இளமயி லனைய சாய லேந்திழை குழைகொள் காது வளமிகு வனப்பி னாலும் வடிந்ததா ளுடைமை யாலும் கிளரொளி மகர வேறு கெழுமிய தன்மை யாலும் அளவில்சீ ரனங்கன் வென்றிக் கொடியிரண் டனைய வாக; | 1100 | (இ-ள்.) இளமயில்....காது - இளமையாகிய மயிலைப்போன்ற சாயலையுடைய ஏந்திய இழையணிந்த பாவையாரது குழையணிந்த காதுகள்; வளமிகு.....தன்மையாலும் - வளப்பமுடைய அழகினாலும் வடிந்த (காதுத்) தண்டையுடைமையினாலும் மிகுந்த ஒளியுடைய சுறவேறானது பொருந்திய தன்மையினாலும்; அளவில் சீர்....அனையவாக - அளவில்லாத சிறப்பினையுடைய வெற்றிக்கொடி யிரண்டுபோல விளங்க; (வி-ரை.) பாவையாரது குழைகளணிந்த காதுகள் மன்மதனுடைய வெற்றிக்கொடிகள் இரண்டுபோலத் தோன்றின. வளமிகு வனப்பு - வளமுடைய தன்மை ஈரிடத்துக்கும் ஒக்கும்; காதுகள் மேலகன்று கீழே வடிந்து இயல்பாகிய அழகுடன் அணிகளையும் கொண்ட வடிவும், எரிபோன் மேனிப் பிரான்றிறம் எப்போதும் கேட்கும் தன்மையும் கொண்ட நிலை அவற்றின் வளமிகு வனப்பு. காமன் கொடி - மீனக்கொடிகள். இவை, மேலகன்று மீனங்களின் ஒளியுருவம் வானில் துவள நிற்பதனால் விண்மீன்கள்போல விளங்குதல் இவற்றின் வளமிகு வனப்பு. வடிந்த தாள் - காதுகள்பற்றிக் கூறும்போது வடிந்து தொங்கும் காதுத் தண்டு; இந்நிலை கொள்ளக் காதுகளை வளர்த்திக் குழை முதலிய அணிகளிடுதல் முன்னாளில் அழகென வழக்கில் நின்றது; இந்நாளில் அவ்வாறு காதுகளை வளர்த்தாது காதணிகளை மட்டில் வளர்த்தித் தொங்கவிடுதல் அணியெனக் கருதப்படுகின்றது; எவ்வாறாயினும் காதுகளோ, அணிகளோ காதுகளை ஒட்டி வடிந்த தாளுடைமை காணப்படுதல் இவ்வுவமையினை இன்றும் உண்மையில் விளங்குவதாம். கொடிகள்பற்றிக் கூறும்போது வடிந்த தாள் - கீழ்த் தாழ்ந்த கொடிக் கம்புகள். கிளரொளி மகரவேறு கெழுமிய தன்மை - காதுகளில் மகரம் போன்ற வடிவுடைய குண்டலங்கள் அணியப்படுதல். காமன் கொடியில் மகரம் - மீன் - உருவம் தீட்டப்படுதல்; கெழுமுதல் - மேல் விளங்குதல். வென்றிக் கொடி - முன்பாட்டில் "அருள்பெற உளனாங் காமன்" என்றதன் கீழ் உரைத்தவை பார்க்க. "வென்றிக் கொடி" (திருக்கோவை - 1); அளவில் சீர் - என்றதும் அக்கருத்து. நீறுபட்டுப் பின் அருளும் பெற்றபின் காமனது சீர் அளவுபட்ட சீராயிற்றென்க. என்னை? முன்னர்க் காமனது சீர் அளவுபடாது யாரிடத்தும் செல்லும் ஆணை என்று பிரமன் - மால் முதலிய தேவரும் நினைக்க இடந்தந்தது; நீறுபட்ட பின்னர்ச் சிவபிரானிடத்தன்றி ஏனைப் பசுவருக்கத்தாரளவு மட்டும் செல்லவுள்ளதென்று யாவரும் அறியும்படி அமைந்தது.
|
|
|