தேவர்பிரா னமர்ந்தருளுந் திருக்கபா லீச்சரத்து மேவியஞா னத்தலைவர் விரிஞ்சன்முத லெவ்வுயிர்க்குங் காவலனார் பெருங்கருணை கைதந்த படிபோற்றிப் பாவலர்செந் தமிழ்பாடிப் பன்முறையும் பணிந்தெழுவார் | 1118 | (இ-ள்.) தேவர் பிரான்.....ஞானத் தலைவர் - தேவதேவராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கபலீச்சரத்தினுள் எழுந்தருளிய ஞானத் தலைவராகிய பிள்ளையார்; விரிஞ்சன்....போற்றி - பிரமதேவன் முதலிய எல்லாவுயிர்களுக்கும் காவலாளராகிய இறைவருடைய பெருங்கருணை கைகொடுத்தருளிய படியினைத் துதித்து; பாவலர்....பணிந்தெழுவார் - பாக்களாகிய மலர்ந்த செந்தமிழினைப் பாடிப் பலமுறையும் பணிந்தெழுவாராய், (வி-ரை.) தேவர்பிரான் - "தேவதேவனை (2975) என்ற திருப்பாட்டின் உட்கிடையினைத் தொடர்ந்து வழிபாடு நிறைவேறும் ஈண்டுக் கூறியபடியாம். மேவிய - உள்ளெழுந்தருளி மேவிய (3015). ஞானத் தலைவர் - "ஞானசம்பந்தர்" (2976) என்றும், "ஞானபோனகர்" (2987) என்றும் முன்கூறிய குறிப்புக்களைத் தொடர்ந்து ஈண்டு இப்பெயராற் றலைமை பற்றிக் கூறிய நிலையும் கண்டுகொள்க. விரிஞ்சன் முதல்....காவலனார் - தோற்றம் - நிலை - இறுதி செய்யும் கடவுளர்க்கும் அந்த முத்தொழிலுட்படும் உயிர்களுக்கும் தாமே முதல்வராய்க் காவல் புரிபவர் என்றது, ஈண்டை வரலாற்றில் பூம்பாவையார் முன்னர்த் தோன்றி நின் றழிக்கப்பட்டுப், பின்னரும் திருவருளாலே தோன்றிநின்ற தன்மைகட்கெல்லாம் தலைவராக நிற்கும் நிலையில் வைத்து இறைவரது முழுமுதற்றன்மை கண்டுகொள்வதன் பொருட்டாம். கைதந்தபடி - கைகொடுத்துத் தமது திருவுள்ளத்தை முற்றுவித்த படியினை. போற்றித் - தமிழ் பாடி - இப்பதிகம் கிடைத்திலது! முதலில் பாடிய பதிகமும் (2976) இறுதியிற் பாடிய இப்பதிகமும் ஒன்றுபோலவே மறைந்தமை இற்றைநாட் சைவவுலகின் தவக்குறைவாம். பன்முறையும் பணிந்தெழுவார் - வரலாற்றிற் புரிந்த பெருங்கருணையின் பொருட்டும், தலயாத்திரையிற் கலந்த தம் வழிபாட்டின் பொருட்டுமாகப் பன்முறையும் பணிந்தருளி. பணிந்தெழுவார் (3016) - அமர்ந்தருளு நாள் - இறைஞ்ச - அகல்வார் (3017) - விடைகொடுத்து - வணங்கிப் போய் - அணைவுற்றார் (3018) என்று இம்மூன்று பாட்டுக்களையும் முடித்துக்கொள்க. படியென்றும் - என்பதும் பாடம். |
|
|