பாடல் எண் :3006
கற்பக மீன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப்
பொற்றிரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும்
நற்பதம் பொலிவு காட்ட; ஞாலமும் விசும்பு மெல்லாம்
அற்புத மெய்தத் தோன்றி யழகினுக் கணியாய் நின்றாள்.
1108
(இ-ள்.) கற்பகம்....போலும் - கற்பகமரம் தந்த சிவந்த அழகிய பவளத்தின் ஒளி வீசுகின்ற பொன்திரளுடன் வயிர வரிசைகளையுடைய பூங்கொத்துக்கள் மலர்ந்தன போலும்; பொலிவு - அழகினை; நற்பதம் காட்ட- நல்ல பாதம் காட்ட; ஞாலமெல்லாம்...தோன்றி - இந் நிலஉலகமும் விண்ணுலகமும் ஏனைய எல்லா உலகங்களும் அற்புதம் பொருந்தத் தோன்றி; அழகினுக்கு அணியாய் நின்றாள் - அழகுக் கழகுசெய்யும் பொருளாய் நின்றாள்;
(வி-ரை.) பதம், (கற்பகமீன்ற - பூந்துணர் - போலும் பொலிவு) காட்ட என்று கூட்டுக. கற்பகம்.....மலர்ந்த போலும் - கற்பக மரத்தின் பூங்கொத்துக்கள். அவை பவளவொளியும் வயிரப் பத்தி ஒளியும் பொருந்தியன; பாவையாரின் பாதங்கள் அத்தகைய பூந்துணர் போன்றன என்பதாம்; மெய்பற்றி வந்த உவமம்.
பவளம் (சோதி) - பொன் (திரள்) - வயிரம் (பத்தி) - கால்கள் சிவப்பும் பொன்மையும் நகங்களின் வெள்ளிய ஒழுங்கும் உடைமையின் இவ்வாறு கூறினார்.
ஞாலமும் விசும்பும் எல்லாம் - நடு - மேல் - கீழ் உலகிலுள்ளோர் எல்லாரும்; ஞாலம் - உலகிலுள்ளோர். எல்லாம் - ஞாலமும் விசும்புமொழிந்த கீழுலகம்; பாதல உலகு. அவற்றைப் பெயராற்றானும் கூறலாகாத மரபுபற்றி ஏனை யிரண்டினைமட்டுங்கூறி இதனை ஒழிப்பினாற் கூறினார். "மிசையுலகும் பிறவுலகு மேதினியே தனிவெல்ல" (1922) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. "ஞாலமே விண்ணே பிறவே", "வானே நிலனே பிறவே" (திருவா); பாவையார்பாற் பிழைத்த நாகலோகத்தின் பெயரைச் சொல்லாத குறிப்பும் காண்க.
தோன்றி - முன் (2993) "கன்னிதன்" என்ற பாட்டுமுதல் இதுவரை பதின் மூன்று பாட்டுக்களினும் தோன்ற - வாய்ப்ப - ஏர்ப்ப - முதலாக முடிபு கூறிவந்த வினையெச்சங்களை யெல்லாம் தோன்றி என்னும் இவ் வினையெச்சத்துடன் கூட்டி நின்றாள் என்ற வினைமுற்றுடன் முடித்துக்கொள்க.
அழகினுக் கணியாய் - ஏனை எப்பொருள்களையும் அழகுபடுத்தும் அழகு என்றதொரு குணமானது தான் அழகு பெறும்படியாக. நின்றாள் - குடமுடைந்து எழுவாய் - எழுந்தனள் போன்றாள் (2988) - அணியாய் நின்றாள் என்று இத்துணையும் ஒன்றுபடுத்தி யுரைத்துக்கொள்க.
இவற்றின் பிண்டப் பொழிப்பு :- பிள்ளையார் பதிக நிறைவாக்கின போது எலும்புஞ் சாம்பலு நிறைந்த குடத்தினின்றும் குடமுடைந்து தாமரைமலரினின்றும் எழுவாளைப் போன்று பூம்பாவையார் பன்னிரண்டாண்டளவு வளர்ச்சியுடன் எழுந்தனர். அவ்வாறு எழுந்தபோது, அவரது அழகுமுழுமையும் கண்களால் முற்ற ஒருங்கே காண இயலாமை முன்னுறக் கண்ட கண்ட அளவே அமைவதாயிற்று. குழலின் பாரம் முகத்தாமரையிற் சூழும் வண்டின் ஒழுங்குபோலத் தோன்றவும்; கண்கள் முகமதியின் வெண்ணிலா வெள்ளத்தில் நீண்ட கரிய செய்ய கயலிரண்டு உலாவுதல் போலத் தோன்றவும்; நாசியும் பவளவாயும் காமரூபி இந்திர கோபப்பூச்சியை வவ்வத் தாழும் நிலை போன்று தோன்றவும்; மகரக்குழை வடிந்த காதுகள் காமனது வென்றிக் கொடிகள்போலத் தோன்றவும்; முத்துவடம் சூழ்ந்த கழுத்தின்மீது முகத்தாமரை சிவனருளின் அடையாளமாகிப் பதுமநன்னிதி பூத்த சங்க நன்னிதிபோலத் தோன்றவும்; கைகள் மீது செங்காந்தள் தொடுத்த வெட்சிமாலையோ? அன்றி மேனியின் காந்தி வெள்ளம் இருபுறமும் வழிந்ததோ? என்று வடிவில் தோன்றவும்; கொங்கைகள் விடத்தை நீக்கப் பிள்ளையாரது திருநோக்கினால் அமுதம் நிறைத்து மூடிய அமுதகும்பங்கள் முகிழ்த்தனபோலத் தோன்றவும்; உந்தியினின்று மேற்செல்லும் உரோமரேகை காமனாகிய வேடன், உந்தியில் மறைந்து நின்று, கொங்கைகளாகிய நேமிப்புட்களை அகப்படுத்த நேரிதாய் நீண்ட கண்ணிகொண்ட சலாகை தூக்கியதுபோலத் தோன்றவும்; செம்பொன் அணிவளர் அல்குல் சேடன் படம் அல்குலாகி உருக்கொண்டு மணிகிளர் காஞ்சிசூழப் பணம் விரித்தடைதல்போலத் தோன்றவும்; துடைகள் இளம்பிடியின் கையும் வாழையின் தண்டும்போலவும், முழந்தாள் பொற்பந்து போலவும் தோன்றவும்; கணைக்கால் காமனது அம்புப் புட்டில்போலவும், பரடு பொற்றராசுத் தட்டுப்போலவும் தோன்றவும்; பாதங்கள் கற்பகத் தருவின் செவ்விய பொன்றிரண்ட வயிரநிரை பூத்த பூந்துணர்போல அழகுகாட்டவும் மூவுலகமும் அதிசயம் பொருந்த அழகுக்கழகாக எழுந்து நின்றாள் என்பதாம்.