அங்க ணாளர்த மபிமுகத் தினிலடி யுறைப்பான் மங்கை யென்புசேர் குடத்தினை வைத்துமுன் வணங்கப், பொங்கு நீள்புனற் புகலிகா வலர்புவ னத்துத் தங்கி வாழ்பவர்க் குறுதியா நிலைமைசா திப்பார், | 1083 | (இ-ள்.) அங்கணாளர்தம்....வணங்க - அங்கணாளரது சந்நிதியின் எதிரிலே அவரது திருவடியிற் பதிந்த அன்பின் உறைப்பினாலே பெண்ணினது எலும்பு கொண்ட அக்குடத்தினை எடுத்துவைத்துத் திருமுன்பு சிவநேசர் வணங்க; பொங்கு....சாதிப்பார் - பொங்கிவரும் பெரு நீர்ச்சிறப்புடைய சீகாழித் தலைவராகிய பிள்ளையார் இவ்வுலகத்தில் தங்கி வாழும் மக்களுக்கு உறுதிப்பொருளாம் நிலைமை யிதுவே என்று நேரே காட்டியருளுவாராய், (வி-ரை.) அபிமுகம் - திருமுன்புக்கு நேராக. அடியுறைப்பால் - திருவடிச் சார்பிலே கொண்ட உறைப்பினாலே. உறைப்பாவது அழுந்திய - ஒருவாற்றாலும் அசைவில்லாத - அன்பு. "திருத்தொண்டினுறைப்பாலே வென்றவர்தந் திருப்பெயரோ வேறொருபேர்" (1795); அடி - திருவடி; இங்கு இவ்வாறன்றிப் பாதகாணிக்கைபோல என்றும், அடிப்பாகம் நன்றாகப் பொருந்த என்றும் உரைப்பாருமுண்டு. பொங்கு நீள்புனற் புகலி - காவிரி நாட்டின்கண்ணுள்ள சீகாழிப் பதி; புகலி - சீகாழிப் பதியின் பெயர்கள் பன்னிரண்டனுள் மூன்றாவது திருப்பெயர்; சிவநேசரது ஒருமையுய்த்த நல்லுணர்விற்கொண்ட செயல் வாய்ப்பப் புகல் தந்து அருளிய குறிப்புப் பெற இங்குப் புகலி காவலர் என்றார். புவனத்துத் தங்கி வாழ்பவர்க்கு - உலகவர்க்கு; தங்கி - என்றமையால் வினைத்தீர்வின்பொருட்டும், சிவதருமங்கள் செய்து வீடுபெறுதற்பொருட்டும், இப்புவனியில் வந்து தங்கி வாழும் விண்ணவர் நாகர் முதலியோர்களையும் அடக்கிக் கூறியபடி; "நீடுதேவர்க ளேனையோர்" (2982) என்பதும் இக்குறிப்பு. "புவனியிற் போய்ப்பிறவாமையி னாணாம் போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி, சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்......திருமாலா, மவன்விருப் பெய்தவு மலரவ னாசைப் படவும்" என்ற திருவாசகம் (திருப்பள்ளி - 10) காண்க. "பூவார் திசைமுக னிந்திரன் பூமிசை, மாவா ழகலத்து மான்முதன் வானவர், ஓவா தெவரு நிறைந்துறைந் துள்ளது" (137) என்றுதேவாசிரியனின் முன்னே வானவர் தங்கி வாழும் தன்மை கூறப்பட்டதும் காண்க. புவனத்து என்றமையால் இறைவரால் உயிர்கள் உய்யத்தந்த உடல் முதலியவற்றின் பயன் பெற உள்ள என்பது குறிப்பு. உறுதியாம் நிலைமையாவது பிறவிப் பயன் பெறச்செய்யும் உறுதிப் பொருளின் தன்மை. "பிறந்தார் பெறும் பயன்" (2985). சாதிப்பார் - சாதித்தலாவது எவரும் மாறுகூற இயலாதவாறு உறுதியாகச் குளுறவுகொண்டு எடுத்துக்கூறி முடித்தல்; சாதிப்பாராகி - முற்றெச்சம் சாதிப்பார் - கண்டு - கருதிச் (2983) - செப்பி (2884) - வருகென உரைப்பார் (2985) - என்னும் பதிகத்தினில் - என்னும் (2986) என்று கூட்டிமுடித்துச் சாதித்தநிலை கண்டுகொள்க. சாதித்தல் ஈண்டு சொல்லால்மட்டு மன்றிச் செயலாலும் முடித்துக்காட்டுதல் குறித்து நின்றது. |
|
|