"ஒருமை யுய்த்தநல் லுணர்வினீ! ருலகவ ரறிய அருமை யாற்பெறு மகளென்பு நிறைத்தவக் குடத்தைப் பெரும யானத்து நடம்புரி வார்பெருங் கோயில் திரும திற்புற வாய்தலிற் கொணர்"கென்று செப்ப, | 1080 | (இ-ள்.) ஒருமையுய்த்த நல் உணர்வினீர்! - சிவனடிமைத் திறத்திலே ஒன்றித்து வைத்துச் செலுத்திய உணர்வினையுடையவரே!; உலகவரறிய - உலகத்தவர் எல்லாம் அறியும்படி; "அருமையாற் பெறும்.......கொணர்க" என்று செப்ப - "அரிய தவத்தின் பயனாகப் பெறும் மகளுடைய எலும்பு நிறைத்த அந்தக் குடத்தினைப் பெரிய மயானத்திலே ஆடல் புரிவாராகிய இறைவரது இப் பெருங்கோயிலின் திருமதிற்புறத்துத் திருவாயிலின் முன் கொண்டு வருக" என்று சொல்லியருள, (வி-ரை.) ஒருமை உய்த்தலாவது - சிவனுக்காளா மதுவொன்றே நினைந்து ஒழுகுதல்; "இரண்டுற மனம் வையேல்", "பொது நீக்கி", "ஒன்றியிருந்து நினைமின்கள்", "ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன், ஒன்றேயென் னுள்ளத்தி னுள்ளடைத்தேன்......ஆளா மது" என்பன முதலிய திருவாக்குக்கள் காண்க. ஈண்டுச் சிவநேசர் உணர்வினை ஒருமையில் உய்த்த நிலைமையாவது எது வரினும் தமது குறியினின்றும் பிறழாது ஒழுகிய நிலை; "மலையே வந்து விழினு மனிதர்காள், நிலையி னின்றுநீர் கலங்கப் பெறுதிரேற், றலைவ னாகிய வீசன் றமர்களைக், கொலைகை யானைதான் கொன்றிட கிற்குமே" (குறுந்) என்ற மெய்யருட் டிருவாக்கின்படி வல்விடம் இவர்பால் ஒன்றும் இடர்செய்யா தகலவுள்ள திறம் குறித்தார். உலகவர் அறிய - உலகத்தார் அன்பின் பெருமையை அறிந்து உண்மையுணர்ந்துய்யும் பொருட்டு; நீவிர் பற்றகன்றீ ராதலின் இப்பாவை இறந்தபோதும் இடர் ஒழிந்தீர், இனி அவள் வரும்போதும் இன்பப்படீர்; ஆதலின் இனிச் செய்யநின்ற செயல் உம்பொருட்டன்று; யாம், வரும் பாவையாரை ஏற்றுக்கொள்ளும் நிலையில்லையாதலின் அஃது எம்பொருட்டுமன்று. பின் என்னையோ? எனின், உலகவரறிந்துய்ய என்பது குறிப்பா லருளியவாறாம். உலகவ ரறிய - என்பு நிறைத்த என்றும், உலகவரறியக் கொணர்க என்றும் கூட்டி உரைக்க நின்றது. பெரு மயானத்திடை நடம் புரிவார் - மயானம் - சங்காரத்தையும், நடம் - (புனருற்பவத்தையும்) மீள உளதாக்குதலையும் குறிக்கும். "வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே" (திருவிருத்); இங்கு இறந்த பாவையாரை மீளவுற்ப விப்பிக்கும் அருளுடையார் என்பது குறிப்பு. பெருங் கோயில் - அந்நாளில் இக்கோயில் மிகப்பெருங் கோயிலாகக் கடற்கரையோரம் அமைந்திருந்தது என்பது வரலாறு. திருமதிற்புற வாய்தலிற் கொணர்க - திருமதிலுக் குட்புறம் வெந்த எலும்பும் சாம்பருங் கொணர்தல் விதிவிலக்காகிய அநுசிதம் என்பது கருதி, மதிற்புற வாய்தலிற் கொணரச் செய்தனர். திருக்காளத்தியில் இறைவரது "திருமுன்பு, வெந்தவிறைச் சியுமெலும்புங் கண்டகல மிதித்தோடி, யிந்தவநு சிதங்கெட்டே னியார்செய்தா ரென்றழிவா" ராய் (785)ச் சிவகோசரியார் "பழுதுபுகுந் ததுதீரப் பவித்திரமாஞ் செயல்புரிந்த" (788) நிலை இங்கு நினைவுகூர்தற்பாலது.
|
|
|