல் குறிகளு மடைவில வாக மேவு காருட விஞ்சைவித் தக"ரிது விதி"யென் றோவும் வேலையி லுறுபெருஞ் சுற்றமு மலறிப் பாவை மேல்விழுந் தழுதனர் படரொலிக் கடல்போல். | 1062 | (இ-ள்.) ஆவி.....இலவாக - உயிர் உடம்பினுள் தங்குதற்குரிய பல குறிகளும் பொருந்துதல் இல்லையாக; மேவு...வேலையில் - வந்து பொருந்திய காருடவித்தை வல்லவர்களும் "இது விதி" என்று கைவிட்டொழியும் வேலையில்; உறுபெரும்.....கடல்போல் - உற்ற பல சுற்றத்தார்களும் கடல்போல் அலறிப் பாவை மேல் விழுந்தழுதனர். (வி-ரை.) ஆவி தங்கு பல் குறிகள் - இவை உயிர்ப்பு - வெப்பம் - அசைவு - முதலாயின; அடைவு - இருத்தல் - தங்குதல்; ஆக - ஆதலின். இது விதி - இது விதியின் விளைவு; ஊழான் வந்தது - மனித முயற்சியாற் பயனின்று - எனக் கைவிடும் நிலை. வித்தகர் - கைவந்த புலவர்; முன் "பெரியராம் மேலோர்" (2959) என்றமை காண்க. Experts என்பர் நவீனர். ஓவும் வேலை - ஓவுதல் - நீங்குதல் - ஒழிதல்; உயிர் போய்விட்டது என்று கைவிட்ட நேரம்; "ஓவு நாளுணர் வழியு நாளுயிர் போகு நாளுயர் பாடைமேல்" (தேவா - நம்பி); "போவார்க ளிதுநம்மாற் போக்கரிதா மெனப்புகன்று" (1319); "குண்டர்களுங் கைவிட்டார்" (1320). பாவைமேல் விழுந்தழுதனர் - இறந்தா ருடலின்மேல் விழுந்தழுதல் நெருங்கியஅன்புடையாரின் துயர மிகுதியின் செயலாகிய மெய்ப்பாடு. "மைந்தன் மீமிசை வீழ்ந்து மயங்கினாள்" (கந்தபு. பானு. வதை - 194). படர் ஒலிக்கடல்போல் - பரப்பும், பேரொலியுடைமையும் உவமத்தின் பொதுத் தன்மைகள்; வினையும் மெய்யும்பற்றி வந்த உவமம். விழுந்தழுதது - என்பதும் பாடம். |
|
|