பாடல் எண் :3048
முன்னிறைஞ்சித் திருவருளின் முழுநோக்கம் பெற்றேறிப்
பொன்னிமயப் பாவையுடன் புணர்ந்திருந்த புராதனரைச்
பொன்னிமிசைக் குவித்தகரங் கொடுவிழுந்து திளைத்தெழுந்து
மன்னுபெரு வாழ்வெய்தி மனங்களிப்ப வணங்குவார்;
1150
(இ-ள்) முன்னிறைஞ்சி....ஏறி - திருக்கோயிலினுள் பிரமபுரீசர் திருமுன்பு வணங்கி அவரது திருவருளின் முழுநோக்கமும் பெற்றுத் திருத்தோணியாகிய மலையின்மேல் ஏறிச் சென்று; பொன்னிமயப் பாவையுடன்...புராதனரை - பொன் மலையென்னும் இமயமலை யரசனுடைய மகளாராம் பெரியநாயகியாருடன் கூடி எழுந்தருளியிருந்த பழமையாராகிய தோணியப்பரை; சென்னிமிசை...எழுந்து - தலையின்மேலே கூப்பிய கைகளோடு நிலமுற விழுந்து திளைத்து எழுந்து; மன்னுபெரு....வணங்குவார் - நிலைபெற்ற பெருவாழ்வினை யடைந்து மனமகிழ வணங்குவாராகிய பிள்ளையார்;
(வி-ரை) முன் இறைஞ்சி - பெருங்கோயிலின் முன்னர்ப் பிரமபுரீசர் திருமுன்பு வீழ்ந்து வணங்கி. திருவருளின் முழுநோக்கம் - பிரமபுரீசரின் முழுமையாகிய அருணோக்கமும்.
ஏறி - மேற்சென்று திருமலை என்னும் திருத்தோணியின் மேல் ஏறிச் சென்று; இதற்கு இவ்வாறன்றி அதனாலாய ஆனந்த வாழ்வின் மேம்பட்டு என்றுரைத்தனர் முன்னுரைகாரர்.
பொன் இமயப் பாவை - பார்வதி; இங்குப் பெரியநாயகி யம்மையாரைக் குறித்தது; இமயத்தின் ஓர் பகுதியைப் பொன்மலை என்று வழங்குதல் மரபு.
புராதனர் - மிகப் பழமையானவர்; "எறிமழு வோடிள மான்கை யின்றி யிருந்தபிரான்"(தேவா) என்ற குறிப்பின்படி மானும் மழுவும் சேர்வதன் முன் காலத்திலேயே இங்கு வெளிப்பட்டருளியவர். பன்னீரூழியின் முன்னர் விளங்குபவர், என்ற தன்மைகள் எல்லாம் நினைவுகூர்க.
திளைத்து - ஆனந்தத்தில் அழுந்தி. வணங்குவார் - வினையாலணையும் பெயர்.
பெருவாழ்வு - சிவபெருமானை வணங்கிச் சிவமயமேயாகிய ஆனந்தத்தில் அழுந்தி நிற்றலே பெருவாழ்வு என்பது உண்மைநூற் றுணிபு.
வணங்குவார் - பாடி என மேற்பாட்டுடன் கூட்டி முடிக்க.