எண்ணிலாண் டெய்தும் வேதாப் படைத்தவளெழிலின்வண்ணம் நண்ணுநான் முகத்தாற் கண்டா; னவளினு நல்லா டன்பாற் புண்ணியப் பதினா றாண்டு பேர்பெறும் புகலி வேந்தர் கண்ணுதல் கருணை வெள்ள மாயிர முகத்தாற் கண்டார். | 1109 | (இ-ள்.) எண்ணில் ஆண்டு....கண்டான் - அளவில்லாத ஆண்டுகளைத் தன் ஆயுளாகவுடைய பிரமதேவன் தான் படைத்த திலோத்தமை என்னும் பெண்ணினது அழகின் வண்ணங்களைத் தனக்குள்ள நான்கு முகங்களாற் கண்டு மகிழ்ந்தான்; அவளினும் நல்லாள் தன்பால் - அவளின் மேலாகிய நன்மைத்தன்மைகள் நன்கு நிரம்பிய பூம்பாவையாரிடமாக; புண்ணியப் பதினாறாண்டு....வேந்தர் - சிவபுண்ணிய விளைவாகிய பதினாறாண்டு அளவுபட்ட பெயரினைப் பெறும் சீகாழித் தலைவராகிய பிள்ளையார்; கண்ணுதல்...கண்டார் - நெற்றிக்கண்ணை யுடையவராகிய சிவபெருமானது கருணைப் பெருக்கினையே ஆயிரமுகங்களாற் காண்பாராயினர். (வி-ரை.) எண்ணில் ஆண்டு எய்தும் வேதா - பிரமதேவனுடைய ஆயுள் எல்லை மனிதவருட அளவால் கணக்கிட்டால் அளவுகடந்த வருடங்களாகும் என்பது; பின்னர்ப் பிள்ளையாரது உலக நிலையின் ஆண்டெல்லையினை மனித வருடத்தால் கணக்கிட்டுக் கூறுதலின், கால அளவுகோல் தூக்கி ஒப்பிடும் பொருளிரண்டனிலும் ஒன்றாக இருத்தல்வேண்டிப் பிரமன் ஆயுள் எல்லையினை மனிதவருடத்தால் அளந்தார். பிரமன் ஆயுளாவது :- மானிடவருடம் ஒன்று தேவர்களுக்கு இரவும் பகலும் கொண்டதொரு நாளாகும்; அந்நாள் முந்நூற்றறுபது கொண்டது தேவ வருடம். எனவே மனித வரும் முந்நூற்றறுபது கொண்டது தேவர்க் கொருவருடமாம். அவ்வாறு தேவ வருடம் 12000 கொண்டது தேவயுகம்; தேவயுகம் இரண்டாயிரம் பிரமனுக்கொருநாளாகும்; இவ்வகை நாட்கணக்கிட்டுச் செல்லும் 100 ஆண்டுகளைத் தன் ஆயுள் எல்லையாகவுடையது பிரமனது ஆயுட்காலம்; இதுபற்றி இவ்வாண்டுகளை மனிதவருடத்தா லளத்தல் எண்ணிறந்த நிலையாதலின் எண்ணிலாண் டெய்தும் வேதா என்றார்; இவ்வாறாகிய ஆயுட்காலம் நிறைவின்போது பிரமன் இறந்துபடும்; "பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போ, யிருங்கடன் மூடி யிறக்கும்" (தேவா - அரசு). புண்ணியப் பதினாறாண்டு பேர்பெறும் - பிரமனைக் கூறியதுபோல ஆண்டு எய்தும் என்னாது ஆண்டு பேர்பெறும் - என்றார். இறத்தலும் பிறத்தலும் இயல்பாயொழியும் வினைவயத்துளாராகிய பசுவர்க்கத் துட்பட்ட பிரமன் முதலியோர்போலன்றிப், பிள்ளையார் வினைவயத்த ரல்லராகித் திருவடிமறவாப் பான்மையோராய், உலகத்தில் தொண்டினைலை தர வந்தவராய்த், தம்பொருட்டன்றிப் பரசமய நிராகரித்தும் திருநீற்றினை ஆக்கியும் உலகத்தவரை உய்யக்கொள்ள அவதரித்தவராய் நின்ற சீவன் முத்த நிலையினராதலின் இறத்தல் பிறத்தல்களி னுட்படுவாரல்லர். அவர் திறத்துப் பதினாறாண்டு என்பது உலகவர் காணக் காட்டும் ஓர் கால அளவாதலன்றி ஆயுளை நாணாளும் மூப்புச் செய்து "நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும், வாளதுணரப் பெறின்" (குறள்) என்ற தன்மைகொண்ட காலக் கூறுபாடன்று. காலங்ம நியதி முதலிய தத்துவங்களையெல்லாங் கடந்த சிவானந்தப் பெருவாழ்வுடைய பெம்மான் எமது பிள்ளையாராதலின், பதினாறாண்டு என்பது பிரமன்பால் எண்ணிலாண்டு எய்தும் என்றாற்போல் அவரது ஆயுளை அளக்குநிலை பெற்ற அளவன்று; சுடர், உதயமுமீறு மடையும் அளவே நாள் எனப்படும். ஆயின் பிள்ளையார் கண்டு கொண்டிருக்கும் சிவ பரஞ்சுடருக்கு உதயமு மீறுமில்லை; ஆதலின் அந்த எல்லை அளவேபடும் ஆயுளும்; அது வளர்வதும் தேய்வதும் இல்லையாம். "மூப்பது மில்லை பிறப்பது மில்லை யிறப்பதில்லை" (நம்பிகள்) என்ற தன்மையே இவர் தன்மை. பதினாறாண்டு என்பது பெயர் மாத்திரையி னமைவதாம்; உண்மையினன்று என்பது ஆண்டு பேர்பெறும் என்ற குறிப்பு; திருமூலர் வரலாறு முதலியவையும் கருதுக. புண்ணியப் பதினாறாண்டு பேர்பெறும் - புண்ணியம் - ஈண்டுச் சிவபுண்ணிய விளைவாகிய சிவஞானானந்த வாழ்வு குறித்தது; பேர் பெறும் என்றது இனித் திருமண நிறைவுவரை உள்ள எல்லையும் அடங்க நிற்பதால் எதிர்காலத்தாற் கூறினார். புண்ணியம் - இப்பொருளில் வந்ததென்பது, இதுபோலவே பதினாறாண்டு பேர் பெறும் தலைவராகிய திருக்கண்ணப்ப தேவர் திறத்தில் "கலைவளர் திங்களே போல், எண்ணிரண் டாண்டின் செவ்வி யெய்தினா ரெல்லை யில்லாப், புண்ணியந் திரண்டு மேன்மேல் வளர்வதன் பொலிவு போல்வார்"(691) என்ற கருத்தினாலும் அறியப்படும். "பண்டுதிரு வடிமறவாப் பான்மையோர்"(1953) என்று பிள்ளையார் திறத்துக் கூறியதுபோலவே ஆண்டும் "முன்புசெய் தவத்தி னீட்ட முடிவிலா இன்பமான, அன்பினை யெடுத்துக் காட்ட"(751) என்றருளியதும், இவ்விரு பெருமக்களுக்குமன்றி நாயன்மாருக்குப் புண்ணிய ஆண்டெல்லை கூறாமையும் கருதத்தக்கன. புகலி வேந்தர் - புகலி - சீகாழியின் மூன்றாவது திருப்பெயர்; "புகலி காவலார்"(2981) என்று இவ்வரலாற்றில் தொடங்கிய நிலையினையே தொடர்ந்து முடித்துக் காட்டியவாறு கண்டுகொள்க; ஆண்டுரைத்தவை பார்க்க. கண்ணுதல் கருணைவெள்ளம் ஆயிரமுகத்தாற் கண்டார் - பிள்ளையார் பன்னிரண்டாண்டளவு வளர்ச்சி பெற்றெழுந்த பூம்பாவையாரையேனும் அவரது அணிநலங்களையேனும் கண்டாரிலர்; கண்ணுதலின் உருவு காணவியலாத கருணைவெள்ளத்தையே உருவாகக்கண்டனர். தமது ஒருமுகத்தானன்றி, அதன் இருகண்களானன்றி, ஆயிரமுகத்தாற் கண்டார்; "பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார்" என்ற தன்மையினராதலின். "நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே" என்ற கந்தரலங்காரமும் காண்க. முகம் - ஈண்டு "நான்முகத்தால்" என்றதனுடன் சொல்லொற்றுமை பெறினும் வாயில் என்ற பொருளில் வந்தது. ஆயிரம் - நான்முகன் என்புழிப்போல, எண்ணும் பொருளிலன்றி அளவிறந்த என்ற பொருளில் வந்தது. "ஆயிர ஞாயிறு போலு மாயிர நீண்முடி யானும், ஆயிரம் பொன்வரை போலு மாயிரந் தோளுடையானும், ஆயிரந் தாமரை போலுமாயிரஞ் சேவடி யானும், ஆயிரம் பேருடையானு மாரூ ரமர்ந்தவம் மானே"(அரசுகள்); "அடியா யிரந்தொழி லாயின வாயிர மாயிரம்பேர், முடியா யிரங்கண் கண்மூவா யிரமுற்று நீறணிந்த, தொடியா யிரங் கொண்ட தோளிரண் டாயிர மென்றுநெஞ்சே, படியா யிராப்பகற் றென்மரு தாளியைப் பற்றிக் கொண்டே"(திருவிடை - மும். கோவை - 27) என்பனவாதி திருவாக்குக்களிற் போலக் காண்க. வெள்ளம் என்றதும் இக்குறிப்புத் தருவது. ஆண்டு - நான்கு - (ஆயிரம்) - முகம் - என்பன மூன்றும் வேதாவின்பால் வேறு பொருளிலும், பிள்ளையார்பால் வேறுபொருளிலும் நின்றமை உய்த்துணர்ந்து கொள்க;பிரமன்பால் ஆண்டு - மனித வருடம்; நான்கு - எண்; முகம் - முகம். பிள்ளையார்பால் ஆண்டு - என்ற பெயர்மட்டில் அமைவது; ஆயிரம் - எண்ணிறந்தது; முகம்- வாயில். எழிலின் வெள்ளம் - கண்ணுதல் கருணைவெள்ளம் - ஈரிடத்திலும் வெள்ளம் - பெருக்கு - என்று வரினும் முன்னர்ப் பிரமன் கண்ட பெரு வெண்ணினது அழிவுறும் மாயாவிலாச அழகினையும், பின்னர்ப் பிள்ளையார் கண்ட பெண்ணின் அணிநலத்தின் மேல் வைத்து அதனையன்றி இறைவனது அழிவில்லாத, மாயைக்கு அதீதமாகிய, கருணைப் பெருக்கினையும் குறித்தது. கண்ணுதல்...கண்டார் - நியதி தத்துவத்துள் நின்று பாவையாரை முன்னர் மறக்கருணை செய்து அழித்தெரித்த அந்நிலையே, ஈண்டு அறக்கருணை செய்து முன்னர் நின்ற வளர்ச்சியுடன் மீள உற்பவிப்பித்தலால் ஈண்டுக் கண்ணுதல் என்ற பெயராற் கூறினார். நுதற்கண் காமனை எரித்தஆறே மீள உயிர்ப்பித்தருளியமை குறிப்பு. நெற்றிக் கண்ணின் கருணைத்திறம் பற்றி "நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே" (அரசுகள்); "வல்லிருளா யெல்லா, வுலகுடன்றான் மூடவிருளோடும்வகை நெற்றி யொற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர்" (நம்பி - கலய நல்லூர் - 4); "நெற்றியிற் றிகழ்ந்த வொன்றை நாட்டமும்....ஒள்ளிதின் விளங்க நாடக மாடுதி நம்ப" (கோயினான் - 12) முதலிய திருவாக்குக்கள் காண்க. கருணைவெள்ளங் கொண்ட நுதற்கண்ணினால் இறைவர் கண்டமையால் பிள்ளையார் கண்டார் என்பதும் குறிப்பு. "காண வுள்ளத்தைக் கண்டு காட்டலின்" (போதம் - 11). வேதாப் படைத்தவள் எழிலின்வண்ணம் நான்முகத்தாற் கண்டான் - பிரமன் ஒருகால் மிக்க அழகுடன் ஒரு பெண்ணைப் படைக்க எண்ணி அவ்வாறே திலோத்தமையைப் படைத்தான்; படைத்த பின் அவளழகினில் ஈடுபட்டுக் காமத்தின் மூழ்கி அவளைக் கண்டு தொடர, அவள் ஓடி மறைய, நான்கு முகத்தாலும் நான்கு திக்கினும் பார்த்தனன் என்பது பண்டைப் புராண வரலாறு; பெண் என்பது மாயை உருவம் என்றும் பாராது, தன்னாற் படைக்கப்பெற்றவள் தன் மகளாதலின் காமமூழ்கிப் பார்வை செய்தல் கூடாவொழுக்கமாம் என்றும் பாராது கண்டனன் எண்ணிலாண் டுற்ற தேவனாகிய பிரமன்; ஈண்டுப் பிள்ளையார் அவ்வாறன்றிப் பதினாறாண்டு பேர் பெறுபவர் கண்ணுதல் கருணைவெள்ளத்தையே கண்டார்; பிரமன் நான்முகத்தாற் கண்டான்; பிள்ளையார் ஆயிரமுகத்தாற் கண்டார் என்றிவ்வாறெல்லாம் பிள்ளையாரது பெருமையினைப் பலவாறும் உய்த்துணரவைத்த கவிநயம் காண்க; இறைவரது கருணைத் திறம் எத்தனை வகையானும் கண்டனுபவிக்கத்தக்க தென்பதுமாம்; இக்கருத்தையே பற்றிப் பின்னர் "மேவியஞா னத்தலைவர் விரிஞ்சன்முத லெவ்வுயிர்க்குங், காவலனார் பெருங்கருணை கைதந்த படியென்று" (3016) பன்முறையும் பணிந்தனர் என்றார். அவளினும் நல்லாள் - பூம்பாவையாரின் அணிநலங்கள் பிரமன் படைத்த திலோத்தமையின் நலங்களைவிட மேன்மையும் நன்மையும் கொண்டன என்பதாம். என்னை? இது சிவஞானச் சிருட்டியாதலான். நன்மை - சிவனருள் விளைவு.
|
|
|