மிக்குயர்ந்த கோபுரத்தை வணங்கிவியன் றிருமுன்றில் புக்கருளிக் கோயிலினைப் புடைவலங்கொண் டுள்ளணைந்து கொக்கிறகு மதிக்கொழுந்துங் குளிர்புனலு மொளிர்கின்ற செக்கர்நிகர் சடைமுடியார் சேவடியின் கீழ்த்தாழ்ந்தார். | 1122 | (இ-ள்.) மிக்குயர்ந்த...உள்ளணைந்து - மிகவும் உயர்ந்த கோபுரத்தைப் பணிந்து பெரிய திருமுன்றிலினுள்ளே புகுந்தருளிக் கோயிலின் பக்கத்தினைச் சூழ்ந்து வலமாக வந்து உள்ளே அணைந்து; கொக்கிறகும்...தாழ்ந்தார் - கொக்கிறகும் பிறைச்சந்திரனும் குளிர்ந்த கங்கையும் விளங்குகின்ற அந்திமாலையின் செக்கர் போன்ற சடையினையுடைய இறைவரது திருவடிகளின் கீழே விழுந்து வணங்கினார். (வி-ரை.) உயர்ந்த - முன் பாட்டிற் கூறிய அடைமொழிகளின் தொகுதியாகிய உயர்வு. உயர்வு - உருவினாலும் திருவினாலும் உள்ள மேம்பாடு. வியன் திருமுன்றில் - கோயிலினுள்ளே இருக்கும் இடமகன்ற திருமுற்றம். கொக்கிறகு....சடை முடியார் - கொக்கிறகு - இறைவர் உகந்து சூடும் இனமலர்; மதிக்கொழுந்து - பிறையின் வளர்ச்சி தொடங்குதலால் கொழுந்தென்றார்; குளிர்புனல் - கங்கைநீர்; செக்கர் - அந்திமாலையிற் காணும் செவ்வானம்; "மாலையின் றாங்குருவே போலுஞ் சடைக்கற்றை" (அற். அந் - 65).
|
|
|