அத்தி றத்துமுன் நிகழ்ந்தது திருவுள்ளத் தமைத்துச் சித்த மின்புறு சிவநேசர் தஞ்செயல் வாய்ப்பப் பொய்த்த வச்சமண் சாக்கியர் புறத்துறை யழிய வைத்த வப்பெருங் கருணைநோக் கான்மகிழ்ந்த தருளி, | 1076 | (இ-ள்.) அத்திறத்து......அமைத்து - வணிகரது அத்திறத்தினில் முன்னே நிகழ்ந்த நிகழ்ச்சியினைத் தமது திருவுள்ளத்தே (பிள்ளையார்) அமைத்துக்கொண்டருளி; சித்தம்.....வாய்ப்ப - மனத்தில் இன்புறும் திருத்தொண்டராகிய சிவநேசரது செயல்வாய்த்திட; பொய்த்த வச்சமண்....அழிய - பொய்யாகிய தவத்தை மேல்கொண்டுழலும் சமணர் சாக்கியர்களுடைய புறத்துறைகள் அழிய; வைத்த.....மகிழ்ந்தருளி திருவுளங்கொண்ட அந்தப் பெரிய திருஅருள் நோக்கத்தினால் மகிழ்ந்தருளி, (வி-ரை.) அத்திறத்து முன் நிகழ்ந்தது - முன் பாட்டிற் கூறியபடி அடியவர்கள் சொல்லிய "வணிகர் செய்திறம்" (2973). திருவுள்ளத்து அமைத்து - தமது திருவுள்ளத்துட்கிடையாகக் கொண்டு; மனங்கொண்டு. சித்தம் இன்புறு சிவநேசர் தம் செயல் வாய்ப்ப - இன்புறும் - "அடைவு துன்புறுவதற் கில்லையா நமக்கென்றே, யிடரொழிந்த பின்" (2964) என்றபடி மகளார் போயினமைபற்றி இடரொழிந்தமையே யன்றிப் பிள்ளையாருக்கு ஆம்பரிசு எண்ணிமனத்தினுள் இன்பமும் கொண்டு விளங்கிய; செயல் வாய்த்தலாவது அவர் பாவையாரது உயிர் அங்கு இருப்பதாகவே பாவித்துச் செய்த உண்மையாகியே நிகழ. செயல் வாய்த்தல் - செயல் நிகழ்தல் பாவையார் உயிர் பெற்றெழுந்து வருதல் என்பது. பொய்........அழிய - நடுநாடு - சோழநாடு - பாண்டிநாடுகளில் அந்நாளில் எங்கும் பரவி இன்னல் விளைத்தமைபோலவே தொண்டை நாட்டிலும் அந்நாளில் இவ்வகையார்கள் பரவி நின்றனர் என்பதாம். புறத்துறை அழிய - சமண சாக்கியர்களழிய என்னாது அவர்களது கட்டுப்பாடாகிய புறச்சமயத் தீமை ஒழிய என்றமை காண்க.அவற்றால் சைவத் திறத்துக்கு நேரும் தீமைமட்டில் ஒழிப்பது கருத்து என்று முன் அங்கங்கும் உரைத்தமை காண்க. "அமண் - இருஞ் சாக்கியர்க ளெடுத்துரைப்ப" என்றது பதிகம். இதற்கு ஆசிரியர் "தேற்ற மில்சமண்சாக்கியத் திண்ணரிச் செய்யேற்ற தன்றென வெடுத்துரைப்பா ரென்றபோது" (2988) என்று பொருள் விரித்தமையும் காண்க. அவர்களது பொய்மை அழிந்துபோதலும் (2992) பின் உரைக்கப்படும். சமண் சாக்கியர்கள் அந்நாளில் (6-7-8-நூற்றாண்டுகளில்) தமிழ்நாடு முழுமையும் பரவிச் சைவத்துக்குக் கேடு சூழ்ந்தமை நாட்டு நடப்புச் சரிதத்தலும், அரசுகள்புராணம், தண்டியடிகள் புராணம், நமிநந்தியார் புராணம் முதலிய வரலாறுகளாலும், தேவாரத் திருவாக்குக்களாலும், பழைய கல்வெட்டுக்கள் முதலியவற்றாலும் அறியக்கிடக்கின்றது பொய்த்த அச்சமண் - என்று பிரித்து உரைத்தலுமாம். வைத்த அப் பெருங்கருணை நோக்கால் - மேற்கொண்ட அந்தப் பேரருள் திருநோக்கத்தால். முன் நிகழ்ந்தது....வைத்த அப் பெருங்கருணை நோக்கால் - வணிகர் செய்திறஞ் சொலக் கேட்டே திருநகரினை அணைந்து திருக்கபாலீச்சரத்தினை அணைகின்ற பிள்ளையார் வணிகரது அன்பின் திறத்தினுக்கு மகிழ்ந்து கருணைநோக்கம் கொண்டு அத்தகைய அன்பரது பேரன்பின் கருத்தை முற்றுவித்து அன்ப ரன்பின்றிறம் வெளிப்படுக்க நினைந்தருளினார்; செயல் வாய்ப்ப என்றது இக்குறிப்பு. இனி, அவ்வாறு மகிழ்விக்கும் ஒரு செயல்கொண்டே அன்பின் செய்கைக்கு மாறு விளைத்துநிற்கும் புறத்றைகள் அழியவும் திருவுளங்கொண்டருளினர். அச்செயலாவது விடத்தினால் வீந்த பின்னும் அவராகவே கொண்டு சிவநேசர் வழிபட்டுவரும் பூம்பாவையாரது எலும்பும் சாம்பரும் முன்போலப் பெண்ணாக உயிருடன் வரச் செய்தலாம் என்பதும் பிள்ளையார் திருவுளங்கொண்டருளினர். இது பிள்ளையார் இறைவரைக் கருதி வழிபட்ட (2976) தன்மையினாலும் அதனைத் தொடர்ந்து நிகழும் பின்நிகழ்ச்சியினாலும் அறியப்படும்; இவ்வாறு நினைந்தருளியமை தமது புகழும் பெருமையும் கருதியோ? அன்றிப், பாவையாரை அவர்தரத் தாம்பெறும் தன்மை கருதியோ? அன்றிப், பெருவணிகரின் மகிழ்ச்சி காணக் கருதியோ? அன்றி, வேறாய உலக நலங்கள் கருதியோ? அன்று என்பது வெளிப்படை; அன்பின்றிறமும் சிவனருளும் வெளிப்பாடுற்று உலகத்தை உய்விக்கவந்த பெருங்கருணைத்திற மொன்றே காரணமென்க. ஆளுடைய அரசுகள் அப்பூதியார் திருமகனாரை விடத்தினின்றும் நீக்கி யுய்வித்தநிலையின் காரணம்" அன்றவர்கள் மறைத்ததனுக் களவிறந்த கருணையரா" யினமை (1473) என்றும், நம்பிகள் முதலைவாயினின்றும் பிள்ளையை அழைப்பிக்கும் காரணம் "மைந்தன் றன்னை யிழந்ததுயர் மறந்து நான்வந் தணைந்ததற்கே சிந்தை மகிழ்ந்தார்" (வெள். சருக் - 9) என்ற நிலையா மென்றும் ஆசிரியர் காட்டியருளும் திறம் ஈண்டு நினைவுகூர்தற்பாலன. முன் (1473) உரைத்தவை பார்க்க (III - பக். 323 - 324). புறத்துறை அழிய - பரசமய நிராகரிக்கவும் நீறு ஆக்கவுமே பிள்ளையாரை இறைவர் அளித்தருளினா ராதலின் தொண்டை நாட்டிற் செய்யநின்று எஞ்சிய அப்பணியை நிறைவாக்க என்பது கருத்து. நடுநாட்டில் அரசுகளது வருகையாலும், பாண்டிநாட்டிலும் சோழ நாட்டிலும் பிள்ளையார் செய்கையாலும், புத்தர்வாத நிகழ்ந்த வகையாலும், மேலும் சோழ நாட்டில் நமிநந்தியார் தண்டியடிகள் நிகழ்ச்சிகளாலும் புறத்துறைகள் உண்மைச் சைவத்துக்கு இடையூறு விளைத்தநிலைகள் யழிந்தனவாதலின், எஞ்சி நின்றது தொண்டை நாட்டின் பணியேயாதலின் அதனைத் திருவுளங் கொண்டருளினர். ஈண்டுச் சமணர்கள் சைவத் திறங்களையும் திருத்தொண்டி னீர்மைகளையும் பலவாறு இழித்துரைத்து அடியவர்களுக்குத் துன்பம் விளைத்தனர் என்பது முன்னர்த் திருவோத்தூர் வரலாற்றில் "அமணர்,‘இங்கு நீரிட்டாக்குவன காய்த்தற் கடைவுண்டோ?' வென்று, பொங்கு நகைசெய் திழித்துரைத்தார்; அருளவேண்டு"மெனப் புகன்று (2876) அழுது வணங்கி விண்ணப்பித்த திருத்தொண்டர் செயலா லறிவிக்கப்பட்டமையின் ஆசிரியர் இங்குக் கூறிற்றிலர்; இங்குச் சிவநேசரது திருத்தொண்டின் றிறங்களையும் அவரது உலகியலிறந்த அன்பின் செயல்களையும் சமணர் முதலிய புறத்துறையாளர்கள் பலவாறும் இழித்துரைத்துத் துன்புறுத்தினர் என்பது கருதக்கிடக்கின்றது. பின்னர்ப் பிள்ளையார் பாவையாரின் எலும்பு நிறைந்த குடத்தைக் கோயிலின் முன் கொணரச் செய்தபோது "நன்றியில் சமயத்தி லுள்ளோர், மாடு சூழ்ந்துகாண்பதற்குவந் தெய்தியே மலிந்து" (2982) இழித்துரைக்க நிற்பதும், பாவையார் உயிர்பெற்றெழுந்தது கண்டபோது, "பங்கற் றாரே போன்றார் பரசம யத்தி னுள்ளோர், எங்குள செய்கை தான்மற் றென்செய்த வாறி தென்று, சங்கையா முணர்வு கொள்ளும் சமணர்தள் ளாடி விழ்ந்தார்" (2992) என்பதும் காண்க. "உரிஞ்சாய வாழ்க்கையமணுடையைப் போர்க்கு, மிருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப" (தேவா) என்ற பிள்ளையாரது திருவாக்கு இதற்கு வலிய அகச்சான்றாகும். புறத்துறையாளர்களின் இழிப்புரையினை இது குறிப்பா லுணர்த்திநிற்றல் காண்க. "தேற்ற மில்சமண் சாக்கியத் திண்ணரிச் செய்கை, யேற்ற தன்றென வெடுத்துரைப்பா" ரென்றபோது (2988) என்று ஆசிரியர் இதனைப் பொருள் காட்டுதலும் காண்க. எனவே இங்குப் பிள்ளையார் புறத்துறை யழியக் கருணைநோக்கம் கொண்டது, வலுக்கொண்டபோது ஏனையோர் செய்தல்போல மீச்சென்று புறமதங்களை அழித்தல் கருதியதன்று என்பதும், சைவர்கள் தற்காப்பின் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாத கடமைபற்றியே என்பதும் தெற்றென விளங்கும். பொய்த் தவம் - பொய்யினையே தவமென மேற்கொள்ளுதல். "கொல்லாமை மறைந்துறையும்" (1302) முதலியவை காண்க. இத்திருவுள்ளக் குறிப்புடன் திருக்கோயிலை அணைந்தனர் பிள்ளையார் என்பதாம். வினைமுடிபுகளும் காண்க. திருவுள்ளத்தடைத்து - தம்பணி - வெஞ்சமண் - என்பனவும் பாடங்கள். |
|
|