பாடல் எண் :3051
காழிநா டுடையபிரான் கழல்வணங்கி மகிழ்வெய்த
ஆழியினு மிகப்பெருகு மாசையுடன் றிருமுருகர்
வாழிதிரு நீலநக்கர் முதற்றொண்டர் மற்றெனையோர்
சூழுநெடுஞ் சுற்றமுடன் றோணிபுரந் தொழுதணைந்தார்.
1153
(இ-ள்) காழிநாடு....மகிழ்வெய்த - காழி நாட்டின் தலைவராகிய பிள்ளையாரது திருவடிகளை வணங்கி மகிழ்வடையக் கருதி; ஆழியினும்...ஆசையுடன் - கடலினும் மிகவும் பெருகுகின்ற ஆசையுடனே; திருமுருகர்...தொழுதணைந்தார் - திருமுருக நாயனார் வாழ்வு தரும் திருநீலநக்க நாயனார் முதலாகிய தொண்டர்களும் மற்றும் ஏனையோர்களும் தம்மைச் சூழ்ந்த நீண்ட சுற்றத்தாருடனே போந்து திருத்தோணிபுரத்தினைத் தொழுது பிள்ளையார்பால் வந்தணைந்தார்கள்.
(வி-ரை) கழல் வணங்கி மகிழ்வெய்த - கழல் வணங்கப்பெறுதலே மகிழ்ச்சிக்கு ஏதுவாம் என்பது. ஆழியினும் மிகப் பெருகும் ஆசை - கடலினும் பெரியதாய் வளரும் ஆசை என்றது இனைத்தென்று அளக்கலாகாத தன்மை குறித்துப் பண்புபற்றி வந்த உவமம். "பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கின், நன்மை கடலிற் பெரிது"(குறள்) என்றபடி பிள்ளையார் உலகுக்குச் செய்யும் பரசமய நிராகரிப்பும் திருநீற்றி னாக்கமுமாகிய உதவிகள் பயன்றூக்காது செய்தமையின் அவற்றின் நன்மை கடலினும் பெரிதாம்; அதுபற்றி அவர் கழல் வணங்கி மகிழ அடியார் அவர்பாற் கொண்ட ஆசையும் கடலினும் பெரிதாயிற்று என்க.
திருமுருகர், வாழி திருநீலநக்கர், முதற்றொண்டர் - அறுபான்மும்மை மெய்யடியார்களுள் வருதலால் இவர்கள் முதன்மையாக எடுத்துரைக்கப் பெற்றார்கள். வாழி - பிள்ளையாரது திருமணச் சடங்குகள் செய்து வாழ்த்தப் பெறும் வாழ்வு குறிக்கப்பட்டது; 3137 பார்க்க.
சூழு நெடுஞ் சுற்றமுடன் - இவர்களும் பிள்ளையார் திருமணத்துடன் சேவித்து முன் செல்லும் சிறப்புப் பெறுபவர்கள்; பார்நிலவு கிளைசூழ" (3148).
தோணிபுரம் தொழுது - தோணிபுரத்தினையும் தோணிபுரேசரையும் முதலில் தொழுது பின்னர்ப் பிள்ளையார்பால் அணைந்தனர். இஃது அடியார் மரபு. முன் 2774, 2775-லும், பிறாண்டும் உரைத்தவை பார்க்க.
ஆழியினும் மிகப்பெருகும் ஆசையுடன் - எல்லையில்லாது பொங்கித் ததும்பும் சிவானந்த விளைவாகிய சிவபோகத்துட் புகும் நிலை அணித்தாகும் முற்குறிப்புப் பெற மிக்க ஆசையும் பெறுகிற்று என்றலுமாம். முன் "பேரின்பம்" (3050) என்றதும் காண்க.
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.