மற்றவர் தமக்குவண் புகலி வாணர் "நீர் பெற்றபெண் விடத்தினால் வீந்த பின்னையான் கற்றைவார் சடையவர் கருணை காண்வர உற்பவிப் பித்தலா லுரைத கா"தென, | 1114 | (இ-ள்.) (பொழிப்பு) மற்று அவ்வாறுரைத்த வணிகரை நோக்கி வண்மை பொருந்திய சீகாழி வாழ்வுடையாராகிய பிள்ளையார் "நீர்பெற்ற பெண்விடத்தினால் இறந்துவிட்ட பின்னே, கற்றையாகிய நீண்ட சடையினையுடைய கபாலீசரது கருணை விளங்க மீள உற்பவிக்கச் செய்தமையினாலே நீர் சொல்லும் இவ்வுரை பொருந்தாது" என்று சொல்லியருள, (வி-ரை.) புகலி வாணர் - முன் புகலி வேந்தர் (3008), புகலி வேந்தர் (3007), புகலிகாவலர் (2981) என்ற கருத்தைத் தொடர்ந்து கூறினார். நீர் பெற்ற விடத்தினால் வீந்த பின்னை - "அடியனேன் பெற்ற பாவை" (3011) என்று சிவநேசர் கூறியதனை மறுத்துப் பிள்ளையார், நீர் பெற்று வளர்த்த பூம்பாவை அரவின் விடத்தினால் வீந்து இறந்துபட்டனள்; இங்குத் தோன்றி நிற்பவள் வேறு என்று எடுத்து விளக்கி உண்மை கூறியபடி. யான்.....உரை தகாது - உற்பவிப்பித்தல் - மீளத் தோன்றும்படி செய்வித்தல்; பிறவினையாற் கூறியது, இது தமது செயலன்றி இறைவரது செயலேயாம்; தாம் அவரது சிவஞான நிறைவுக்குள் ஒடுங்கிநின்று வேண்டிய அளவிலமைந்து துணையாவதன்றித் தமது செயல் பிறிதின்று என்றறிவித்தபடியாம். பரிவுறு பண்பினாற் பரவி" (2976) என்றது காண்க. கற்றைவார் சடையவர் கருணை காண்வா என்றது இக்கருத்தைப் புலப்படுத்துவதாம். "தம்மை மறந்து நின்னை நினைப்பவர்" என்றபடி சிவஞான நிறைவே தமதறிவாகப் பெற்று நிற்பவர் பிள்ளையாராதலின் பாவையார் குடமுடைந்த எழுந்து அழகினுக்கணியாய் நின்றது கண்டு கண்ணுதல் கருணைவெள்ளத்தினையே கண்டாரன்றித் தமது செயலையாவது பாவையாரது நிறைவினையாவது கண்டாரிலர்; ஆயின் ஈண்டு, "யான்....உற்பவிப்பித்தலால்" என்றது "திருமணம்புணர்ந் தருள்செய்யு" மெனச் சிவநேசர் உலகியல்நிலை பற்றி வேண்டிய விருப்பத்திற்கு அவ்வாறே உலகியல்நிலைபற்றி உரைத்தவாறாம். இவ்வாறே ஆளுடைய நம்பிகள் "கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே" (தேவா - குறிஞ்சி - புக்கொளியூர் அவிநாசி - 4) என்று விண்ணப்பித்து முதலையுண்ட மகனை முதலை வாயினின்றும் அழைத்துப் பிதாவின்கையிற் கொடுத்த நிலையும், அதுபற்றி "ஆவதென் முன்னா ணாவலர் பெருமான், பண்டொரு முதலை யுண்டமைந் தனைவர, வழைத்தன னென்றாய்; பிழைப்பில ததூஉம் தந்திட வேண்டு மென்றன ரன்றே" (சங். நிரா - சிவசமவாதி நிராகரணம்) என்று உமாபதி சிவாசாரியார் அருளிய விளக்கமும் ஈண்டுச் சிந்திக்கற்பாலன; "கதவந் திறப்பிம்மினே" என்ற அரசுகள் திருவாக்கும் ஈண்டுக் கருதத்தக்கது. உற்பவிப்பித்தலால் உரை தகாதென - உரை - மணம் புணர்ந்தருளும் என்ற உரை; தகாது - சொல்லத் தகாதது; உற்பவிப்பித்தலால் - என்றது உரை தகாதது என்பதற்குரிய காரணம்; உற்பவிப்பித்தலால் - பிறக்கச் செய்தலால் - பிதாவின் முறை ஆகவேண்டும். தான் பெற்ற மகளை மணம்புரிதல் தருமநூல் விரோதமாகிய கூடாவொழுக்கம்; தூர்த்தர் செயலாம்; ஆதலின் இவ்வுரை தகாதது என்பது. சபிண்டர் - சகோத்திரர் இவர்களுக்குள் மணம் விலக்கும் வேத ஒழுக்க நூல்களின் கருத்துமிதுவே; "வேதநூற் றுணிவினை" (3013) என்று மேல்வரும் பாட்டிற் கூறுவதும் காண்க. வேத நூல்களின் இக்கருத்தறியாத தூர்த்த மாக்கள் இந்நாளில் இவ்வொழுக்கத்திற்கு மாறாக ஒழுகுவதன்றி விதி செய்தலும் துணிந்துள்ளார். என்னே! காலக் கொடுமை! உரை தகாதென்றலால் எண்ணுதலும் தகாதென்பது பெறப்படும்; உற்பவிப்பித்தலால் உரை தகாதென்றமையால் மற்றக் காரணத்தால் இக்காரியம் எண்ணுதலும் தகாதென்றது குறிப்பாம். அக்காரணமாவன பிள்ளையார் திறத்தில் அவரை உலகநிலைபற்றி உழலும் ஏனை ஆன்மாக்களுள் ஒருவராகவைத் தெண்ணுதலும், மணஞ் செய்து வாழ்வு பெற உள்ள நிலையில் வீழ்தற்குரியார் என்று நினைத்தலும் முதலியன. பின்னர்ப் பிள்ளையாரது திருமணத்தின் வரலாற்றில் திருமணத்தைப் பிள்ளையார் இசையாது நிற்பதும், தாதையாரும் மறையோரும் வேண்டியவா றிசைந்து மணம் நிகழ்ந்தகாலையில் "இந்தவில் லொழுக்கம் வந்து சூழ்ந்ததே யிவடன் னோடும், அந்தமில் சிவன்றாள் சேர்வனென்னுமா தரவு பொங்க" என்று மணப் பந்தலிலேயே எண்ணியாங்குச் சிவன்றாள் சேரும் நிலையும் உன்னுக. காண்வருதல் - விளக்கமாக விளங்குதல்; கைவருதல் என்றலுமாம். உற்பவித்தீதலால் - உற்பவித்திடுதலால் - என்பவும் பாடங்கள்.
|
|
|