சீரின் மன்னிய சிவநேசர் கண்டுள மயங்கிக் காரின் மல்கிய சோலைசூழ் கழுமலத் தலைவர் சாரு மவ்வள வும்முட றழலிடை யடக்கிச் சேர வென்பொடு சாம்பல்சே மிப்பது தெளிவார், | 1065 | (இ-ள்.) சீரின்....மயங்கி - சிறப்பின் நிலை பெற்ற சிவநேசர் அதனைக் கண்டு மயங்கி; காரின்.....அவ்வளவும் - மேகங்கள் தவழ்தற்கிடமாகிய சோலைகள் சூழும் சீகாழித் தலைவராகிய பிள்ளையார் சாரும் அந்நாள் அளவுவரையிலும்; உடல்.....தெளிவார் - பாவையாரின் உடம்பினைத் தீயினிவிட்டு அடங்கச்செய்து அதனிற் சேரும் எலும்போடு சாம்பலைச் சேமித்து வைப்பது என்று தெளிவாராகி, (வி-ரை.) உளம் மயங்கி - தமது மகளார் விடந்தீண்டி யிறந்துபட்டமை பற்றி யன்றி, ஈண்டு மயங்கியமை பிள்ளையாருக்குக் கொடுக்கப்பட்டமையால் அவர் வருமளவும் அவரது உடைமையாகத் தம்மிடம் வைக்கப்பட்ட பொருளைப் பாதுகாக்க வியலாமற்போயினமைபற்றி, இனி இன்னது செய்வதென்று தோன்றாது மயங்கினர் என்க. அஃது அன்னதாதல் மேல் தெளிவார் என்றதனாற் காணப்படும். காரின் மல்கிய - மேகங்களால் நிறைந்த; மேகமண்டலமளவும் உயர்ந்த என்றலுமாம். இந்திரன் சீகாழியில் வைத்துயர்ந்த நந்தனவனத்தின் குறிப்புமாம். கழுமலம் - சீகாழியின் பன்னிரண்டாவது திருப்பெயர். கழுமலத் தலைவர் சாரும் அவ்வளவும் - சேமிப்பது - அவரது உடைமைப் பொருளாய்த் தம்பால் வைத்திருந்த பாவையாரின் உடலை அவ்வண்ணமே ஒப்புவித்தற்கியலாமையின் எந்த அளவில் அதனைச் சேமிக்க இயலுமோ அவ்வளவில் சேமித்து வைத்திருந்து அவர்பால் அவர் வரும்போது ஒப்புவித்தல் வேண்டும் என்பது சிவநேசர் கொண்டகருத்து. அது தகுதியாமோ? எனின், அன்புமீதூர்ந்த நிலையிற் செய்யப்படுவனவெல்லாம் தகுதியே என்க. "ஆறாத வானந்தத் தடியார் செய்த வநாசாரம் பொறுத்தருளி யவர்மேலென்றுஞ், சீறாத பெருமானை" (தாண் - மாற்பேறு - 5); பின்னர்ச் சரித விளைவின்பொருட்டு இந்நினைவினை இறைவர் உடனிருந்து சிவநேச ருள்ளத்தில் நினைப்பித்தனர் என்றலுமாம். "நானேது மறியாமே யென்னுள் வந்து நல்லனவும் தீயனவுங் காட்டா நின்றாய்" (தேவா) என்பது முதலிய திருவாக்குக்கள் காண்க. "பத்தர் சொன்னவும் பன்னப் படுபவோ?" என்றபடி இதன்மேல் இவற்றை ஆராய்ச்சி செய்தல் அமையாதாம். "கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா" (தேவா - பாசுரம்) என்பது மறைமொழி ஆணை. கழுமலம் - பாவையாரைச் சிவஞ்சாரச் செய்வது குறிப்பு. உடல் தழலிடை அடக்கி - என்பொடு - சாம்பல் - சேமிப்பது - ஐம்பூதச் சேர்க்கையாலாகிய உடல் தழலிடை எரிக்கப்பட்டபோது, அவை வெவ்வேறு பிரிந்து அவ்வப்பூத மூலங்களுள் சேர, எஞ்சிய எலும்புஞ் சாம்பலுமாகிய உருவத்தினுள் அடங்கி நிற்கும் என்பது குறிக்க உடல் - அடக்கி என்றார். "முடிவிலொரு பிடிசாம்பராய் வெந்து" (பட்டினத்தார்). உடலைத் தைலம் - ஏனை மருத்து நீர் - முதலியவற்றுள் இட்டுச் சேமிக்கும் முறைகளும் உண்டு; அவை நவீனர்களாலும் கையாளப்படுவன. தசரதனது உடம்பைத் தைலம் ஆட்டிச் சேமித்தமையும், தேள் - பாம்பு -முதலிய சில பிராணிகளின் உடலைத் திராவகத்துள் இட்டுச் சேமிக்கும் முறைகளும் காண்க. உடலினை உள்ளும் புறமும் மருந்துப் பண்டங்களாற் பொதிந்து நீண்ட காலம் சேமிப்பது முற்காலம் இஜிப்தியர்கள் கையாண்டதொருமுறை (Egyptian Mummies). ஆனால் அவையெல்லாம் சிலகாலம் நிற்பனவும், உடல் உருவ நிற்பினும் விடத்தன்மை கொண்டு கேடுறுவனவும் பிறவுமா யொழிதலன்றித் தூய்மைக்குப் பொருந்துவனவல்ல; தூஉடல் முடிவில் எலும்பும் சாம்பலுமாய் நிற்பதும், பல்லாற்றாலும் எளிதாய் அவ்வாறு சேமித்தற்குரியதாவதும், தொன்றுதொட்டு நம் நாட்டின் முந்தையோர் கண்டு கையாண்டுவந்த முறைகளாம்; அன்றியும் ஊழிக் காலத்தில் தீயினாற் சங்கரிக்கப்பட்ட உலகம் சாம்பராகி ஒழிந்து ஒடுங்கி மீளவும் ஆண்டுநின்றும் தோன்றுகின்றது என்றது சைவ சித்தாந்த உண்மையாதலின் அதனைத் தமதுள்ளத்துள்வைத்துச் சிவநேசர் இவ்வாறு தெளிந்தனர் என்ற குறிப்பு அடக்கிச் - சாம்பல் - சேமிப்பது தெளிவார் - என்றமையாற் பெறப்படுதல் காண்க. சிவநேர் என்ற பெயரால் இங்குக் கூறியமையும் இக்குறிப்பு. சேர - முழுமையும்கூட; உடலின் எல்லாப் பகுதிகளின் எஞ்சியவை எல்லாம் ஒன்றுசேர. சாரும் அவ்வளவும் - தலைவர் அங்குச் சாருநாள் எப்போது கூடுமென்பது அறியவாராமையின் எந்நாளாயினும் அந்நாள் வரையும் என்பதாம். ஆதலின் எதுநாளாயினும் அதுவரை எல்லையின்றிச் சேமமாயுள்ளது சாம்பர் உருவமே என்பதும் தெளிந்தனர் என்க. மருத்துநூலவரும் குறித்த சிலகால எல்லை அளவே சத்திகொள்ளும் நெய், இலேகியம், சூரணம், எண்ணெய் முதலியவை போலாது, நீடித்து இருக்கவேண்டுவனவற்றைப் பசுமம்=நீறு =சுண்ணம் ஆக்கிவைத்தல் கருதுக. தழலிடை அடக்கி - உடலை மண் - நீர் - முதலியவற்றுள் அடக்காமல் நெருப்பினுள் இட்டு அதனுள் ஒடுங்கும்படி அடக்கி. அப்பெரிய உடலுருவமே இச்சிறிய சாம்பரிடை நிற்கச் செய்தல் தீயின் செயலாதலின் தழலிடை அடக்கி என்றார். அடக்கம் செய்தல் என்பது இறந்த உடலைச் சேமித்தற்கு வரும் மரபு வழக்கு. தெளிவார் - புகப்பெய்து - வைப்பார் - வைத்தனர் (ஆகி) - செய - என மேல்வரும் பாட்டுக்களுடன் முடிக்க. |
|
|