ஆன தன்மையி னத்திருப் பாட்டினி லடைவே போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி ஏனை யக்குடத் தடங்கிமுன் னிருந்தெழு வதன்முன் ஞான போனகர் பின்சமண் பாட்டினை நவில்வார்; | 1089 | (இ-ள்.) ஆன தன்மையில் - முன் நான்கு பாட்டுக்களிற் கூறிய அவ்வாறாயின தன்மையினாலே; அத்திருப்பாட்டினில் அடைவே - மட்டிட்ட என்று தொடங்கிய அத்திருப்பாட்டினைத் தொடர்ந்து முறையே பாட்டுத்தோறும்; போன...நிரம்பி - போயின பிராணவாயுவும் உருவம் பெறும் அங்கப் பகுதிகளும் அழகும் முறையாக நிரம்பி; ஏனை......எழுவதன் முன் - வேறாகிய அந்தக் குடத்தின்கண்ணே முன்னர்த் தொக்குக் கூடியிருந்து உரியவாறு வெளிப்பட்டு எழுவதன் முன்பு; ஞானபோனகர்...நவில்வார் - ஞானவமுதுண்டவராகிய பிள்ளையார் பின் முறையாக அருளும் சமண் பாட்டாகிய பத்தாவது திருப்பாட்டினை அருளிச் செய்வாராய்; 1089 (வி-ரை.) ஆன தன்மையின் - முன் (2983) நான்கு திருப்பாட்டுக்களிற் கூறியபடி நிகழ்ச்சிகள் ஆயின தன்மையினால்; தன்மை காரணமாக. அத்திருப் பாட்டினில் - அந்த - மன் பாட்டிற் கூறிய - மட்டிட்ட என்று தொடங்கும் திருப்பாட்டினில். அடைவே - முறையாக; ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து. போன வாயு - முன்னர் விடத்தினால் வீந்து, ஆவி தங்குபால் குறிகளு மடைவிலவாகிய 2960) நிலையிற் பிரிந்துபோன பிராணவாயு; உயிரிருத்தற்குச் சிறந்த குறியாதலின் அதுவே யான்மா என்பாருமுண்டு; போதம் 3-ம் சூத்திரம் பார்க்க. "என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்கு" (தேவா). வடிவம் - உருவப் பகுதிகள்; பொலிவு - முன்னைய உருவ நலனிலும் சிறந்த அமைப்பின் அழகு. ஏனை அக்குடத்து அடங்கி - எலும்பும் சாம்பலும் நிறைத்துக் காணப்பட்ட மட்குடமே பற்றுக்கோடாகப், பிள்ளையார் பாவையாரின் மறுபிறப்புக்குரிய உடம்பு தங்கி உருவாகிப் புறப்படும் கருக்குடமாக அரளாற் கண்ட அக்குடத்தினுள் நிறைவுற்று அடங்கி. முன் இருந்து எழுவதன் முன் - முன்னர் அடங்கி நிரம்பியிருந்து பின் உரியவாறு வெளிப்படுவதன் முன்; குழவிகள் பத்துமாத வளர்ச்சியினைத் தாயின் கருக்குடத்தில் நிறைவாகப் பெற்று அதனுள் அடங்கிப் பின் வெளிப்படுமாறுபோல. உரிய வளர்ச்சி முழுதும் நிரம்பிய பின்னரே குழவி கருக்குடத்தினின்றும் வெளிவரவேண்டுமென்ற உடல்நூல் விதிக் குறிப்புப் பெற நிரம்பி - முன் - இருந்து என்றார். எழுவதன் முன் - நவில்வார் என்க - பத்துப் பாட்டும் நிரம்ப உருவமும் பொலிவும் நிரம்பி வெளிப்படும் நிலையாதலின் எழுவதன்முன் அவ்வாறு நிரம்பும் பத்தாவது பாட்டினை நவில்வாராகி; சமண் பாட்டு - பிள்ளையார் பதிகங்க ளொவ்வொன்றினும் பரசமய நிராகரணம்பற்றிச் சமண புத்தர்களைக் கூறும் பத்தாவது பாட்டு; இதற்கு இக்காரணம்பற்றிச் சமண் பாட்டு என்று பெயரிட்டருளினர் ஆசிரியர். இதன் குறியீடாகிய கருத்தை "நாதர்நெறி யறிந்துய்யார் தம்மிலே நலங்கொள்ளும், போதமிலாச் சமண்கையர் புத்தர்வழி பழியாக்கு, மேதமே யெனமொழிந்தார்" (1977) என்று தொடக்கத்திற் காட்டியருளியமை காண்க. நவில்வார் - நவில்வாராகி; முற்றெச்சம். நவில்வார் - என்றபோது என வரும்பாட்டுடன் முடிக்க. நவிலும் திறம் வரும் பாட்டில் காண்க. போன வாயுளும் என்ற பாடம் பிழை; அதனை மேல் (2989) கூறுதல் காண்க.
|
|
|