பாடல் எண் :2965
கன்னி மாடத்தின் முன்புபோற் காப்புற வமைத்துப்
பொன்னு முத்துமே லணிகலன் பூந்துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை விரைப்பள்ளி யதன்மேன்
மன்னு பொன்னரி மாலைக ளணிந்துவைத் தனரால்.
1067
(இ-ள்.) கன்னிமாடத்தில்.....அமைத்து - கன்னிமாடத்திலே முன்பாவை உயிருடனிருக்குநாளிற் போலவே காவல் பொருந்த (ஆக்குடத்தை) அமையவைத்து; பொன்னும்......சூழ்ந்து - பொன்னும் முத்தும் மேல் அணிகலன்களும் அழகிய மெல்லிய துகிலும் சுற்றிப் புனைந்து; பன்னு.....அணிந்து வைத்தனரால் - எடுத்துச் சொல்லப்பட்ட அன்னத்தின் தூவியினை அடைத்த பஞ்சணையாகிய வாசனை பெய்த பள்ளியின் வைத்து அதன்மேல் நிலைபெற்ற பொன்னரியாகிய கழுத்தணிவகைகளையும் அணிபெறக் கோலஞ்செய்து வைத்தாராகி,
(வி-ரை.) இப்பாட்டினும் மேல்வரும் பாட்டினும் பாவையாரின் எலும்பையும் சாம்பலையும் பெய்துவைத்த குடத்தினை அப் பாவையாராகவே கொண்டு அணிந்து வைத்துச் சிவநேசர் புரிந்துவந்த உபசாரங்கள் கூறப்படுவன. என்னை? பாவையாரின் உடல் தீயிடை யடக்கிப்பெற்ற அந்நிலை அவரது சுருங்கிய உடலேயாம். உள்ளதாகப் பாவிக்கப்பட வருவதொன்றென்பது உண்மை. "நன்மையாந் தன்மை, அந்த வென்பொடு தொடர்ச்சியாம்" (2985) எனப் பிள்ளையார் பின்னர்க் காட்டயாவராலும் அறியப்படுவதாம். ஆதலின் அவ்வாறு உடலையும் உயிரையும் ஒன்றுபடுத்திச் சிவநேசர் பாவித்தனர் என்க; அன்றியும் பிள்ளையாரது உடைமையாக எண்ணினாராதலின் அவர் பொருளைப் போற்றும் முறையாலும் உபசரித்து வந்தனர் என்பதுமாம்.
முன்புபோல் - முன்பு பூம்பாவையார் உயிருடன் இருந்தநாளிற் போலவே. காவல் செய்தமைத்தற்குக் காரணம் கூறியபடி.
பொன்னும்.......சூழ்ந்து - இஃது அக்குடத்தினை அப் பாவையாரெனவே அலங்கரித்தல்; சூழ்தல் - சுற்றியணிதல்; எண்ணிச் செய்தல் என்றலுமாம்.
பன்னு தூவியின் பஞ்சணை - தூவி - அன்னத்தின் மெல்லிய சிறு இறகு; தூவி போன்ற நுண்ணிய பஞ்சடைத்த அணை; தூவியாலாகிய பஞ்சணை என்றலுமாம் பன்னுதல் - குற்றங் களைதல் என்ற குறிப்புமாம். விரைப் பள்ளி - வாசனைப் பண்டங்களால் மணமூட்டிய பள்ளி.
பள்ளி அதன்மேல் - குடந்தை வைத்த ஆதனம் கூறியபடி.
பொன்னரி மாலைகள் - கழுத்தணி வகைகள். இவை அவ்வாதனத்தின் மேலே கட்டிலின் மேற்கட்டி, விதானங்கள் முதலியவை அமைந்த அணிவகை.