ஏறணிந்த வெல்கொடியா ரினிதமர்ந்த பதிபிறவும் நீறணிந்த திருத்தொண்ட ரெதிர்கொள்ள நேர்ந்திறைஞ்சி வேறுபல நதிகானங் கடந்தருளி, விரிசடையில், ஆறணிந்தார் மகிழ்ந்ததிரு வரசிலியை வந்தடைந்தார். | 1134 | (இ-ள்) ஏறணிந்த...இறைஞ்சி - இடபத்தைப் பொறித்த வெற்றி பொருந்திய கொடியினையுடைய இறைவனார் இனிதாக எழுந்தருளிய பதிகள் பிறவற்றையும் திருநீறணிந்த திருத்தொண்டர்கள் அங்கங்கும் வந்து எதிர்கொள்ளச் சென்று வணங்கி; வேறு....கடந்தருளி - மற்றும் பல நதிகளையும் கானங்களையும் கடந்து சென்றருளி; விரிசடையில்...அடைந்தார் - விரித்த சடையில் கங்கையாற்றினை அணிந்த இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருவரசிலிப் பதியினை வந்தடைந்தருளினார். (வி-ரை) ஏறு - இடபக்குறி - இலச்சினை - உருவம். பதி பிற - இவை பெரும்பேறு, திருநற்குன்றம், உலகூர், உலகாபுரம், கந்தாடு, கிடங்கில், கிளியனூர், தேவனூர், திண்டீச்சுரம், பேராவூர், மரக்காணம், முன்னூர் முதலாயின என்பது கருதப்படும்; ஒவ்வொன்றிலும் பழைய கோயில்களும் கல்வெட்டுக்களும் உண்டு. அச்சிறுபாக்கத்தினின்றும் தென்மேற்கில் திண்டிவனம் (திண்டீச்சுரம்) கற்சாலை வழியாய் 17 நாழிகையளவில் அடையத்தக்கது. அங்குநின்றும் தென்கிழக்கில் புதுச்சேரி செல்லும் கற்சாலையில் 15 நாழிகையளவில் உள்ளது அரசிலி. இவ்வழியன்றித் திண்டிவனத்தினின்றும் கிழக்கில் பிரமதேசம் மரக்காணம் சென்று தெற்கில் திரும்பிப் புதுச்சேரி செல்லும் ஒரு கற்சாலை வழியுமுண்டு. இதன் வழியே திருநற்குன்றம், பெருமுக்கல் மலை, பேராவூர் என்றிவற்றை அடையலாம். பிள்ளையார் சென்ற வழி பின்கூறியது போலும் என்பது குருதப்படும். ஆயின் முன்கூறிய வழியாலும் இவற்றை அடைந்து செல்லலாம். தொண்டருடன் - என்றதும் பாடம். வேறு பல நதி கானம் கடந்தருளி - நதிகளும் கானங்களும் என்க. வேறு - என்பது இறைவர் விளங்கும் பதிகள் அமையாத என்ற குறிப்புப் பெற நின்றது. இவை வராக நதியின் கால்களும் பெருமுக்கல்மலைப் பிரதேசத்த்னின்றும் வரும் காட்டாறுகளும், காவேரி ஏரி - மரக்காணம் ஏரி இவற்றில் சேரும் சம்பந்தமுடையனவுமாகிய நதிகளும், அந்த மலைநிலப் பரப்பில் அமைந்த சிறு கானங்களுமாம். இந்த இரண்டு பாட்டுக்களும் ஒருமுடிபு கொண்டன.
|
|
|