பாடல் எண் :3043
நற்றவர்தங் குழாத்தோடு நம்பர்திரு நடஞ்செய்யும்
பொற்பதியின் றிருவெல்லை பணிந்தருளிப் புறம்போந்து
பெற்றமுயர்த் தவரமர்ந்த பிறபதியும் புக்கிறைஞ்சிக்
கற்றவர்கள் பரவுதிருக் கழுமலமே சென்றடைவார்,
1145
(இ-ள்) நற்றவர்தம்...புறம்போந்து - நல்ல தவமுடைய அடியார் .கூட்டத்துடனே கூடி, இறைவர் திருநடனம் செய்தருளுகின்ற அந்த அழகிய பதியன் திருவெல்லையினைப் பணிந்தருளிப் புறத்திற் போய்; பெற்றம்...இறைஞ்சி - விடைக் கொடியினை உயர்த்திப் பிடித்த இறைவர் விரும்பி எழுந்தருளிய பிற பதிகளையும் சென்று வணங்கி; கற்றவர்கள்... அடைவார் - கற்ற பெரியோர்கள் துதிக்கின்ற சீகாழிப் பதியினையே சென்று சேர்வாராகி;
(வி-ரை) நற்றவர் - திருத்தொண்டர்கள்.
திருவெல்லை - தென்புறத்துக் திருவெல்லை. இது கொள்ளிடத் திருநதி வடகரையின் வடக்கிலுள்ளது (256 - 2044 - 2045 பார்க்க).
பிற பதி - இவை திருத்தில்லைக்கும் சீகாழிக்கும் இடையில் உள்ளவை; 2043 பார்க்க. திருநாவுக்கரசர்பிரான் தில்லையினின்றும் சீகாழியை நோக்கிச் சென்றருள்பவர் திருநாரையூர் பணிந்து சென்று வழிக்கொண்டு சென்றமை முன் (1444) கூறப்பட்டது காண்க. திருநாரையூர் சென்று வராது நேரே தில்லையினின்றும் சீகாழிக் கெழுந்தருளுவதாயின் இடையில் திருமயேந்திரப்பள்ளி, திருநல்லூர்ப் பெருமணம், திருக்குருகாவூர் முதலாயின என்பது கருதப்படும்.
கற்றவர்கள் பரவும் திருக்கழுமலமே - "கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து ளீசன்" (பிள் - மேகரா - 11); ஏகாரம் தேற்றம்.
புறம்போந்து - திருவெல்லையினைக் கடந்து அப்புறம் மேற்சென்றருளி; தில்லைப்பதியின் புறம்.