பாடல் எண் :2968
சொன்ன வர்க்கெலாந் தூசொடு காசுபொன் னளித்தே
யின்ன தன்மைய ரெனவொணா மகிழ்சிறந் தெய்தச்
சென்னி வாழ்மதி யார்திரு வொற்றியூ ரளவுந்
துன்னு நீணடைக் காவணந் துகில்விதா னித்து,
1070
(இ-ள்.) சொன்னவர்க்கெலாம்......அளித்தே - முன்கூறிய நல்வார்த்தையினை வந்து சொன்னவர்களுக்கெல்லாம் சிவநேசர் தூசும் காசும் பொன்னும் அன்போடு கொடுத்தே; இன்ன...எய்த - இன்ன தன்மைதான் பெற்றார் என்று சொல்லமுடியாத மகிழ்ச்சி மேலோங்க; சென்னி....விதானித்து - தலையினில் வாழ்வுபெறும் மதியினைத் தாங்கிய சிவபெருமான் எழுந்தருளிய திருவொற்றியூர் அளவும் நெருங்கும் நீண்ட நடைக்காவணமிட்டுத் துகிலால் விதானமும் கட்டி,
(வி-ரை.) சொன்னவர்க்கெலாம்...அளித்தே - முன்னர்ச் "சொன்னவர்க்கெலா மிருநிதி தூசுட னளித்து" (2951) என்றுரைத்தவை பார்க்க.
இன்ன.....மகிழ் - இன்னபடி யென்று அளவபடாத தன்மையிற் பெருகிய மகிழ்ச்சி. "இன்னபரி சானானென் றறிந்திலன் வேந்தனும்" (132).
திருவாற்றியூரளவும் - திருமயிலாபுரியின்றும் திருவொற்றியூர் வரையும்; இது பத்து நாழிகையளவு கொண்ட தூரம்; இவரது அன்பு நீண்டுசெல்லும் தன்மை குறித்தது.
நடைக்காவணம் - துகில் விதானித்து - நடைப்பந்தலமைத்து அதனில் மேற்றுகில் விதானமும் கட்டி; விதானம் - மேற்கட்டி; இஃது அணிவகை யாவதன்றிப் பந்தரின் கீழ் வெயில் - காற்று - பனி முதலியவை தாக்காது நிழலாற்றும் பயனு முடையது; பத்து நாழிகையளவும் நடைக் காவணமும் துகில் விதானமும் செய்தலும், அவ்வளவும் தோரணம் கமுகு கதலி நாட்டி அணிசெய்தலும் சிவநேசர் பிள்ளயார்பாற் கொண்ட அழுந்திய அன்பின்றிறத்தினை விளக்குவன. இந்நாள் மக்கள் செய்யும் உபசார வகைகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்க உண்மை விளங்கும். துணிக்கு சோற்றுக்கும் உயிர்ப்பிச்சை வாங்கும் இந்நாளில் இதன் ஏற்றம் நன்கறியக்கிடக்கும்.
வாழ் மதிச் சென்னியார் - என்க; வாழ் - வந்தடைந்து வாழ்வுபெற்ற.
மகிழ்ச்சி வந்தெய்த - என்பதும் பாடம்.