பாடல் எண் :2997
பணிவள ரல்குற் பாவை நாசியும் பவள வாயும்
நணியபே ரொளியிற் றோன்று நலத்தினை நாடு வார்க்கு
மணிநிறக் கோபங் கண்டு, மற்றது வவ்வத் தாழும்
அணிநிறக் காம ரூபி யணைவதா மழகு காட்ட;
1099
(இ-ள்.) பணிவளர்....நாடுவார்க்கு - பாம்பின் படம்போல வளரும் அல்குலையுடைய பாவையாரின் நாசியும் பவளம்போன்ற வாயும் அணுகநின்று பெரிய ஒளியுடன் தோன்றும் அழகினை நாடி அறியலுறுவார்க்கு; மணிநிறக்கோபம்....அழகு காட்ட - மாணிக்கம்போன்ற சிவந்த நிறமுடைய இந்திர கோபம் என்னும் தம்பலப்பூச்சியினைக் கண்டு அதனைக் கவரும்பொருட்டுத் தாழ்ந்து வரும் அழகிய நிறங்களைக் கொள்ளும் காமரூபி (பச்சோந்தி) சேர்வதாகிய அழகினைக் காட்ட;
(வி-ரை.) நாசி - மூக்கு; கோபம் - இந்திரகோபம் என்னும் தம்பலப்பூச்சி; காமரூபி - பச்சோந்தி (மாறிமாறி விரும்பிய நிறம் கொள்வது). பவளவாய் - கோபம் (பூச்சி)போலவும், மூக்கு - காமரூபி போலவும், மூக்குப் பவளவாயை நணுகியநிலை கோபத்தை வவ்வ இறங்கிவரும் காமரூபி அணைவதுபோலவும் விளங்கின என்பதாம்; பவளவாய் - கோபம் எனவும், நாசி - காமரூபி எனவும் உருவுபற்றி வந்த உவமங்கள்; நணிய நலம் வவ்வத் தாழ்வதுபோல என்றது தற்குறிப்பேற்றத்தை உள்ளுறுத்து வினைபற்றி எழுந்த உவமை. நாசியைக் காமரூபி என்ற உவமம் உருவினாலன்றி மெய்யும்பற்றி வந்தது.
அனையதாம் - என்பதும் பாடம்.