தேவ தேவனைத், திருக்கபா லீச்சரத் தமுதைப், பாவை பாகனைப், பரிவுறு பண்பினாற் பரவி, மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து நாவின் வாய்மையாற் போற்றினார் ஞானசம் பந்தர். | 1078 | (இ-ள்.) தேவ தேவனை - தேவதேவராயுள்ளவரை; திருக்கபாலீச்சரத்து அமுதை - திருக்கபாலீச்சரத்தில் எழுந்தருளிய அமுதம்போல்பவரை; பாவை பாகனை - அம்மையொருபாகரை; பரிவுறு...பரவி - அன்புபொருந்திய பண்பினாலே துதித்து; மேவு......விழுந்து - பொருந்திய காதலினாலே விரும்பிய விரைவினாலே நிலமுற விழுந்து பணிந்து; நாவின்....ஞானசம்பந்தர் - திருநாவிற் பொருந்திய உண்மைத் திருவாக்கினாலே திருஞானசம்பந்தர் போற்றியருளினார். (வி-ரை.) இப்பாட்டினாற் பிள்ளையார் கபாலீசரை வழிபட்டுப் போற்றிய முறையும் உட்குறிப்பும் கூறப்பட்டது. தேவதேவனை - கடலிற் பொங்கித் தேவர்களை அழிக்கவந்த ஆலாலமாகிய பெருவிடத்தை உண்டு கூட்டமாகிய தேவர்களை இறவாமற் காத்து, விடத்தை உண்டமையால் தாம் இறவாமல் தமது முழுமுதற்றன்மை அறிய நின்றவர். இவர் இச்சிறு விடத்தினின்றும் ஒருசிறு பாவையைக் காத்தல் அரிதன்று என்பது குறிப்பு. திருக்கபாலீச்சரத் தமுதை - அமுதசொரூபியாதலின் இறந்த உடலில் அமுதருளி வைத்து உயிர்ப்பிக்க வல்லவர் என்பது குறிப்பு. "அமுதம் துன்ன" (2986); பாவைபாகனை - அருட்பாவையாகிய அம்மையை ஒருபாகமுடைமையின் பாவையாகிய இப்பெண்ணுக்கு அருளுமியல்புடையவர் என்பது குறிப்பு. "வந்தெழுந்து பிடித்ததணி வளைத்தழும்பர் மலர்ச்செங்கை" (1202) என்றதும், "மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த விடக்கண் கொடுத்தார்" (3441=ஏயர்-புரா - 287) என்பதும், அவைபோன்ற பிறவும் பார்க்க. தேவதேவனை - அமுதை - பாவைபாகனை - இவ்வாறு வரும் உட்குறிப்புக்களுடையதிருவுள்ளத்துடன் பிள்ளையார் கபாலீச்சுரரைப் பாவித்து இறைஞ்சியருளினர். பரிவுறு பண்பினாற் பரவி - என்றது மிக்கருத்து. பரிவுறு பண்பாவது பாவையார் மேலும், சிவநேசரது அன்பின்றிறத்திலும் கொண்ட அருட்பண்பு. பரவி நாவின் வாய்மையாற் போற்றினார் - நாவின் வாய்மை - "மெய்த்திருவாக்கு" (2986); "என்னும் வாய்மை" (2878) என்பன முதலியவை. சத்தியவாக்கு என்பர். "நிறைமொழி மாந்தர்" (குறள்) என்றவிடத்து. "நிறைமொழி" என்பது அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தேவிடும் மொழி என்று பரிமேலழகர் உரைத்த கருத்தும் இக்குவைத்துக் காணத்தக்கது. பரவிப் போற்றினார் - இப்பதிகம் கிடைத்திலது! இவ்வாறு உட்குறிப்புடன் இறைவரைப் போற்றுந் தன்மைபற்றித் திருமருகல் வரலாற்றில் வணிகப்பெண் திருவருளைச் சிந்தித்தேங்கிய நிலையில் முன் உரைக்கப்பட்டவை காண்க.2374 - 2375 பார்க்க. விரைவினால் விழுந்து போற்றினார் - விரைவு - தாழாது செய்யும் அருளின் பெருக்கினால் நிகழ்வது; விழந்து - திருமேனி நிலத்தில் ஐந்தங்கமும் எட்டங்கமும் பொருந்த விழுந்து வணங்கி. ஞானசம்பந்தர் - சிவஞானம் - சிவசத்தி - எல்லாம் வல்லது. அத்தகைய சிவஞானசம்பந்த ராதலின் அத்துணைகொண்டு உரியவாறு செயலாற்ற அருட்டிறம் பெறுபரிவுடன் (2976) போற்றினார் என்பது குறிக்க இப்பெயராற் கூறினார்; பின்னர் அருளும் திருப்பதிகத்துத் திருக்கடைக்காப்பில் " ஞானசம் பந்த னலம்புகழ்ந்த" என்ற குறிப்பும் காண்க. "நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லர்" (2705) நாவின் வாய்மையில் - என்பதும் பாடம். |
|
|