புருவமென் கொடிகள் பண்டு புரமெரித் தவர்த நெற்றி ஒருவிழி யெரியி னீறா யருள்பெற வுளனாங் காமன் செருவெழுந் தனுவ தொன்றுஞ் சேமவில் லொன்று மாக இருபெருஞ் சிலைகண் முன்கொண் டெழுந்தன போல வேர்ப்ப, | 1097
| (இ-ள்.) புருவ மென்கொடிகள் - புருவம் என்னும் மெல்லிய இரண்டு கொடிகள் பண்டு...காமன் - முன்னாளில் திரிபுரமெரித்த சிவபெருமானது நெற்றித்தனிக் கண்ணின் வந்த தீயினாலே சாம்பராகிப் பின் அருளும் பெற உள்ளவனாகிய மன்மதனுடைய; செருவெழும்...ஒன்றுமாக - போரில் ஏந்திய வில் ஒன்றும், சேமமாக வைக்கப்படும் வில் ஒன்றுமாக; இருபெரும்........ஏர்ப்ப - இரண்டு பெரிய விற்களின் தன்மைகளை முன்னே கொண்டு தோன்றி எழுந்தாற்போல அழகு செய்ய; (வி-ரை.) புருவங்களிரண்டும் காமனது செருவெழும் வில் - சேமவில் - என இரண்டின் தன்மைகள் கொண்டனபோன்று விளங்கின என்க. பண்டு.....உளனாங் காமன் - உளனாம் காமன் - நிலை யிரண்டு - என்றதனால் இங்கு உவமிக்கப்பட்ட காமனது நிலைகள். அவன் சிவபெருமானால் எரிக்கப்படவும் பின் அருள்பெறவும் நின்ற நிலைக்கு முன்னிருந்த நிலையிற் கொண்டவை. அதற்குப் பின் அவன் ஏந்தியவை அவனது ஆணை அவ்வாறு தோல்வியுற்றுப் பங்கப்பட்ட பின் வருதலாதல் ஈண்டு உவமைக்கு ஏற்ற உயர்வுள்ளனவல்ல என்பது குறிப்பு. அவன் பின் அருள்பெற நிற்பதனால் ஒருவாறு ஈண்டுவமைக்குத் தகுதி பெற்றனன் என்பதும் குறிப்பு. இக்கருத்தையே பற்றி "உருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன்று" (1) என்ற திருக்கோவையாருக்கு "நுதல் விழிக்குத் தோற்று உரு விழப்பதன்முன் மடியா வாணையனாய் நின்றுயர்த்த கொடியை" என்று ஆசிரியர் பேராசிரியர் உரைத்தவாறும் காண்க. மேற்பாட்டில் "வென்றிக் கொடியிரண்டு" என்பதும் காண்க. செரு எழும் தனு - சேமவில் - போரிற் பிடிப்பதும் அதற்குத் துணைவேண்டும் போது சேமமாக வைப்பதும் ஆகிய இரண்டு.சிலைகள் முன்கொண்டு - நிலைகளின் தன்மையை மேற்கொண்டு என்க. சிலைகள் அவற்றின் தன்மைகட்காகி வந்தது. சிலையாகப் புருவங்கள் பயன்படாமையின் தன்மையளவிற் கூறினார். செரு எழும் - என்றது போரில் இறப்புவரையும் துன்பம் செய்தலையும், சேமம் - அவ்வாறன்றி இன்பஞ் செய்தலையும் ஆகிய இருவேறு தன்மைகளையும் குறிப்பாலுண்ர்த்தின. பிரிந்தார்க்குத் துன்பமும் இணைந்தார்க்கு இன்பமும் செய்தல் காமனது வில்லின் இருவேறு செயல்களாதலும் காண்க. "இருநேரக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு, நோய்நோக்கொன் றந்நோய் மருந்து" (குறள்) என்று நோக்கிற்குச் சொல்லிய தன்மை அவற்றுடனிணைந்த புருவத்தின்மேலும் வைத்துக் காணநின்றதும் கருதுக. இங்கு இவ்வாறன்றிக் கரும்புவில் ஒன்றும் அஃதிற்றபோது உதவப் புட்பவில் ஒன்றும் காமனுக்கு உண்டென் றுரைப்பாருமுளர். உளதாங் காமன் - ஒப்ப - ஏய்ப்ப - ஏற்க - ஏற்ப - என்பனவும் பாடங்கள்.
|
|
|