பாடல் எண் :2964
"உடைய பிள்ளையார்க் கெனவிவ டனையுரைத் ததனால்
அடைவு துன்புறு வதற்கிலை யாநமக்" கென்றே
யிடரொ ழிந்தபின், னடக்கிய வென்பொடு சாம்பல்
புடைபெ ருத்தகும் பத்தினிற் புகப்பெய்து வைப்பார்,
1066
(இ-ள்.) உடைய....என்றே - ஆளுடைய பிள்ளையார்க்கு இவளை அளித்தேன் என்று சொல்லிவிட்டபடியால் இந்நிகழ்ச்சிபற்றி நமக்குத் துன்பமுறுவதற்கில்லையாம் என்று துணிந்தே; இடர் ஒழிந்தபின் - துன்ப நீங்கியபின்; அடக்கிய....வைப்பார் - தீயினில் எரித்த எலும்பினையும் சாம்பலையும் பக்க இடமகன்ற கும்பத்தினில் புக இட்டு வைப்பாராய்
(வி-ரை.) உடைய பிள்ளையார்க்கு......என்றே - சிவநேசர் கொண்ட (2964) மயக்கம் நீங்கியது இன்ன வகை என்று கூறியபடி. பிள்ளையார்க்கென உரைத்ததனால் - இவளைப் பிள்ளையாருக்குக் கொடுத்தேன் என்று சொல்லிவிட்டமையால் இவள் அவரது உடைமைப் பொருளாயினமையாலே; மணச் சடங்கில் பெற்றோர் கன்னிகையைக் கொடுத்தோம் என்று கூறும் சடங்கும், அதனால் அக்கன்னிகை மணமகனுக்கு உரிய உடைமைப் பொருளாய்விடுகின்ற நிலையும், அதன் பின்னர் அவளது இன்பத் துன்ப முதலிய நிகழ்ச்சிகள் யாவும் மணமகனுடையவையே யாகின்ற நிலையும் ஈண்டு வைத்துக் கருதத் தக்கன; உரைத்ததனால் துன்புறதல் நமக்கில்லை என்று காரணக் குறிப்புப்படக் கூறியதும் காண்க. பெற்றோரது இசைவே மணமாம் என்ற துணிபு திலகவதியம்மையார் வரலாற்றுட் காண்க.
அடைவு - நேர்ந்த செயல்; அடைந்த நிகழ்ச்சி; அடைவின் பொருட்டு. அடைவு - முறைமை என்று கொண்டு துன்புறுதற்குரிய முறைமை நமக்கில்லை என்றுரைத்தலுமாம்.
நமக்கு - தமது மனைவியாரையும் சுற்றத்தாரையும் உளப்படுத்திக் கூறிய பன்மை என்றே - என்று துணிந்தே; ஏகாரம் தேற்றம்.
உரைத்ததனால்....இலையாம் நமக்கு - என்றது தம்மைப் பிள்ளையாரின் வேறாய் எண்ணிய நிலையன்று. "இன்றோ ரிடையூ றெனக்குண்டோ?"; "நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானே விதற்கு நாயகமே" (திருவா) என்ற கருத்தினை இங்கு வைத்து க் காண்க. அவரதுடைமையினை இனி ஏற்றபெற்றி காவல் செய்து அவர்பால் ஒப்புவிப்பேன்; அதுவே எனது கடமை என்றபடி.
இடர் ஒழிந்தபின் - இங்கு இடர் என்றது இதுவரை பாவையாரைத் தமது மகளாராகக் கொண்ட நிலையில் தாம் அடைந்த "உறுதுயர்" (2958); "வெந்துயர்" (2962) முதலியவை.
அடக்கிய - தழலிடை அடக்கியதனாற் பெற்ற; அடக்குதல் - தீயினில் எரித்தலால் சேமித்தல்; இதன் கருத்து மேல் உரைக்கப்பட்டது.
புடை பெருத்த கும்பம் - வாய் சிறுத்துப் பக்கம் பெருத்த மட்குடம்.
புகப்பெய்து - எலும்பினையும் சாம்பலையும் குடத்தினுள் புகும்படி மென்மையாய்வைத்து. பெய்து - வைத்த மென்மை குறித்தது.
வைத்தார் - என்பதும் பாடம்.