பாடல் எண் :2962
முரசி யம்பிய மூன்றுநா ளகவையின் முற்ற
அரசர் பாங்குளோ ருட்பட வவனிமே லுள்ள
கரையில் கல்வியோர் யாவரு மணைந்துங் காட்சிப்
புரையில் செங்கையிற் றீர்ந்திடா தொழிந்திடப் போனார்.
1064
(இ-ள்.) முரசு.....அகவையின் - முன் கூறியவாறு பறைசாற்றிய பின் மூன்று நாள் எல்லையளவில்; முற்ற...அணைந்து - அரச சபையிலுள்ளோர்கள் உட்பட உலகத்தில் உள்ள எல்லையில்லாத கல்வியுடையோர் யாவர்களும் முற்ற வந்தணைந்து; தம் காட்சி.....போனார் - தாந்தாம் உறுதியாய்க் கைகண்ட குற்றமற்ற தீர்தொழில்கள் எவற்றாலும் தீராதொழிந்தமையாற் போயினார்.
(வி-ரை.) மூன்றுநா ளகவையில் - பறை சாற்றிய எல்லையின் அளவாகிய மூன்றுநாள் அளவின்கண். அகவை - ஏழனுருபு. "ஆடித்திங்க ளகவையின்" (சிலப் - உரைபெறுகட் - 3). மூன்றுநா ளளவும் உடலின்தாதுக்கள் சிதைவுபடாது நிறுத்தவல்லதொரு அமைதி அக்காலத்தும் உள்ளதுபோலும்.
முற்ற - யாவரும் - என்று கூட்டுக; ஒருவருமொழியாமே எல்லாம்.
அரசர் பாங்குளோர் - அரச சமகப் புலவர். கலைத்துறைகள் எவற்றினும் வல்லோர்களை அரசர் கூவித் தேர்ந்து தக்கோரைத் தமது சமுகத்தில் வைத்து ஆதரித்து நாட்டுக்கு நலஞ் செய்வித்தல் முன்னைநாள் வழக்கு; இறையனாரகப்பொருள் வரலாறு, சங்க வரலாறு, திருவாதவூரடிகள் வரலாறு, திருத்தொண்டர் புராண வரலாறு முதலியவையும், முன்னைநாள் தமிழரசர் காலத்து நாட்டு நடப்புச் சரிதங்களும், கல்வெட்டுக்கள் முதலியவையும் காண்க. இங்குக் கூறிய அரசர் கச்சிமாநரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மரபில் வந்த சிம்மவிட்டுணுவும் அவன் மகன் மகேந்திர வர்மனும் ஆவார்கள் என்பது கருதப்படும்.
அவனிமேலுள்ள கரையில் கல்வியோர் - அரசர் பாங்கு பெறாத உலகில் விளங்கிய பெருங் கலைவாணரும் பலருண்டாதலின் அவர்களும்.
காட்சிப் புரையில் செய்கை - காட்சியாவது ஈண்டுக் கைகண்ட பயனைத்தருவது என்ற பொருளில் வந்தது. காட்சிச் - செய்கை - பண்புத் தொகை. புரையில் செய்கை - குறைபாடில்லாத தீர்தொழில். காட்சியும் செய்கையும் என்று உம்மைத் தொகையாக்கி உரைப்பினுமமையும்; இப்பொருளில் காட்சியாவது பார்வையால் விடத்தைத் தீர்க்கும் கலையின் முறை; "பார்த்த பார்வையா லிரும்புண்ட நீரெனப் பருகும் தீர்த்தன்" (திருவிளை. புரா) என்று கூறப்படும் தீக்கைமுறை இதற்கு மொக்கும்.
முரசியம்பலும் - என்பதும் பாடம்.