பாடல் எண் :2991
தேவரு முனிவர் தாமுந் திருவருட் சிறப்பு நோக்கிப்
பூவரு விரைகொண் மாரி பொழிந்தன; ரொழிந்த மண்ணோர்;
யாவரு "மிருந்த வண்ண மெம்பிரான் கருணை" யென்றே
மேவிய கைக ளுச்சி மேற்குவித் திறைஞ்சி வீழ்ந்தார்.
1093
(இ-ள்.) தேவரும்.....பொழிந்தனர் - (விசும்பிடை நெருங்கிய) தேவர்களும் முனிவர்களும் முதலியோர்கள் சிவபெருமானது திருவருளின் சிறப்பினை நோக்கி மந்தாரம் முதலிய தெய்வ மரங்களின் பூக்களினாலாகிய மணமுடைய பூமழையினைப் பெய்தனர்; ஒழிந்த....வீழ்ந்தார் - முன் கூறியவர்களொழிந்த நிலவுலக மக்கள் எல்லோரும் இவ்வாறு விளைவு பொருந்தியிருந்த வண்ணமானது எமது நாயகராகிய சிவபெருமானது கருணையின் விளைவேயாம்" என்று கூறிப் பொருந்திய கைகளை உச்சி மேற் கூப்பி வணங்கி நிலமுற வீழ்ந்து பணிந்தனர். (வி-ரை.) இதனால் இது கண்ட விண்ணோர் மண்ணோர் செய்திகள் கூறப்பட்டது. தேவரு முனிவர்தாமும் - இவர்கள் இந்நிகழ்ச்சி காண்பதற்கு விசும்பிடை வந்து நெருங்கியவர்கள் (2982).
திருவருட் சிறப்பு நோக்கி - குடத்தினின்று எழுந்த பாவையாரைத் திருவருட் சிறப்பாகவே நோக்கினார்கள் என்பது.
பூவரு விரைகொள் மாரி - பூவரும் - பூவினாலாக்கப்படும்; பூசினின்று வரும். பூ - மந்தாரம், கற்பகம் முதலிய தேவருலகப் பூக்கள்.
ஒழிந்த மண்ணோர் - தேவரும் முனிவரும் முன்பாட்டிற் கூறிய திறந்தவர்களும் ஒழிந்த ஏனைப் பண்புடைய உலகினர்கள்.
வீழ்ந்தார் - நிலமுற விழுந்து பணிந்தனர்.