"மண்ணி னிற்பிறந்த தார்பெறும் பயன்மதி சூடும் அண்ண லாரடி யார்தமை யமுதுசெய் வித்தல் கண்ணி னாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல் உண்மை யாமெனி லுலகர்முன் வரு"கென வுரைப்பார், | 1087 | (இ-ள்.) மண்ணினில்....பயன் - இந்த மண்ணுலகத்திலே வினைக்கீடாக வந்து பிறந்த உயிர்கள்பெறும் பிறவிப்பயனாகிய உறுதிப்பொருளாவன; மதிசூடும்...அமுது செய்வித்தல் - பிறைசூடும் பெருமா னடியார்தமைத் திருவமுது செய்வித்தலும்; கண்ணினால்.....ஆர்தல் - கண்களினாலே அவ்விறைவரது திருவிழாக்களின் பெரும் பொலிவினைக் கண்டு மகிழ்தலும்; உண்மை யாமெனில் - ஆகிய இவையிரண்டும் உறுதிப் பொருளாவன என்பது உண்மையானால்; உலகர்முன் வருக - ஏ! பூம்பாவையே, நீ உலகத்தவர் முன்னே உடலும் உயிரும் பொருந்த வரக்கடவாயாக!; என உரைப்பார் - என்று சூளுறவு செய்து எடுத்து உரைப்பாராகி, (வி-ரை.) இப்பதிகக் கருத்தினை வடித்தெடுத்துக் கூறுவது இத்திருப்பாட்டு. மேலும் இப்புராண முழுமைக்கும் உள்ளுறையாகிய உண்மையை வடித்துக் கூறும் பெருமையும் உடையாது; அதுமட்டுமன்றி, உலகுயிர்கள் அனைத்தும் பிறவிப் பயன் தெரிந்துய்யும் உறுதியாகிய வழிகாட்டும் பெருமையும் உடையது; மேலும், "வேத வுள்ளுறை யாவன" (1832) என்று எல்லா வேதங்களின் சாரமாகிய உண்மையினைத் திருநீலநக்க நாயனார் புராணத்துள்ளே வடித்தெடுத்துக் காட்டியருளியவாறு, இறைவரது திருவாக்குக்களாம் வேத சிவாகமங்களாகியஇரண்டனுள் எஞ்சிநின்ற சிவாகமங்களின் சாரமாகிய உள்ளுறையை அவ்வாறே வடித்தெடுத்துக் காட்டும் பெருமையுமுடையது. இனி, "எனதுரை தனதுரையாக" (தேவா) என்றதனால் இஃது பிள்ளையாரது திருவாக்கின் நின்று இறைவர் வெளிப்படுத்திய திருவாக்கேயாம் என்ற மேன்மையும் உடையது. இதிற் கூறும் உண்மைகளிரண்டினையும் மக்கள் சிந்தித்துத் தத்தம் வாழ்க்கையின் உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுகுதல் உய்தி தருவாம். மண்ணினிற் பிறந்தார் - வினைக்கீடாகிய பிறவிகொண்டு நிலவுலகில் பிறக்கும் உயிர்கள்; ஏனை மேல் - கீழ் உலகங்கள், நல்வினை தீவினைப் பயன்களைத் துய்த்து மீள இங்கு வந்து பிறத்தற்கே ஏதுவாவனவன்றி இம்மண்ணுலகுபோலக் கன்மக் கழிவுக் கேதுவாயும் உள்ளன சிவபுண்ணியங்களைச் செய்தலால் முடிவில் பிறவி ஒழித்து வீடுபெறுதற் கேதுவாயும் உள்ளனவல்ல; ஆதலின் மண்ணினிற் பிறந்தார் என்றார். பிறந்தார் - என்றதனால் வினைக்கீடாக வரும் உடல்கொண்டு அவ்வினையை அனுபவித்துக் கழித்து வீடுபெறும் நிலையினால் வந்தோர் என்பது குறிக்கப்பட்டது. "மண்ணிலே வந்த பிறவியே" (253); "மானிடப் பிறவிதானும் வகுத்தது"(சித்தியார்) முதலிய திருவாக்குக்களின் கருத்துக்கள் இங்கு நினைவுகூர்தற்பாலன. பிறந்தார் பெறும் பயன் - பிறவியில் வந்தோர் அப்பிறவியிற் செய்வனவற்றால் "மீட்டிங்குவந்து வினைப்பிறவி சாராமே" (திருவா) செல்லும் வழி தேடிக் கொள்ளுதல் பிறந்தார் பெறும் பயன் - பயனைப் பெறுவதற்குரிய செயல் - கடைப்பிடிக்கும் உறுதி - என்ற பொருளில் வந்தது. அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் - இதனை மாகேச்சுவர பூசை என்பர். பத்தரது திருவேடத்தைப் பரமேசுரனெனவே கண்டு வழிபடுக என்பது ஞானநூல் முடிபாகிய விதியாம். அவ்வாறு காண்டலாவது ஐயுறவின்றித் தெளிதல்; இவ்வழிபாடுகளுட் சிறந்த அங்கமாவது திருவமுதூட்ட லாதலின் அதனை எடுத்துக் கூறினார். கூறினாரேனும் இனம்பற்றி ஏனை உடை கொடுத்தல், பொன் மணி முதலாக வேண்டுவன கொடுத்தல் முதலிய வகைகள் எல்லாம் கொள்க; இளையான்குடி மாற நாயனார், சிறுத்தொண்ட நாயனார் முதலாகப் பத்தொன்பது பேர் இப்புராணத்துள் அடியார் வழிபாட்டினால் பிறவிப்பயன் பெற்று முத்தியடைந்தவர்களாய் வகுக்கப்பட்ட சரிதங்களின் நுட்பங்களெல்லாம் இங்குவைத்துக் காண்க. அண்ணலா ரடியார்தமை - அமுது செய்வித்தல் - அடியவர்களுக் குண்ணின்று அமுது செய்து பயன் தருபவர் அண்ணலாராகிய சிவனேயாம் என்பது உண்மை. திருமூல நாயனார் "நடமாடுங் கோயில்" என்று அடியார்களைக் கூறுதலும்,"நடமாடுங் கோயி னம்பர்க்கொன் றீயில்" என்று அடியார்க்கு ஈதல் அவருள் விளங்கும் நம்பராகிய சிவனுக்கீந்தமையேயாம் என்று கூறுதலும், "படமாடுங் கோயிற் பரம்ர்க்க தாமே"என்று அடியார்க்கீந்தது பரமர்க்கு ஆகும் என்று கூறுதலும் காண்க. அமுது செய்வித்தல் - அமுது அளித்தல். அண்ணலார்தமை - அடியார்தமை - என்று பிரித்துக் கூட்டி இரண்டு பயனும் அடியார்க் கமுதளித்தலால் வரும் என்று உரைக்கநின்ற குறிப்பும் காண்க. செய்வித்தல் - என்றதனால் தம்மாலியலாத போது பிறரைக்கொண்டேனும் செய்வித்தலும் அடக்கிக்கொள்க. அமுது செய்வித்தல் - பிறவிப்பயனாகிய உறுதிகளிரண்டனுள் சிறந்ததும் முந்தியதுமாம் என்பது குறிக்கப் பதிகத்துட்போலவே முதற்கண்வைத்துக் காட்டியருளினார். இவ்வுண்மை பதிகத்தின் முதற் றிருப்பாட்டினாற் போந்தமை காண்க. கண்ணினாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல் - இஃது பிறவிப் பயனாகிய உறுதிப்பொருள்க ளிரண்டனுள் எஞ்சிய மற்றொன்றாம். இது பதிகத்துள் இரண்டாவது முதல் பத்தாவது வரை உள்ள ஒன்பது திருப்பாட்டுக்களினாற் பெறப்படும் உண்மையாதல் கண்டுகொள்க; உறுதிபயக்கும் உண்மைகள் இரண்டனுள் ஒன்பது பாட்டுக்களுட் கூறப்பட்டது ஒரு பாட்டிற் கூறப்பட்டதற்கு ஒத்ததாகலின் அவ்வாற்றாலும் பின்னையதன் சிறப்புக் காட்டப்பட்டது. ஆசிரியரும் பதிகத்துக் கூறிய குறிப்புப்பெற இதனை "அடியார்தமை அமுது செய்வித்தல்" என்று மூன்று சீர்கொண்ட அடிப்பகுதியினும், முன்னையதனைக் "கண்ணி னாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்" என ஐந்துசீர்கொண்ட ஓரடியினும் கூறியருளிய திறமும் கவிநயமும் காண்க. கண்ணினால் - கண்டு - கண்டு என்றலேயமையும்; கண்ணினால் என்பது மிகையோ எனின், மிகையன்று; உடம்பு பெற்ற பயன் முழுவதையும் கண்ணிந்திரியம் ஒன்றே தருதல்பற்றி ஏனையவற்றினும் சிறப்புத் தோன்றக் கண்ணினால் என்றார். தம்பால் வந்த புலன்களையறியும் ஏனை யிந்திரியங்கள்போலன்றிக், கண்ணிந்திரியம் வாயிற் காட்சியிற் பொருளிற் சென்றியைந்தறியுமாதலின் அவற்றை வேறுபிரித்துக் கண்ணின் காட்சிக்குரிய தனிச் சிறப்பு உணர்த்தக் கூறியதுமாம். அவர் - அண்ணலார்; இறைவர். முன் கூறிய அண்ணலார் என முன்னறிசுட்டு அவர் என்றதற்கு அடியார் என்று கூறுவாருமுண்டு. ஈண்டுப் பதிகத்துக் கூறப்படுவனவெல்லாம் இறைவரது விழாக்களேயாதலின் அது பொருந்தாதென்க. ஆர்தல் -காட்சியின் நிறைவு பெற்று மகிழ்தல்; "கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும், எண்ணார வெண்ணத்தா லெண்ணியும்" (அற். அந் - 85); "கண்ணாரக் காண்பார்க்கோர்கள் என்று அத்திருப்பாட்டினைப் பாடியருளியபோது; கோற்றொடிச் செங்கை தோற்றிட - முன்னர் வளையலணிந்த செங்கை வெளிப்பட்டுத் தோன்றியிட; குடம் உடைந்தெழுவாள் - அந்தக் குடம் உடைந்து மேல் எழுவாராகிய பூம்பாவையார்; போற்று...போன்றாள் - போற்றும் தாமரை முகை இதழ் அவிழ்ந்து அதனின்றும் எழுகின்ற திருமகளைப் போன்றிருந்தார். |
|
|