பாடல் எண் :3038
தொண்டர்மனம் பிரியாத திருப்படியைத் தொழுதிறைஞ்சி
மண்டுபெருங் காதலினா னோக்கிமுக மலர்ந்தெழுவார்
அண்டமெலா நிறைந்தெழுந்த வானந்தத் துள்ளலைந்து
கண்டபே ரின்பத்தின் கரையில்லா நிலையணைந்தார்.
1140
(இ-ள்) தொண்டர் மனம்...தொழுது இறைஞ்சி - திருத்தொண்டர்களுடைய மனத்தினின்றும் பிரிதலில்லாது விளங்கும் திருக்களிற்றுப்படியினைத் தொழுது வணங்கி; மண்டு...மலர்ந்தெழுவார் - செறிவுடைய பெருங் காதலினாலே நோக்கி முகம் மலர்ச்சி பெற்று எழுவாராகிய பிள்ளையார்; அண்டமெலாம்...அலைந்து - அண்டங்களெங்கும் நிறைந்து எழுகின்ற சிவானந்தப் பெருக்கினுள்ளே அலைந்து; கண்ட... அணைந்தார் - அனுபவத்துட் கண்ட பேரின்பத்தினிற் கரையற்ற நிலையினை அணைந்தருளினர்.
(வி-ரை) தொண்டர் மனம் பிரியாத திருப்படி - திருக்களிற்றுப் படி. இஃது திருவைந்தெழுத்தின் உருவமாகியது; இதன் தலையில் இறைவர் விளங்குகின்றார். திருவைந்தெழுத்துத் தொண்டர்களால் எப்பொழுதும் இடையறாது தியானிக்கற்பாலது என்ற நிலையில் இத்திருப்படிகள் விளங்குவன. "செய்தவம் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான் றிருக்களிற் றுப்படி மருங்கு" (251); "தாழ்ந்தார் திருக்களிற்றுப் படிக்கீழ்" (2071).
நோக்கி - ஊன்றிய - அழுந்திய - பார்வை செய்து; "ஒன்றி யிருந்து நினைமின்கள்" (தேவா - அரசு).
அண்டமெலாம் நிறைந்தெழுந்த ஆனந்தம் - புவனகோடிகள் எல்லாவற்றினும் நிறைவாகிய சிவனது ஆனந்தமாகிய அருள் நிறைவு. "அண்டப் பரப்பெங்கு மண்டிப் பரந்தபே ரானந்த வெள்ளம் வாழ" (அமுதாம் - பிள்) என்று எமது மாதவச் சிவஞான முனிவர் இதனை உரை செய்தமை காண்க. இது சிதாகாய நிறைவு.
"அண்டங்க ளோரேழு மம்பொற் பதியாக" (திருமந் - 9 - 101) என்பது மதலியவை பார்க்க. ஆனந்தத்துள் அலைந்து - ஆனந்தமாகிய பெருவெள்ளத்தினுள் அகப்பட்டு அலைந்து; ஏகதேச உருவகம். அலைந்து - அலைதலால். சிவானந்த நிறைவிலே தாம் ஒன்றுபட்டுத் தம்மை வேறு காணாராய் அதுவேயாகி நின்றமையால் என்க.
கண்ட பேரின்பத்தின் கரையில்லா நிலை - கண்ட - அனுபவத்திற் கண்ட; "அதிசயம் கண்டாமே"; "அந்தமிலா வானந்தம் அணிகொடில்லை கண்டேனே" முதலிய திருவாசகத் திருவாக்குக்கள் காண்க. கரையில்லா நிலை - எல்லை காண முடியாத; இன்னபடி என்று அளக்கலாகாத. "அகத்துக் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்,....சுகத்தைச் சொல்லெனிற் சொல்லுமா றெங்ஙனே" (திருமந்திரம்); இந்நிலைகள் முன் (2057 - 2062) உரைக்கப்பட்டமை காண்க. ஆளுடைய பிள்ளையார் தில்லையில் திருநடங் கும்பிட்ட மூன்றாவது முறை இது. முதன் முறையில் திருவம்பலத்தின் இயல்பும், அவர் தரிசித்த ஆநந்த ஒருபெருந் தனிக்கூத்தி னியல்பும், அதனை அவர் கண்டு கும்பிட்டவாறும் விளக்கியருளிய ஆசிரியர், அவ்வானந்த நடனதரிசனத்தை முடிந்த பயனாய் முடித்துக் காட்டிய திறம் கண்டு களிக்கற்பாலது.