திருந்தியசீர்த் தாதையார் சிவபாத விருதயரும் பொருந்துதிரு வளர்புகலிப் பூசுரரு மாதவரும் "பெருந்திருமா லயன்போற்றும் பெரும்பற்றப் புலியூரில் இருந்தமிழா காரணைந்தா"ரெனக்கேட்டு வந்தணைந்தார். | 1142 | (இ-ள்) திருந்தியசீர்...மாதவரும் - உலகம் திருந்துதற்குக் காரணமாகிய சிறப்பினையுடைய தாதையாராகிய சிவபாதவிருதயரும், பொருந்தும் சைவத்திரு வளர்தற்கிடமாகிய சீகாழியின்கண் வாழும் மறையவர்களும் சிவனடியார்களும்; "பெருந்திரு...அணைந்தார்" எனக் கேட்டு - "பெரிய திருவினையுடைய திருமாலும் பிரமதேவனும் போற்றுகின்ற பெரும்பற்றப்புலியூரின்கண்ணே பெரிய தமிழாகரராகிய பிள்ளையார் வந்தணைந்தார்" என்று கேட்டு; வந்தணைந்தார் - தாம் அங்கு வந்து சார்ந்தனர். (வி-ரை) திருந்திய சீர் - திருந்திய - உலகம் திருந்திய என்க. உலகம் திருந்துதலாவது பரசமயங்கள் ஆக்கிரமித்து மேலெழுந்து கேடு செய்யாது நிராகரிக்கப்பட்டு அவ்வவற்றின் நிலையில் அமைந்து நிற்றலும், சைவம் ஓங்கித் திருநீற்றினொளி விளங்கி உண்மை நிலையில் நிற்றலுமாம்; சிவபாதவிருதயர் மனையறத்தி லின்பமுறுதல் ஒன்றும், பரசமய நிராகரித்து நீறு ஆக்குதலால் உலகம் திருந்துதல் ஒன்றுமாக இரண்டு பயன்களைக் குறித்து மகவு வேண்டித் தலம் செய்தனர்; அவ்வாறே பிள்ளையாரை மகவாகப் பெற்றனர். மகப் பெற்றமையினாலே "தாதையார்" எனப் பெற்றனர். "ஈறில் பெருந்தவ முன்செய்து 'தாதை' யெனப்பெற்றார்" (1983); இவ்விரண்டனுள் உலகந் திருந்துதலாகிய பெரும் பயனையே முற்பட நினைந்தனர் என்பது "மனையறத்தி லின்பமுறு மகப்பெறுவான் விரும்புவார், அனையநிலை தலைநின்றே...முன் பரசமய நிராகரித்து நீறாக்கும், - காதலனை"(1917) என்றதனா லறியலாம்; ஈண்டுப் பிள்ளையாரது, பாண்டிநாடு தொண்டைநாட்டு யாத்திரைகளின் நிறைவினோடு அப்பெரும்பயனும் நிறைவெய்தி உலகமும் தமிழ்நாடு முழுமையும் திருத்தமுற்று விளங்கின; இனிப் பிள்ளையாரது திருமணமும் இறைவன் றிருவடியிற் புக்கொன்றி யுடனாதலுமே எஞ்சி நிற்பன. இவையே இனித் தாதையாருக்குப் பிள்ளையார் மனையறத்திலின்பமுறு மகவு எனப்பெற்ற நிலையில் செய்ய நிற்பன; ஆதலின் இக்கருத்துக்களை யெல்லாம் உள்ளடக்கியே, வாளா கூறாது, திருந்திய சீர் என்றும், தாதையார் என்றும் அடைமொழிகள் தந்து கூறியருளிய நயம் காண்க. புகலிப் பூசுரரும் என ஏனையோரை வேறுபிரித்துப் பின்வைத்ததும் இக்குறிப்பு. பொருந்து திருவளர் புகலி - பொருந்து திரு - சைவ மெய்த்திரு; வளர் - வளர்தற்கேதுவாய் நிற்கும். திருவளர் - பூசரர் - என்றும், வளர் மாதவரும் - என்றும் கூட்டியுரைக்கவும் நின்றது. பொருந்து திரு - என்றார் ஏனைத் திருவெல்லாம் பொருந்தாதொழிவன என்றுணர்த்துற்கு. பொருந்து திருவளர் என்றது, இனி, இவர்கள் எல்லாரும் பிள்ளையாரது திருமணத்தில் இறைவனடி பொருந்தும் திருவினை யெய்தும் நிலைக்குரிய தன்மைகளை வளர்க்கும் என்ற குறிப்பும் தந்துநிற்றல் காண்க. மாதவர் - சிவனடியார்கள். சிவபூசையே தவம் எனப்படும். மாதவமாவது சைவத்தின் நால்வகை நெறிகளிலும் சிறந்து உறைப்புடன் ஒழுகுதல். "ஆறுவகைச் சமயத்தி லருந்தவரும்" (3150) "அறுவகை விளங்குஞ் சைவத் தளவிலா விரதஞ்சாரு, நெறிவழி நின்ற வேட நீடிய தவத்தி னுள்ளோர்" (3101) என்பவை முதலியன காண்க. சிறப்புப்பற்றி "மாதவர்" பின்வைத் தோதப்பெற்றனர். பெருந்திருமா லயன் போற்றும் - "வரங்கிடந் தான்றில்லை யம்பல முன்றிலம் மாயவனே"(திருக்கோவையார்). பெரும்பற்றப் புலியூர் - முனிவர் - தேவர் முதலிய எல்லாருக்கும் பெரும்பற்றாக உள்ள ஊர் என்பது; "பற்றா நின்றாரைப் பற்றா பாவமே" (பிள்ளையார்). தமிழாகரர் - ஆகரம் - இடம். கேட்டு வந்தணைந்தார் - தொண்டை நாடு சென்று வணங்கித் திரும்பியருளித் தில்லையில் எய்திய பிள்ளையார், சீகாழியில் அணிமையில் எழுந்தருள்வார் என்பது தெரிந்தாரேனும், அதுவரையும் பிள்ளையாரைக் காணாது தரிக்கலாற்றாது எதிர்கொண்டு போந்தனர் என்க. இவர்களது, பிள்ளையாரைப் பிரியலாற்றாத நிலை முன்னர்த் திருவீழிமிழலையிற் சென்று கண்டு அவரைச் சீகாழிக்கு வரும்படி வேண்டியமையாலும், தாதையார் பிள்ளையாரைக் காணத் திருவாலவாயினிற் சென்றமையாலும் அறியப்படும். தாமும் திருத்தில்லை சென்று வணங்கிப் பிள்ளையாருடன் அம்பலக்கூத்தரை வணங்கும் (3041 பார்க்க) ஆசையும் துணை செய்ததென்க. "கோவே யுன்றன்கூத்துக் காணக் கூடுவ தென்றுகொலோ" (1) ; "அத்தா வுன்ற னாடல் காண வணைவது மென்று கொலோ" (3) (கண்டராதித்தர் - கோயில்); "எம்மிறையை யென்றுகொல் காண்பதுவே" (திருவாலியமுதனார்); "அப்பா காண வாசைப் பட்டேன் கண்டா யம்மானே" (திருவா) என்பன முதலிய திருவாக்குக்கள் உண்மையடியார்களின் உண்மை நிலையை விளக்குதல் காண்க.
|
|
|