எடுத்த பாட்டினில் வடிவுபெற், றிருநான்கு திருப்பாட் டடுத்த வம்முறை பன்னிரண் டாண்டள வணைந்து, தொடுத்த வெஞ்சமண் பாட்டினிற் றோன்றிடக் கண்டு விடுத்த வேட்கையர் திருக்கடைக் காப்புமேல் விரித்தார். | 1091 | (இ-ள்.) எடுத்த...பெற்று - மட்டிட்ட என்று தொடங்கிய முதற் பாட்டினில் பாவையார் உருவத்தைப் பெற்று; இருநான்கு...அணைந்து - அதன்மேல் அருளிய எட்டுத் திருப்பாட்டுக்களின் உருவெடுத்த நிலையினையடுத்த அம்முறையே பன்னிரண்டு ஆண்டுகளுக்குள்ள வளர்ச்சியினைப் பொருந்தி; தொடுத்த..தோன்றிட - தொடுத்தகாட்சியான்" (தேவா). நல்விழா - விழா எனப்படும் ஏனையவெல்லாம் ஆரவார நீர்மையவா யொழிவனவும் பல்லாற்றானும் தீமைபயப்பனவுமாம்; சிவபெருமானதுவிழா ஒன்றே எஞ்ஞான்றும் பெருநலமாகிய வீடு பேற்றுக்கு உதவுவது என்பார் நல்விழா என்றார். விழாப் பொலிவுகண் டார்தல் - இதுபற்றிப் பிள்ளையார் கேட்ப ஆளுடைய அரசுகள் அருளிச்செய்த திருவாரூர்த் திருவாதிரை விழாப்பற்றிய "முத்துவிதானம்" என்னும் திருப்பதிகமும், அதன் வரலாறும் இங்கு நினைவுகூர்தற்பாலன. (வி-ரை.) இப்பாட்டினால் குடத்தினை நோக்கிப் பாவையாரை விளித்துப் பதிக முழுமையும் அருளிய முறையில் குடத்தினுள் நிகழ்ந்த விளைவுகளை அம்முறை தொகுத்துக் காட்டியருளியவாறு.
எடுத்த பாட்டு - தொடங்கிய "மட்டிட்ட" என்ற முதற்பாட்டு. வடிவு பெற்று - உடல் தீயிடையிட் டெரிக்கப்பட்டதனால் வடிவமழிந்து எலும்புஞ் சாம்பலுமாகிய உருவுடன் நின்றது. அதனை மீள உற்பவிக்கும் அருணோக்கினாற் பிள்ளையார் காணவே உயிரற்ற அவ்வெலும்புருவமும் தன்மாத்திரைகள் முதலியவற்றாலாகிய நுண்ணுடலுள் ஒடுங்கிப், பின்னர் உயிர் தரிக்கத்தக்க கருவுருவாகிய வடிவம் பெற்று என்க. "உள்ளதே தோற்று உளமணுவாய்ச் சென்றுமனந், தள்ள விழுங்கரு விற் றான்" (போதம் - 2சூ) என்றபடி, எலும்புஞ் சாம்பலுங் கருவடிவாகியதும், அதனுள் உயிரினைப் புகுத்தியதும் "போதியோ" என்னும் மெய்த்திருவாக்கெனு மமுதமென்பது முன்னுரைக்கப்பட்டமை (2986)யால், இங்கு "வடிவு பெற்று" என்றமட்டிற் கூறியமைந்தார். இங்கு வடிவு என்றது புனருற்பவத்தில் வரும் உடலின் முனையாகி உயிருடன் கூடிய வடிவத்தை. இருநான்கு....அணைந்து - இருநான்கு திருப்பாட்டு - பதிகத்துள் இரண்டாவதுபாட்டு முதல் ஒன்பதாவது பாட்டு வரை உள்ள எட்டுப் பாட்டுக்கள்; அடுத்த அம்முறை - பாட்டுக்களின் உட்குறிப்பாகிய பொருள்களால் வந்து பொருந்திய அம்முறைப்பட்ட வளர்ச்சி பெற்று. பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து - அம்முறை வளர்ச்சியானது கருவடிவாகியது தொடங்கி அன்று முதலாகப் பன்னிரண்டு ஆண்டுகள் முறையாக வளர்ச்சி பெற்று; எனவே, பாவையாருக்கு விடந்தீண்டிய இறப்பு ஏழியாண்டளவில் நிகழ்ந்த தென்று (2944) முன் அறியப்பட்டமையின், அது நிகழ்ந்து அப்போது ஐந்து ஆண்டுகள் கழிந்தன என்பதும், இந்த ஐந்து ஆண்டுகளளவும் சிவநேசர் பாவையாரின் எலும்பு நிறைத்த குடத்தினையே அவராகக் கொண்டு உபசரித்து நிகழ்ந்தாரென்பதும் கருதப்படும். அன்றியும் பாவையாருக்கு ஏழியாண்டெய்தச் சிவநேசர் மகிழ்ந்த செய்தியாய நான்களிற் பிள்ளையார் ஆலவாயிற் சமணரை வெற்றிகொண்ட செயல் நிகழ்ந்தகாலை அவர் பத்து வயதுப் பிராயத்தினர்போலும் என்பதும் கருதப்படும். "புண்ணியப் பதினா றாண்டு பேர்பெறும் புகலி வேந்தர்" (3007) என்று இங்குக் கூறுதலினால் இவ்வாறு கருதப்பட்டது. "பானல் வாயொரு பால னீங்கிவன்" (தேவா) என்று பிள்ளையார் தம்மைப்பற்றி அங்கு அறிவித்தருளுதலும் குறிக்க. பன்னிரண்டாண் டளவு அணைந்து - பாவையார் விடத்தினின் வீந்தபின் இதுவரை உள்ள ஐந்தாண்டுகளின் வளர்ச்சியினையும்பெற்றுப் பன்னிரண்டு ஆண்டு மங்கைப் பருவத்திற் றோன்றினர் என்க. என்னை? இக்கால முழுதும் சிவநேசர் பாவையார் உள்ளாரெனவே கருதி உபசரித்து வந்தமையால் அவர் கருதியதற்கேற்ப அவ்வளர்ச்சி பெறுதல் தகுதியாமென்க. அன்றியும், பிள்ளையாரை மணத்தல் கருதிச் சிவநேசர் "காழிநா டுடையவர்க் கடியேன், பெற்றெ டுத்துபூம் பாவையும்.....கொடுத்தனன்யான்" (2952) என்று உறுதிகூறி மொழிந்தமையாலும், அவள் விடத்தால் வீந்தபின்னரும் "கழுமலத் தலைவர் சாரும்அவ் வளவும் உடல்தழ லிடையடக்கிச் சேர வென்பொடு சாம்பல் சேமிப் பதுதெளிந்து" (2963) அக்குடத்தை அவராகவே கொண்டு கன்னிமாடத்து வைத்து உபசரித்து வந்து, அவர் வந்து சாரும்போது அக்குடத்தைப் பாவையாராகவே அவர்வசம் கொடுத்தல் கருதியமையாலும், பெண்களின் மணப்பருவமாகத் தமிழ் இலக்கணம் வகுக்கும் நிலையிற் பன்னிரண்டாண்டு அளவு சார்கின்றமையாலும் சடையாரின் கருணையின் பெருமையினாலே அவ்வுடலிலே மீளப் புனருற்பவம் நிகழ்கின்றமையாலும், பிறவாற்றாலும் இடைப்பட்ட ஆண்டுகளின் வளர்ச்சியினளவும் பெற்றுப் பன்னிரண்டாண்டளவு அணைந்தனர் என்பதாம். தொடுத்த வெஞ்சமண் பாட்டினில் தோன்றிட - தொடுத்த - பதிகங்களிற் பத்தாவது பாட்டிற் பரசமய நிராகரிப்புச் கூறும் நிலை தொடுத்த என்க. தொடுத்தல் - மேற்கொள்ளுதல். தொடுத்த - பாட்டு - என்று கூட்டுக. தொடுத்த வெஞ்சமண் என்று கூட்டி சைவத் திறத்தை இழித்தல் செய்வதனைத் தொழிலாகக் கொண்ட பகைமை தொட்ட கொடிய சமண் என்றுரைத்தலுமாம். சமண் பாட்டு - முன்பாட்டிலுரைத்தவை பார்க்க. சமண் பாட்டினிற் றோன்றிட - சமண் பாட்டாகிய பத்தவாது பாட்டு அருளியவுடன் குடத்தினின்றும் வெளிப்பட. பாட்டுக்கள் தோறும் வரிசைப்பட ஐப்பசி முதலாக அவ்வம்மாதங்களையும் அவற்றில் நிகழும் நல்விழாப் பொலிவுகளையும் கூறியருளினாராதலின் அம்முறையிற் பத்துப் பாட்டுக்களுக்குப் பத்துமாதங்கள் சென்று முறைபட்டன. பத்துமாதங்க ணிறைவுற்றகாலைக் குறித்த பத்துப் பாட்டுக்களும் நிறைவாயின போது குடமுடைந்து பாவையாரும் எழுந்து தோன்றினார் என்ற உள்ளுறையாகிய, தகுதியும் கண்டுகொள்க. கண்டு - முன்னர் (2983) என்பு நிறைந்த மட்குடத்தைக் கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதிப் பதிகமருளிய பிள்ளையார், அதனிறுதியில் இப்போது தோன்றிடக் கண்டு என்க. பின்னர்க் கண்ணுதல் கருணைவெள்ள மாயிர முகத்தாற் கண்டார் (3007) என்பதும் காண்க. விடுத்த வேட்கையர் - வேட்கை - விருப்பு; வேட்கை விட்டவர் என்க. "வென்றவைம் புலனான் மிக்கீர்" (401) என்புழிப்போலக் காண்க. பிள்ளையார் இவ் வருட்செயலை எவ்வாறாயின வேட்கையும்பற்றிச் செய்தாரல்லார் என்பது குறிப்பு. பின் நிகழ்ச்சியும் காண்க. வேட்கை விட்டார் என்னவே வெறுப்புமிலர் என்பதும் பெறப்படும். "வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார்" (குறள்) என்ற கருத்தும் குறிக்க. "வேட்கைவிட் டார்நெஞ்சின், மூடத்து ளேநின்று முத்தி தந்தானே" - (திரு மந்.. 8 - 493); "ஆராவியற்கை யவாநீப்பி னந்நிலையே, பேராவியற்கை தரும்" (குறள்) திருக்கடைக்காப்பு மேல் விரித்தார் - பதிகப் பயன் கூறிப் "பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழால் - நலம் புகழ்ந்த பத்து" என்று பதிகம் நிறைவாக்கியருளினார். விரித்தல் - நிறைவாக அருளுதல். விதித்தார் - என்பதும் பாடம். உலகர் முன் - எம்முன் என்னாது உலகர்முன் என்றது இச்செயலின் பயன் உலகவரையறிவுறுத்தி யுயவித்தலாதலின் என்க. "உலகவரறிய" (2979). "வருக" என உறைப்பார் - பதிகத்தினுள் "போதியோ?" என்றருளிய வினாவுக்கு "வருக" என ஆணையிடுதலே பொருளாம் என்று ஆசிரியர் விளக்கிக் காட்டியவாறாம்; "பாவாய்! நீ, இவையிவை யெல்லாம் காணாது போதியோ? என்றதனால் மற்றிவற்றைக் காண்பதற்கு வருக என்பதே பொருள் என்றவாறு; எனவே உலகில் வருதற்குப் பயன் இவையிவையேயாம் என்ற முடிபும் உடன் போந்தவாறு காண்க. உரைப்பார் - உரைப்பாராகி; முற்றெச்சம். உரைப்பார் - என்னும் மெய்த்திருவாக்கு என வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க.
|
|
|