பூவலர் நறுமென் கூந்தற் பொற்கொடி கணைக்கால் காமன் ஆவநா ழிகையே போலு மழகினின் மேன்மை யெய்த; மேவிய செம்பொற் றட்டின் வனப்பினை மீதிட் டென்றும் ஓவியர்க் கெழுத வொண்ணாப் பரட்டொளி யொளிர்வுற்றோங்க; | 1107 | (இ-ள்.) பூவலர்...கணைக்கால் - பூக்கள் அலர்தற்கிடமாகிய மணமுடைய மெல்லிய கூந்தலையுடைய பொற்கொடி போன்ற பாவையாரின் கணைக்கால்; காமன்...எய்த - மன்மதனது அம்பறாத் தூணியே போலும் அழகினாலே மேன்மை பொருந்த; மேவிய.....மீ திட்டு - பொருந்திய செம்பொன்னாலாகிய தராசுத் தட்டின் அழகை வென்று; என்றும்.....ஓங்கி - எக்காலத்தும் சித்திரம் தீட்டுவோர்களுக்கும் எழுத இயலாத பாடுகளின் ஒளி விளங்கி ஓங்க; (வி-ரை.) பொற்கொடி - பொன்னின் கொடிபோன்ற பாவையார். கணைக்கால் - காமனது ஆவநாழிகை போலவும், பரடு - செம்பொற்றகடு போலவும் விளங்கின என்பதாம். காமன் ஆவ நாழிகை - அருள்பெற உளனாங் காமன் (2995); "அனங்கன் வென்றிக் கொடி" (2998) என்ற கருத்துக்களை ஈண்டுங் கூட்டுக. ஆவ நாழிகை அம்பறாத்தூணி; அம்புப் புட்டில். பொற்றட்டு - பொன் தராசுத் தட்டு. பரடு - குதிக்கால். ஆவநாழிகையும் தகடும் உருவுபற்றிய உவமை. மீதிடுதல் - ஓங்குதல்; வென்றி கொள்ளுதல். ஓவியர்க் கெழுதவொண்ணா - ஓவியர் - சித்திரம் எழுதுவோர்; ஓவியர்க்கும் எனச் சிறப்பும்மை விரிக்க; அவயவ மிவையெழுத வரிதென்ற அகத்துறை (திருக்கோவை - 79) வழக்கும் காண்க; மக்களின் ஒப்புமை பெற ஓவியம் எழுதும் கலையும் சிற்பம் செதுக்குதலும் பண்டைக் காலந்தொட்டுத் தமிழ் மக்கள் சிறந்து கைதேர்ந்து ஆண்டுவந்த கலைஞானங்களாம். "ஓவியர்க் கெழுத வொண்ணா உருவத்தாய்" என இத்தொடரின் சுவை கருதி இவ்வாறே எடுத்துப் பெய்துகொண்ட கம்பன் பாட்டு இச்சொற்றொடரின் சொன்னயமும் பொருணயமும் காட்டி நிற்கின்றது. ஒளிர்வுறுதல் - விளங்குதல்; ஒளிர்தல். கருமென் - ஒளிவிட்டோங்க - என்பனவும் பாடங்கள்.
|
|
|