பாடல் எண் :2969
மகர தோரணம் வண்குலைக் கமுகொடு கதலி
நிகரில் பல் கொடித் தாமங்க ளணிபெற நிரைத்து
நகர நீண்மறு கியாவையு நலம்புனை யணியாற்
புகரில் பொன்னுல கிழிந்ததா மெனப்பொலி வித்தார்;
1071
(இ-ள்.) மகர தோரணம்...நிரைத்து - மகர தோரணங்களும், வளப்ப மிக்க குலைக் கமுகுகளும், வாழைகளும், ஒப்பற்ற பல கொடிகளும் மாலைகளும் என்றிவற்றை அழகு பொருந்த வரிசையாக அமைத்து; நகர நீண்மறுகு....பொலிவித்தார் - நகர முழுமையும் உள்ள நீண்ட தெருவுகள்எல்லாவற்றையும் நலம்பொருந்தச் செய்த அலங்காரங்களினால் குற்றமில்லாத தேவலோகமே கீழிறங்கியதாம் என்று சொல்லும்படி அழகு செய்தனராய்,
(வி-ரை.) மகர தோரணம் - துணியில் மகரம் முதலியவையும் பூங்கொடிகளும் தீட்டித் தொங்கல்களையும் வைத்த தோரண வகை. வண்குலைக்கு கமுகு - எண்ணற்றனவாய்க் காய்களைக் கொண்ட குலைகளையுடைய; வண்குலை என்பதனைக் கதலியுடனும் கூட்டுக. ஒடு உருபும் இப்பொருட்டு.
தாமங்கள் - தோரணங்களினிடையே தொங்கவைப்பனவும் வேறு அங்கங்கும் கட்டுவனவும்.
கொடித் தாமங்கள் - கொடிகளும் மாலைகளும்; கொடிகள் படர்ந்தனபோல அணிந்த மாலைகள் என்றலுமாம்.
புகரில் பொன்னுலகு இழிந்ததாம் என - புகர் - குற்றம்; பொன்னுலகு தேவருலகம். இழிந்ததாம் - வந்திறங்கியதாம்; இழிவுபட்டதாம் என்றதும் குறிப்பு.
நீண்மறுகு - நீண்ட பெரிய தெருவுகள்; தெருவுகள் வளைதலின்றி யகன்று நீண்டு இருத்தல் நகர அமைப்பின் சிறப்பு என்பர். "மலிவிழா வீதி" என்று இச்சிறப்பினைப் பிள்ளையார் அருளுதல் காண்க. இவ்வாறு சிவநேசர் நடைக்காவணம் அமைத்து அணிசெய்த நிலை திருமயிலாவுரியினின்றும் திருவொற்றியூர் வரை தொடர்ந்து செல்லும் கடற்கரையோரப் பெருவழியேபோலும் என்பது கருதப்படும். "விடுங்கலங்க ணெடுங்கடலு ணின்று தோன்றும்" (தாண்டகம்) என்று, "ஒல்லைதான் றிரையேறியோத மீளும்" என்றும், "வடிவுடைய மங்கையுந் தாமுமெல்லாம் வருவாரை யெதிர்கண்டோ மயிலாப்புள்ளே, செடிபடு வெண்டலையொன் றேந்திவந்து திருவொற்றி யூர்புக்கார்" என்றும், "ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலை" (பிள். தேவா) என்றும், "துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றும் சோதித் தொன்மயிலை" (நம்பி) என்றும், "அருங்கலம் பலவும் பொருகடற் செலப்போக்கி" (2932) என்றும் வருவனவற்றாலும் பிறவாற்றலும் திருமயிலையும் திருஓற்றியூரும் அந்தநாளில் கலங்கள் போக்கும் துறைமுகங்களாக விளங்கியமையும், இவையிரண்டும் கடலோரம் அலை வீதிவழியில் மக்கள் செல்லும் தொடர்புடையவை என்றும் கருத இடமுண்டு. திருமயிலைக் கோயிலும் அந்நாளிற் கடற்கரையின் நின்ற தென்பது சரிதம்.
செய்வித்தார் - செய்வித்தாராகி - முற்றெச்சம்.