விற்பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது பொற்பமை வதன மாகும் பதுமநன் னிதியம் பூத்த நற்பெரும் பணில மென்னு நன்னிதி போன்று தோன்றி அற்பொலி கண்டர் தந்த வருட்கடை யாளங் காட்ட; | 1101 | (இ-ள்.) விற்பொலி......கழுத்து - ஒளி விளங்கிய முத்துக் கோவைகள் விளங்கிய கழுத்து; மீது .....பூத்த - அதன்மீது அழகமைந்த முகமாகும் பதும நன்னிதியத்தைத் தோற்றுவித்த; நற்பெரும்....போன்று - நல்ல பெரிய சங்கம் என்னும் நன்னிதியத்தினைப் போன்றுதோன்றி; அற்பொலி....காட்ட - இருள்போலும் கரியவிடம் விளங்கிய கண்டத்தையுடைய திரு நீலகண்டராகிய சிவபெருமான் தந்தருளிய பெருங்கருணைக்கு அடையாளத்தைக்காட்ட; (வி-ரை.) கழுத்து - பணிலமென்னு நன்னிதி போன்று தோன்றி - அருட்கடையாளம் காட்ட என்று கூட்டுக. கழுத்து - முத்துக் கோவைகளை அணிதலாலும் வடிவத்தாலும் வெள்ளிய குழைவுடைய சங்குபோல்வதனால் சங்க நன்னிதி போன்றதென்பது. பதும நன்னியம் பூத்த - சங்க நிதியாயின் வளம் எதனையேனும் தருமோ? எனின், ஆம் இங்குத் தன் மேலே முகம் என்னும் பதுமநன்னிதி ஒன்று பூத்து விளங்க நின்றது. கழுத்து - சங்கநிதி என்றும், வதனம் - பதுமநிதி என்றும் உருவகப்படுத்தப்பட்டன. பதும நன்னிதி - பணிலமென்னும் நன்னிதி - என்று ஈரிடத்தும் நன்னிதி என்றார். சிவனருளால் தரப்பட்டவை யாதலின், காமியங்களை உதவி உயிர்களைப் பிறவியிற் செலுத்திவிடும் அசுத்தத் தன்மையுடைய அப்பெயர்கொண்ட ஏனைத் தேவநிதிகள்போலன்று என்று குறித்தற்கு. நன்னிதி - பிறிதினியைபு நீக்கிய விசேடணம். ஏனைய அத்தேவருலக நிதிகள் திருவருளால் தூயமேனி கொண்டு உற்பவித்த பாவையாரின் முகம் - கழுத்து இவைகட்கு உவமிக்கப்படும் தகுதியுள்ளவையல்ல என்பது குறிப்பு. முன்னர்க் காமன் வென்றிக்கொடி - அருள்பெற உளனாங் காமன் - என்ற குறிப்புக்களும் கருதுக. தரளக் கோவை விளங்கிய - முத்துக் கோவைகளைக் கழுத்தில் வரிசை பெற அணிதல் முன்னாளில் பெருவழக்கு. பூத்த - தந்த; ஈன்ற; பதுமம் பூவாதலின் பூத்த என்பது மேலும் பொருந்துமாறு காண்க. பணிலம் - சங்கம். அல்பொலி கண்டர் - அல் - இருள்; அந்நிறமுடைய விடத்துக்காகி வந்தது. அருட்கு அடையாளம் - அருளினைக் காட்டும் அறிகுறி; இறைவரது திருவருள்கண்ணாற் காண முடியாமையின் இவ்வடையாளம் பற்றிக் கருதலளவையான் அறிய நின்றது என்க; இந் நன்னிதியங்கள் கண்டருடைய அருளானன்றி வேறு யாவராலும் தரவியலாமையின் என்பது. பூப்ப - அற்பெருங் - என்பனவும் பாடங்கள்.
|
|
|