பாடல் எண் :3002
காமவே ளென்னும் வேட னேந்தியிற் கரந்து கொங்கை
நேமியம் புட்க டம்மை யகப்பட நேரி தாய
தாமநீள் கண்ணி சேர்த்த கலாகைதூக் கியதே போலும்
வாமமே கலைசூழ் வல்லி மருங்கின்மே லுரோம வல்லி;
1104
(இ-ள்.)வாம மேகலை....உரோமவல்லி - அழகிய மேகலையணிந்த கொடிபோன்ற பூம்பாவையாரின் இடையினையடுத்த உந்தியினின்றும் தொடங்கி மேலே செல்லும் ரோம ஒழுங்கானது; காமவேள்...கரந்து - மன்மதன் என்னும் வேடன் உந்தியினுள்ளே மறைந்து இருந்து; கொங்கை...அகப்பட - மேலே உள்ள கொங்கைகள் என்னும் அழகிய சக்கரவாகப் பறவைகளை அகப்படுத்தற்கு; நேரிதாய்...போலும் -நேரான கயிற்றில் நீண்ட கண்ணிகளைக் கோத்ததோர் சலாகையை உயர்த்தியதேபோன்றிருக்க;
(வி-ரை.) உந்தியினின்றும் மேலே செல்லும் ரோம ரேகையானது காமன் உந்தியில் மறைந்து மேலே கொங்கை என்னும் நேமிப் புட்களை அகப்படுத்த தூக்கிய சலாகைபோலும் என்க.
காமன்....தூக்கியது - தற்குறிப்பேற்ற அணியினை உள்ளுறுத்து உருப்பற்றி எழுந்த உவமம்.
உந்தியிற் கரந்து - குழிப்பட இருத்தலின் மறைவிடமாகக் கூறப்பட்டது. கொங்கை - நேமியம் புட்கள் - உருவகம். நேமிப் புட்கள் - சக்கிரவாகப் பறவைகள்.
நேரிதாய தாமநீள் கண்ணி சேர்த்த சலாகை - நேரே மேலேசெல்லும் கயிறும் கண்ணியும் கூடிய அம்பு. கண்ணி - பறவைகளைப் பிடிக்கும் வலைபோலமைந்த அமைப்புடைய கயிற்றின் சுருக்கு. சலாகை - அம்பு.
உந்தியினின்றும் உரோம இரேகை மேனோக்கிக் கொங்கைகள் வரையும் செல்வதாம் என்பது. நேரிதாய - சலாகை என்க; சலாகை தூக்கியதே போலும் உரோம வல்லி என்று முடிக்க.
மருங்கு - இடை; இங்கு இடையின் இருத்தலாலும் உரோமரேகை அதனின்று மேலெழுதலானும் உந்தி என்று பொருள் கொள்ளப்பட்டது. உந்தியிற் கரந்து என்றதும் காண்க.