பாடல் எண் :3004
வரிமயி லனைய சாயன் மங்கைபொற் குறங்கின் மாமை
கரியிளம் பிடிக்கை வென்று கதலிமென் றண்டு காட்டத்
தெரிவுறு மவர்க்கு மென்மைச் செழுமுழந் தாளின் செவ்வி
புரிவுறு பொற்பந் தென்னப் பொலிந்தொளி விளங்கிப் பொங்க;
1106
(இ-ள்.) வரிமயில்.....மாமை - வரிகளையுடைய மயில்போன்ற சாயலையுடைய மங்கையாகிய பாவையாரின் பொன்போன்ற துடைகளின் அழகானது; கரி இளம்பிடிக்கை.....காட்ட - இளம் பெண்யானையினது துதிக்கையின் அழகினை வெற்றிகொண்டு வாழையின் மெல்லிய தண்டின் அழகினையும் எடுத்துக் காட்ட; தெரிவுறும்....செவ்வி - நோக்குவோர்க்கு மென்மையினை உடைய செழிய முழந்தாள்களின் அழகானது; புரிவுறு......பொங்க - கைத்திறமமைந்த பொன்னாலாகிய பந்துபோல விளங்கி ஒளி பொருந்திப் பொங்க;
(வி-ரை.) இப்பாட்டினால் துடைகள் - முழந்தாள்கள் என்ற இரண்டன் பொலிவும் கூறப்பட்டன. துடையின் அழகு இளம் பெண்யானையின் துதிக்கையினையும், வாழைத் தண்டினையும் போன்று விளங்கியது.
முழந்தாளின் அழகு பொற்பந்து போன்று விளங்கியது.
குறங்கு - துடை; மாமை - அழகு; நிறம் என்பாருமுண்டு. இங்கு யானைத் துதிக்கையும் வாழைத் தண்டும் நிறத்தாலன்றி வண்ணத்தாலும் மென்மையாலும் உவமிக்கப்படுதலால் மாமை - நிறம் என்றுரைத்தல் சாலாதென்க. "மணிமிடை பொன்னின் மாமை சாய" (நற் - 304) என்றதில் மாமை - அழகு என வருதல் காண்க.
பிடிக்கை - கதலித் தண்டு - துடையின் வடிவம் மேலே பெருத்து வரவரக் கீழே சிறுத்துவரும் நிலை குறிக்க இவ்வாறு கூறினார்.
காட்டுதல் - போன்றிருத்தல்; உவமவுருபு. பிடிக்கை - தண்டு - இவைகள் இவற்றின் தன்மை குறித்து நின்றன.
தெரிவுறுமவர் - பார்ப்பவர்; நோக்குவோர். புரிவு - கைப்பாடாகிய வேலை - திறம்; விருப்பம் ன்றலுமாம்.
வருமயில் - என்பதும் பாடம்.