பாடல் எண் :2994
பாங்கணி சுரும்பு மொய்த்த பனிமல ரளகப் பந்தி
தேங்கம ழாரஞ் சேருந் திருநுதல் விளக்க நோக்கிற்
பூங்கொடிக் கழகின் மாரி பொழிந்திடப் புயற்கீ ழிட்ட
வாங்கிய வான வில்லின் வளரொளி வனப்பு வாய்ப்ப,
1096
(இ-ள்.) பாங்கணி....அளகப் பந்தி - பக்கத்தில் அழகிய வண்டுகள் மொய்த்த குளிர்ந்த பூக்களைச் சூடிய கூந்தற் பந்தியோடு; தேங்கமழ்.....நோக்கில் - மனங் கமழும் திலகமணிந்த அழகிய நெற்றியினது பொலிவைப் - பார்க்கில்; பூங்கொடிக்கு....பொழிந்திட - பூம்பாவையாராகிய பூங்கொடிக்கு அழகின் மழை பொழியும் பொருட்டு; புயற்கீழ்......வனப்பு வாய்ப்ப - மேகத்தின் கீழே இட்ட வளைந்த வானவில்லினது மிக்க ஒளி பொருந்திய அழகு பொருந்த;
(வி-ரை.) முன் பாட்டில் குழலின் பாரத்தின் அழகினை வதனத்துடன் சேர்த்து அணிந்து கூறினார். இப்பாட்டில் அவ்வதனத்தின் நுதலின் விளக்கத்தைக் கூந்தலுடன் கூட்டி அணிந்து கூறுகின்றார். பந்தியோடு கீழேசேர்ந்த நுதல் விளக்கம் - புயலின்கீழ் வான்வில்லின் வனப்புப் போன்றது என உருவுவமம். ஆரம் - சந்தனம் - அதனாலாகிய திலகத்துக்கு வந்தது.
பூங்கொடிக்கு அழகின் மாரி பொழிந்திட - தற்குறிப்பேற்றம். அழகின் மாரி - அழகுப் பயன் விளைக்கும் மழை.
பூங்கொடிக்கு - பூக்கும் கொடி என்றும், பூங்கொடி போன்ற பாவை என்று இருபாலும் பொருந்தவு முரைக்கநின்ற கவிநலம் காண்க. பூங்கொடி - உவமையாகுபெயர். கொடிக்கு - கொடி தழையும் பொருட்டு என்ற குறிப்புமாம்.
அளகப் பந்தி - அளகம் - கூந்தல்; பந்தி - ஒழுங்கு; ஆரம் - திலகம்.
புயற்கீழிட்ட வாங்கிய வானவில் - மேலே சூழ்ந்த மேகத்தின் கீழ் வானவில் இடுதல் மழைக்குறி என்பர். வாங்குதல் - வளைதல்.
வானவில்லின் வளரொளி வனப்பு - வனவில் நீல முதலாகச் சிவப்பீறாக ஏழு வன்னங்களை ஒழுங்குபட்ட கீற்றுக்களாக உடையது. உவமேயத்தில் தேங்கமழ் ஆரம் சேரும் திருநுதல் என்றது பன்னிறமுடைய திலகம் அணிதல் குறித்ததும், ஈரிடத்தும் வளைந்த தன்மையும் உவமையின் பொதுத் தன்மைகளாம்; தற்குறிப்பேற்ற முளளுறுத்த உருவும் வினையும்பற்றி வந்த உவமம்.