பாடல் எண் :3026
"இருந்தவிடைச் சுரமேவு மிவர்வண்ண மென்னே!"யென்
றருந்தமிழின் றிப்பதிகத் தமிழ்மாலை கொடுபரவித்
திருந்துமனங் கரைந்துருகத் திருக்கடைக்காப் புச்சாத்திப்
பெருந் தனிவாழ் வினைப்பெற்றார் பேருலகின் பேறானார்.
1128
(இ-ள்) "இருந்த...என்னே?" என்று - "சாரல் விளங்கவிருந்த திருவிடைச் சரத்தில் மேவிய இப்பெருமானது வண்ணந்தான் என்ன அதிசயம்!" என்று; அருந்தமிழின்...சாத்தி - அருந் தமிழாலாகிய இனிய திருப்பதிகத் தமிழ்மாலையினாற் றுதித்துத் திருந்தும் மனம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புச் சாத்தியருளி; பெருந்தனி...பேறானார் - பெரிய ஒப்பற்ற சிவானந்தப் பெருவாழ்வினிற் றிளைத்து நின்றார் பெரிய உலகவரின் பேறாக வந்தவதரித்த பிள்ளையார்.
(வி-ரை) இருந்த - விளங்க இருந்த; திருவிடைச்சரம் எழில்திகழ் சாரலில் அணிபெற இருந்த அமைப்பு; பதிகம் பார்க்க.
இடைச்சுர மேவிய விவர்வண மென்னே! - பதிகத்தின் மகுடம். பதிகக் கருத்தும் குறிப்பும் எடுத்துக் காட்டியபடி.
அருந் தமிழ் - தமிழ் மாலை - தமிழ் - முன்னையது மொழியின் ஏற்றத்துக்கும் பின்னையது பொருளின் உயர்வுக்கும் வந்தன. (தமிழ்)இன் - இனிய. திருந்து மனம் - முன்னைத் தவத்தாற் றிருந்திய மனம்; சரிதைகள் பரவி நிற்றலால் திருந்தும் என்றலுமாம்.
திருந்துமனங் கரைந்துருகத் திருக்கடைக்காப்புச் சாத்தி - "அண்ணல் சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்" என்ற பதிகப் (11) பகுதியின் குறிப்புரைத்தவாறு. வண்ணங்கண் டதிசயித்து, "இவர் காடரங்காகக் கனலெரி யாடுவர்", "ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையார்" என்பனவாதியாக அவரது அடிநிழல் பரவி நின்றேத்து மன்புடை யடியவர்க் கெளியருமாகும் தன்மைகளை எல்லாம் அவ்வண்ணத்தினுள்ளே கண்டு கண்டு மனங் கரைந்துருகிப் பதிக நிறைவாக்கி யருளினர் என்பதாம்.
பெருந் தனிவாழ்வினைப் பெறுதலாவது அவ்வாறு வண்ணங் கண்டு சரிதைகள் பரவிநின்று மனங் கரைந்துருகப்பெற்ற நிலையில் சிவானந்தப் பெருவாழ்விலே திளைத்து அதுவே மயமாக நிற்றல்.
பேருலகின் பேறானார் - பிள்ளையார் தாம் எஞ்ஞான்றும் அவ்வாழ்விலே நிற்பவராயினும் இவ்வுலகின் வந்து இவ்வாறு பதிகள்தோறும் சென்று சென்று திளைத்துருகி நிற்றல் உலகத்தார் கண்டுய்யும் பேறாகும் என்பது; பேருலகு - இப்பேறு பெரும் நிலையில் வந்த உலகு.
கரைந்துருகி - திருப்பதிகத்தலர்மாலை - என்பனவும் பாடங்கள்.