தெள்ளுநீ தியின்முறை கேட்ட சீர்க்கிளை வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப், பள்ளநீர்ச் செலவெனப் பரமர் கோயிலின் உள்ளெழுந் தருளினா ருடைய பிள்ளையார். | 1116 | (இ-ள்.) தெள்ளு நீதியின்முறை.....நீத்திட - தெளிந்த நீதிநூ லொழுக்கமுறைகளைக் கேட்ட சிறப்புடைய சுற்றத்தாராகிய பெருங் கூட்டமும் சிவநேசரும் தாம் விருப்பங்கொண்ட நிலையினை நீங்கிட; பள்ளநீர்ச் செலவென - (மேட்டு இடத்தினின்றும்) பள்ளத்திற் பாயும் நீரின் வேகம்போன்ற விரைவுடன்; பரமர்.....பிள்ளையார் - கோபுரப் புறவாய்தலினின்றும் இறைவரது திருக்கோயிலினுள்ளே ஆளுடைய பிள்ளையார் எழுந்தருளினார். (வி-ரை.) தெள்ளும் நீதியின் முறை - தெள்ளுதல் - தெளிதல்; பிள்ளையார் தெளிவித்த என்றும், மயங்கின அறிவைத் தெளியச் செய்த என்றும் உரைக்க நின்றது. சீர்க்கிளை வெள்ளம் - கிளை - சுற்றம்; ஒரு மரத்தின் கிளைபோலப் பொருந்துபவர். வெள்ளம் - மிகுதியுணர்த்திற்று. "சுற்ற நீடிய கிளையெலாம்" (2951); "கரையில் சுற்றமும்" (2957); "உறுபெருஞ் சுற்றமும்" (2960) என்றவை காண்க. சீர்க்கிளை - கிளையின் சிறப்பாவது வாழ்வினும் தாழ்வினும் மனம் ஒன்றுபட்டு அமைந்தொழுகுதல்; சிவநேசரது திறத்தில் அவர் மனக்கருத்தினையும் ஒழுக்கத்தினையும் தாம் கலந்து பிணக்கமின்றி ஒத்து ஒழுகினராதலின் ஈண்டுக் கிளை என்ற பெயராற் கூறினர்; ஒரு மரத்தின் கிளைகள் அம்மரத்தின் மூலம் தாம் வாழ்வுபெற்று அது தழைக்கத் தழைந்து, வாடத் தாமும் வாடிநிற்கும் தன்மைபோல என்பது; என்னை? இங்குக் குறித்த பொருள் பெண்ணை மணம் புரிவிக்கும் நிலைபற்றியதாதலின் அது கிளைஞர்க்குரிய செயலாய் நிற்றலால் அதனில் தாம் வேறு ஒன்றும் எண்ணாது சிவநேசரது திறமே ஒன்றி நிகழ்ந்தனர் என்பதாம்; வெள்ளம் - என்றார் அனேகராகிய அவருள் ஒருவரும் பிணக்கமின்றி நின்ற நிலை குறித்தற்கு. வேட்கை - பிள்ளையார்பால் பூம்பாவையாரை மணத்தினாற் சேர்வித்தலாகிய விருப்பம். நீத்திட - விட்டு நீங்கினராக அதன்பின்; அவர்களைத் தேற்றியருளிய பின். பள்ள நீர்ச் செலவென - மேட்டினின்றும் பள்ளத்திற் செல்லும், நீர் மிக்க வேகத்திற் செல்வதுபோல; வினைபற்றி எழுந்த உவமம். "பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மே லாகப் பதைத்துருகு மவர்" (திருவா - சதகம் - 21). இதுவரை கோபுரப் புறவாய்தலின் நின்ற பிள்ளையார் செய்தவை கற்றைவார் சடையவர் கருணை காண்வரச் செய்தவையே யாயினும் அவை உலகம்பற்றிய நிலையினவாதலின் மேட்டு நிலத்தின் நீர்போல நின்றன. இனிப் பரமர் கோயிலுள் சென்றருளுதல் இறைவரும் தாமுமேயாக உள்ள நிலைபற்றியனவாதலின் அவை பள்ளத்திற் செல்லும் நீர்போல ஆயின என்க. இதனால் பிள்ளையார் இவ்வுலகில் வாழ்ந்த காமெல்லாம் அவரது அருளிச் செயல்கள் உலகின்பாலும் இறைவர்பாலும் எவ்வெத் தன்மையில் நிகழ்ந்தன என்பது தெளியப்படும். உள்ளெழுந் தருளினார் - முன் வணங்கிப் போந்து இந்நிகழ்ச்சியின் பொருட்டு எலும்புக்குட மிருந்த புறவாய்தலின் வந்த பிள்ளையார் மீள உள்ளே சென்றருளினர்; இஃது அருள்பெற்று அதன்வழியே இந்நிகழ்ச்சியுட் புகுந்த பிள்ளையார் அதன் நிறைவின் பின் இறைவரை வணங்கி அவர் அருளைப் போற்றி விடைகொள்ளும் நிலையாம் என்க. திருவாலவாய் வரலாற்றிலும் இவ்வாறே சமணர் வாத நிகழ்ச்சியினுள் திருமடத்தினின்றும் திருவாலவா யிறைவரை வணங்கி அருட்குறிப்பாகிய திருவுள்ள மறிந்து அருள் பெற்றுப் போந்து, இறுதியில் சமண வாத நிறைவாகிய பின், வைகைக் கரையினின்றும் நேரே திருவாலவாயினுட் சென்றருளிப் போற்றி விடைகொண்டு போந்தருளிய செய்தியும் ஈண்டு நினைவு கூர்தற்பாலது (2635 - 2739-ம் 2759-2764-ம் பார்க்க). அங்கு அம்மையார் அமைச்சனார் செயல்கள் வாய்ப்பவும் அமண்பிணி நீங்கவும் மேற்கொண்ட நிலைபோலவே, இங்குச், "சித்த மின்புறு சிவநேசர் தஞ்செயல் வாய்ப்பவும், பொய்த்த வச்சமண் சாக்கியர் புறத்துறை யழியவும், வைத்த வப்பெருங் கருணை" நோக்காகிய நிலையினையே மேற்கொண்டமையும் காண்க.
|
|
|