வணங்கிமிக மனமகிழ்ந்து, மாலயனுந் தொழும்பூத கணங்கண்மிடை திருவாயில் பணிந்தெழுந்து, கண்களிப்ப அணங்குதனி கண்டருள வம்பலத்தே யாடுகின்ற குணங்கடந்த தனிக்கூத்தர் பெருங்கூத்துக் கும்பிடுவோர், | 1139 | (இ-ள்) வணங்கி....எழுந்து - (திருப்பேரம்பலத்தை) வணங்கி மனம் மிக மகிழ்ந்து மாலும் அயனும் தொழுகின்ற சிவ பூதகணங்கள் நெருங்கிய திருவணுக்கள் றிருவாயிலைப் பணிந்து எழுந்து; கண்களிப்ப - கண்கள் களிகூர; அணங்கு...ஆடுகின்ற - சிவகாமியம்மையார் தனியே கண்டருளும்படி திருவம்பலத்தில் ஆடல் புரிகின்ற; குணங்கடந்த.... கும்பிடுவார் - குணங்களைக் கடந்த மெய்ஞ்ஞான வெளியில் தனிக் கூத்தரது பெரிய திருக்கூத்தினைக் கும்பிடுவாராய்; (வி-ரை) மால் அயனும் தொழும் பூதகணங்கள் - பூதகணங்கள் பிரம விட்டுணுக்களாலும் தொழப்படும் தன்மை வாய்ந்தவைகள். தேவர்கள் பசு வர்க்கத்துட்பட்டுப் பிறவியில் வருவோர். சிவபூதகணங்கள் அவ்வாறன்றிச் சிவத்துவம் விளங்கப்பெற்ற முத்தான்மாக்கள்; அன்றியும் தம்மை வழிபடுவோர்களைச் சிவன்பால் வழிப்படுத்தி உய்யச் செய்யும் கருணையும் ஆற்றலும் உடையவர்கள்; இவர்களால் விடுக்கப்பட்டபோதன்றித் தேவர்கள் திருவாயிலிற் புகும் உரிமையிலர்; ஆதலின் இவர்களைத் தொழுது திருவாயிற்புறம் காத்திருக்கின்றனர் என்பதுமாம். திருமலைச் சிறப்பிலுரைத்தவை பார்க்க. அணங்கு கண்களிப்பக் கண்டருள என்க. அணங்கு - சிவகாமியம்மையார்; தனி - ஐயனது பெருங்கூத்தை அம்மையாரையன்றி ஏனை உயிர்வருக்கங்கள் எவையும் காணும் வலியிலர். ஆதலின் தாம் தனியே கண்டு அதன் பயனை உயிர்களுக்கு அருள்கின்றார். "பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென, நோயுண் மருந்து தாயுண்டாங்கு"(குமரகுருபரர்); ஊழியில் உலகங்கள் யாவையும் இறைவனுள் ஒடுங்கும்; அவை புனருற்பவமாதற் பொருட்டு இறைவர் ஆடுவர்; அக்கூத்தில் சத்தியைச் சங்கற்பித்து ஆடுதலால் சத்தி தோன்றும். அதன் பின்னே சத்தியினின்றும் ஏனைய எல்லாம் தோன்றுவதன்முன் சத்தி தனியே அக்கூத்தினைக் கண்டருளுவர்; அதன் பயனாகவே உலகம் தோன்றும் என்க. கண்களிப்பக் கும்பிடுவார் - என்று கூட்டியுரைத்தலுமொன்று. அம்பலம் - சிற்றம்பலம்; சிதாகாயம்; ஞானாகாயம். இது பேரம்பலத்தின் வேறாய்ப் பொன்னம்பலம் எனப்படும். குணங்கடந்த தனிக்கூத்தர் - குணங்கள் தோற்ற அவற்றினின்றும் உலக தத்துவங்கள் தோன்றும்; குணங்கள் உருப்பட்டுத் தோன்றும்நிலைக் கப்பாற்பட்டு இறைவரது கூத்து விளங்கும் என்க. "பூதமுங் கரணம் பொறிகளைம் புலனும் பொருந்திய குணங்களோர் மூன்றும், நாதமுங் கடந்த வெளியிலே"(பட்டினத்தார் - திருவிசைப்பா). பெருங்கூத்து - பயனாற் பெரியது; "யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு"ம் தன்மையதாதலின் பெருங்கூத்து; "தானாடத் தசையாடும்" என்பவாதலின் ஐயன் ஆட உலகெல்லாம் ஆடி யியங்குகின்றன. தனி கண்டருள - தனிக்கூத்தர் - பெருங்கூத்தர் - அடைமொழிகளின் சிறப்பினை உன்னுக. தனிக் கூத்தர் - தனி - தனக்குவமை யில்லாத; வேறெவரும் சிருட்டிப்படாது தாமே தனியாய் நின்ற நிலையின் கூத்து; "தானே தனிமன்றிற் றன்னந் தனிநித்தம்" (திருமூலர்). கும்பிடுவார் - கும்பிடுவாராகி; முற்றெச்சம். கும்பிடுவார் - மலர்ந்தெழுவார் - உள் அலைந்து - நிலையணைந்தார் என வரும் பாட்டுடன் முடிக்க.
|
|
|