மன்னு வார்சடை யாரைமுன் றொழுது"மட் டிட்ட" என்னு நற்பதி கத்தினிற் "போதியோ" வென்னும் அன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதமவ் வங்கந் துன்ன வந்துவந் துருவமாய்த் தொக்கதக் குடத்துள். | 1088 | (இ-ள்.) மன்னு.......பதிகத்தினில் - நிலைபெற்ற நீண்ட சடையினையுடைய சிவபெருமானைத் தொழுது "மட்டிட்ட" என்று தொடங்கும் அத்திருப்பதிகத்தினிலே; போதியோ.......அமுதம் - போதியோ என்று கூறும் அந்த மெய்த்திருவாக்கு என்னும் அமுதமானது; அக்குடத்துள் - அந்தக் குடத்தினுள்ளே; அவ்வங்கம் துன்ன....தொக்கது - அந்த எலும்பினுடம்பினுள்ளே பொருந்த வந்து வந்து உருவமாய்க் கூடியது. (வி-ரை.) "வருக!" என உரைப்பாராகிய பிள்ளையாரது கருத்தினை ஆணையின் வைத்துச் செயற்படுத்தியது அப்பதிகத்தினுள் போதியோ? என்ற மூவெழுத்தோர் சொல்லாகிய சிவஞான விளைவாம் சிவ சிற்சத்தியேயாம் என்று காட்டி, அதன் செயலை விளக்கியது இத்திருப்பாட்டு. "சடையாரைமுன்றொழுது" என்றதும் இக்குறிப்புத் தருவதாம். மன்னுவார் சடையாரை முன் தொழுது - மன்னு - கங்கையும் பிறையும் நிலைபொருந்திய. முன் தொழுது - பதிகம் தொடங்கும் முன் சடையாரைத் தொழுது அவரருளின் வழிப்பட்டு அவ் வருணிறைவினுள் தாம் அடங்கிநின்று பாடியருளினார் என்க. "கருணையின் பெருமையே கருதி" (2983). "மட்டிட்ட" என்னும் - மட்டிட்ட என்று தொடங்கும். போதியோ......அமுதம் - அமுதம் - ம்ருத் - மரணம். அமிர்தம் - மரணத்தைப் போக்குவது என்பது சொற்பொருள். ஈண்டுப் பாவையார் மரணமாயின நிலைமையினைப் போக்கி உயிரினைப் புகுத்தி உடலை உருவாக்கியது "போதியோ" என்ற அம்மந்திரம் என்பது. மெய்த் திருவாக்கு எனும் - மெய் - என்றும் அழிவில்லாத நித்தப் பொருள் - சிவம்; வாக்கு - சிவ சிற்சத்தி; இருதலை மாணிக்கம் என்னும் நிலையில் இருதலையும் ஒங்காரத்தைப் பெற்றுப் பிரணவ சொரூபமாய் நின்ற மூன்றெழுத்து மகாமந்திரமாய் நின்றது பதிகத்துட் "போதியோ" என்ற சொல் என்க. என்னை? அதுவே வருக என்ற ஆணையாகிய சிவ சிற்சத்தியை உள்ளிட்டு அருளப்பட்டமையால் என்க. அன்ன - அத்தகைய என்ற குறிப்பும் காண்க. மெய்த் திருவாக்கு - பிள்ளையாரது திருவுருவம் முழுதும் சிவஞான மயமேயாய்ச் சிவநிறைவுள்ளதாதலின் அவரதுவாக்கு இறைவர் திருவாக்கேயாயிற்று; "திருக்கடைக் காப்பதனில் விமல ரருளாலே, குரும்பையாண் பனையீனு மென்னும் வாய்மை குலவதலால்" (2878); "எங்கள் சண்பை யாண்டகையார் கும்பிடவந் தணைகின் றர்தாம், மெய்த்தன்மை விளங்குதிருச் செவியிற் சார மேவுதலும்" (2376) என்பன முதலியவை காண்க. துன்ன வந்து வந்து - துன்னுதல் - பிள்ளையார் திருவாக்கினின்றும் அவரது சத்பாவனையினால் அருளிய பதிகத்துள் ஒவ்வொரு பாட்டிலும் "போதியோ" என்று சால்லுந்தோறும் முறையாக வந்து வந்து; "வள்ளல் வரவர வந்தொழிந்தானென் மனத்தே, யுள்ளத் துறுதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந், தெள்ளுங் கழல்" (திருவா - கோத் - 19); இவ்வாறு படிப்படியாய் அமுதம் நிறைந்த விளைவின் முறையை வரும் மூன்று பாட்டுக்களில் வைத்து "அடைவே" என்ற குறிப்புங்காட்டிக் கூறுவார். உருவமாய்த் தொக்கது - தொக்கது - படிப்படியாக வளர்ச்சி முறையிற் கூடிற்று; கருப்பத்தூறிக் குழவிகள் வளரும் முறையை உடற்கூற்று நூலார் கூறுதல் காண்க; உருவமாய் - அந்த வளர்ச்சி முறையில் அங்கங்கள் உருவெமடுத்து; "கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி, உருவாகி" (தேவா - தாண் - ஆரூர் - 6); "என்போ டியைந்த வழக்கு" (குறள்) என்புழிப்போல், ஈண்டுப் பாவையாருக்கு இம் மறுபிறப்பின் வரும் உடம்பு முன் உடலின் எஞ்சிநின்ற எலும்பினைப்பற்றி உளதாயிற்று என்க. எலும்பே மக்களுடலுக்குத் தாரகமாய்த் தாங்கி நிற்றற் சிறப்பு நோக்கி அதனையே உடம்பென்பதும் வழக்காயிற்று. "எம்பு முரியர் பிறர்க்கு"( குறள் என்றதும் காண்க. அக்குடத்துள் - எலும்பும் சாம்பலும் நிறைத்ததும், பிள்ளையர் தம்பிரான் கருணையின் பெருமையே கருதி (2983) அருணோக்காற் (2984) கண்டதுமாகிய அந்த என அகரம் முன்னறிசுட்டு. அக்குடத் தடங்கி" (2987) என்றும், "குடமுடைந்து" (2988) என்றும் தொடர்ந்து கூறும் குறிப்பினும் காண்க. உருவப் பகுதிகள் முறையே நிரம்பிக் கூடுதற்குப் புறக்காவலாக அமையுங் கருப்பை, முட்டையோடு, முதலியவை போல நின்றது அக்குடம் என்பது. "இதனாற் பதிக முதலுமீறுங் கபாலீசர் திருநாமமும் போந்தவாறு காண்க" என்பர் ஆறுமுகத் தம்பிரானார். |
|
|